சேலம் அம்மாபேட்டையில் ரவுடி வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி அளவுக்கு செல்லாத நோட்டுகள் பறிமுதல்..!!

சேலம்: சேலம் அம்மாபேட்டையில் ரவுடி சபீர் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி அளவுக்கு செல்லாத நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகர பகுதியில் கடந்த சில நாட்களாகவே கஞ்சா பதுக்கி வைத்திருப்பவர்களின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது. கஞ்சா வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீராணம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் அங்கு கஞ்சா வைத்திருந்த 8பேரை போலீசார் கைது செய்தனர். 8 பேரிடம் போலீசார் விசாரணை செய்ததில் அம்மாபேட்டை ராமலிங்கம் பகுதியை சேர்ந்த ரவுடி சபீர் என்பவரும் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலை அடுத்து நேற்று முன்தினம் அம்மாபேட்டை காவல் ஆய்வாளர் பால்ராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் சபீர் வீட்டில் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் வீட்டிலிருந்த பையில் சோதனை நடத்திய போது கடந்த 2016ம் ஆண்டு பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்ததை கண்டுபிடித்தனர். அதனை தெடர்ந்து பணத்தை எண்ணிப்பார்த்ததில் ரூ 1 கோடி ரூபாய்க்கு ரூ.5000 குறைவாக இருந்தது. அந்த பணத்தை பார்த்ததும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.1 கோடி பணம் வீட்டில் இருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்து ரவுடி சபீரிடம் தொடர்ச்சியான விசாரணை மேற்கொண்ட போது ரவுடி சபீரும் அதே பகுதியை சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவரும் கூட்டாக ரியல் எஸ்டேட் செய்து வந்துள்ளனர். அந்த சமயத்தில் பணமதிப்பிழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த ரூ 1 கோடி பணத்தை எப்படியாவது மாற்றி தரவேண்டும் என்று சபீரிடம் பாலாஜி கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், சபீர் முன் விரோதம் காரணமாக அந்த பணத்தை தராமல் வீட்டில் வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கஞ்சா தொடர்பான சோதனை நடைபெற்றதை அறிந்த பாலாஜியின் நண்பர் இது குறித்து அம்மாபேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சபீரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.1 கோடியை காவல்துறை தற்போது நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்த ஒரு கோடி ரூபாய் எவ்வாறு வந்தது, எப்படி அவர் வைத்திருந்தார் என்பது குறித்து தொடர்ச்சியான விசாரணை மேற்கொள்ள அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

The post சேலம் அம்மாபேட்டையில் ரவுடி வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ.1 கோடி அளவுக்கு செல்லாத நோட்டுகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: