மின்னணு தேசிய வேளாண் சந்தை நடைமுறை ஒன்றிய, மாநில அரசு குழு ஆய்வு சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில்

சேத்துப்பட்டு, ஜூன் 2: சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் ஒன்றிய, மாநில அரசு ஆய்வு குழு மின்னணு வேளாண் சந்தை நடைமுறை குறித்து ஆய்வு செய்தது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டி நெல் கொள்முதல் செய்வதில் தமிழகத்தில் இரண்டாவது இடத்திலும் மாவட்டத்தில் முதலிடத்திலும் திகழ்ந்து வருகிறது. இங்கு விவசாயிகளின் விளைப்பொருட்களான நெல், மணிலா, கேழ்வரகு, மிளகாய், நவதானியங்கள் ஆகிய பொருட்களுக்கு வியாபாரிகளிடம் நல்ல விலை கிடைப்பதால் திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதியில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய வருகின்றனர்.

இந்த மார்க்கெட் கமிட்டியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மத்திய, மாநில அரசு சார்பில் விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் விளை பொருட்களுக்கு இணையதளம் மூலம் விலை நிர்ணயிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய பணம் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். மின்னணு வேளாண் சந்தையின் நிலவரங்கள் அனைத்தும் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இணையதளம் மூலம் பல வலைதளங்களைக் கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
இந்நிலையில், மத்திய மாநில அரசு குழுவை சேர்ந்த மத்திய அரசு கூடுதல் பொருளாதார ஆலோசகர் கவியரசு, மார்க்கெட்டிங் இன்ஸ்பெக்டர் கோவிந்தன், வேளாண் இணை இயக்குனர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஜெயக்குமார், திருவண்ணாமலை மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடசெயலாளர் சந்திரசேகர், சேத்துப்பட்டு சூப்பிரண்டு தினேஷ் ஆகியோர் சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் உள்ள நெல் மூட்டைகளை நேரடியாக ஆய்வு செய்து நெல்லின் தரம் ஈரத்தன்மை குறித்து கேட்டறிந்தனர்.

மேலும் எடையாளர்கள் பை மாற்றும் தொழிலாளர்கள், வியாபாரிகள் ஆகியோரிடம் தற்போது செயல் முறையில் உள்ள மின்னணு வேளாண் விற்பனை சந்தை நிலவரம் எப்படி உள்ளது என்பதை கேட்டு அறிந்தனர். தற்போது அக்மார்க் நெட் இணையதளம் மூலமாக விலை விவரம் பதிவு செய்து, அதை ஒரே நேரத்தில் பல வலைதளம் ஒன்றாக இணைத்து ஒரே பதிவாக ஒன்றிய, மாநில அரசுகள் பார்வைக்கு கொண்டு செல்வது குறித்து எடுத்துரைத்தனர்.
விவசாயிகளிடமும் இணையதளம் மூலம் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் பண பரிவர்த்தனை குறித்தும் கேட்டறிந்தனர். இந்த ஆய்வானது தமிழகத்தில் 5 இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. அதில், திருவண்ணாமலை மாவட்டத்தை பொறுத்தவரை சேத்துப்பட்டு, போளூர் மார்க்கெட் கமிட்டியில் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post மின்னணு தேசிய வேளாண் சந்தை நடைமுறை ஒன்றிய, மாநில அரசு குழு ஆய்வு சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் appeared first on Dinakaran.

Related Stories: