பலாத்காரம் செய்யப்பட்ட பணிப்பெண் கடத்தல் வழக்கு ரேவண்ணா மனைவி தலைமறைவு: விசாரணைக்கு சென்ற அதிகாரிகள் ஏமாற்றம்

பெங்களூரு: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பணிப்பெண் கடத்தப்பட்ட வழக்கில் ரேவண்ணாவின் மனைவியும், பிரஜ்வலின் தாயாருமான பவானி தலைமறைவாகி விட்டார். எஸ்.ஐ.டி அதிகாரிகள் வீட்டிற்கு சென்றபோது அவர் வீட்டில் இல்லை. மாலை 5 மணி வரை காத்திருந்துவிட்டு ஏமாற்றத்துடன் அதிகாரிகள் திரும்பினர். கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் எஸ்.ஐ.டி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணாவால் பலாத்காரம் செய்யப்பட்ட அவர் வீட்டு பணிப்பெண் கடத்தப்பட்ட விவகாரத்தில், பிரஜ்வல், அவரது தந்தை ரேவண்ணா மற்றும் தாய் பவானி ரேவண்ணா ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கடந்த மே 3ம் தேதி கைதான ரேவண்ணா பின்னர் ஜாமீனில் வெளிவந்தார். பிரஜ்வல் வெளிநாட்டில் இருந்த நிலையில், இப்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

பெண் கடத்தப்பட்ட வழக்கில் பவானி ரேவண்ணா மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நேற்று அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் வீட்டிலேயே இருக்குமாறு முன்பே எஸ்.ஐ.டி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. பவானிக்கு அனுப்பப்பட்ட நோட்டீசில், பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் கடத்தப்பட்ட வழக்கில் உங்களிடம் (பவானி) விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது. எனவே 01.06.2024 சனிக்கிழமையன்று நீங்கள் ஒப்புக்கொண்டதன்படி உங்களிடம் விசாரணை நடத்தப்படும். எனவே அன்றைய தினம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். அன்றைய தினம் பெண் அதிகாரிகளுடன் உங்கள் வீட்டிற்கு வந்து பெண் கடத்தல் வழக்கில் விசாரணை நடத்தப்படும் என்று எஸ்.ஐ.டி அந்த நோட்டீசில் தெளிவாக தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, இந்த வழக்கில் பவானி ரேவண்ணா தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுவை மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது. எனவே பவானி ரேவண்ணா கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருந்தது. இந்நிலையில், நேற்று எஸ்.ஐ.டி அதிகாரிகள் அவர்கள் ஏற்கனவே கூறியபடி, ஹொலெநரசிபுராவில் உள்ள ரேவண்ணாவின் வீட்டிற்கு காலை 10 மணிக்கு சென்றனர். ஆனால் பவானி ரேவண்ணா வீட்டில் இல்லை. அவரது செல்போனுக்கு தொடர்புகொள்ள அதிகாரிகள் முயற்சித்தனர். செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்ததால், மாலை 5 மணி வரை அதிகாரிகள் வீட்டிலேயே காத்திருந்தனர். ஆனாலும் பவானி ரேவண்ணா செல்போனையும் அணைத்து வைத்துவிட்டு வீட்டிற்கும் வராததால் அதிகாரிகள் 5 மணி வரை காத்திருந்துவிட்டு வீட்டிலிருந்து வெளியேறினர். பவானி மீது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆலோசித்துவருகின்றனர்.

The post பலாத்காரம் செய்யப்பட்ட பணிப்பெண் கடத்தல் வழக்கு ரேவண்ணா மனைவி தலைமறைவு: விசாரணைக்கு சென்ற அதிகாரிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: