பழங்குடியினர் காலனியில் கனமழையால் மண்சரிவு

 

பந்தலூர்,மே25: பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்து வருவதால் பழங்குடியினர் காலனியில் வீட்டின் அருகே மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் கடந்த இரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  பந்தலூர் பஜார் பகுதியில் நெடுஞ்சாலையில் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. இந்நிலையில் நெல்லியாளம் நகராட்சிக்குட்பட்ட 7ம் வார்டு பந்தலூர் பத்தாம் நம்பர் பழங்குடியினர் காலனியில் நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு கூலித்தொழிலாளி குட்டன்,மணிகண்டன், மணி ஆகியோர் வீட்டின் அருகே மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தொடர்மழை பெய்தால் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. சம்பவ இடத்திற்கு அப்பகுதி கவுன்சிலர் சாந்தி புவனேஷ்வரன் நேரில் சென்று சேதம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். பழங்குடியினர் மக்கள் கூறிகையில்: இப்பகுதியில் 19 குடும்பங்கள் வசித்து வருகின்றோம். அரசு சார்பில் 8 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 வீடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அதில் பழங்குடியினர் மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் அரசு கட்டிக் கொடுத்த வீடுகளில் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மண்சரிவு ஏற்பட்டுள்ள இடங்களில் உள்ள வீடுகளை பாதுகாத்திட தடுப்புச்சுவர் கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பழங்குடியினர் காலனியில் கனமழையால் மண்சரிவு appeared first on Dinakaran.

Related Stories: