நெரிசலை குறைக்கும் வகையில் சோழிங்கநல்லூர் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்: தாம்பரம் காவல் ஆணையரகம் தகவல்


துரைப்பாக்கம்: நெரிசலை குறைக்கும் வகையில் சோழிங்கநல்லூர் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது. சென்னை ராஜிவ்காந்தி சாலை, அடையாறு மத்திய கைலாஷ் முதல் சிறுசேரி வரை சுமார் 22 கிலோ மீட்டர் நீளத்தில் அமைந்துள்ளது. இந்த சாலையில் அதிகளவில் ஐ.டி. நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கல்லூரிகள், திரையரங்குகள், பள்ளிகள் உள்ளன. இதனால் இச்சாலையில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படும். மேலும் இச்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலை குறுகலாகவும், குண்டும் குழியுமாகவும் காணப்படுகிறது. மேலும் இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஆங்காங்கே போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் சார்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: சோழிங்கநல்லூர் சந்திப்பில் இருந்து நாவலூர், கேளம்பாக்கம் செல்லும் வாகனங்கள் குமரன் நகர் சந்திப்பில் எப்போதும்போல் நேராக செல்லலாம். நூக்கம்பாளையம் சாலை மற்றும் சுனாமி குடியிருப்பு செல்லும் வாகனங்கள் தனியார் கல்லூரி சந்திப்பில் யூடர்ன் செய்து, குமரன் நகர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி செல்லலாம். சுனாமி குடியிருப்பு மற்றும் நூக்கம்பாளையம் சாலையிலிருந்து கேளம்பாக்கம் செல்லும் வாகனங்கள் குமரன் சந்திப்பில், இடதுபுறம் திரும்பி 150 மீட்டர் தொலைவில் உள்ள யூடர்னில் திரும்பி நாவலூர், கேளம்பாக்கம் செல்லலாம்.

திருவள்ளுவர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் இடது புறம் திரும்பி நாவலூருக்கும், தனியார் கல்லூரி சந்திப்பில் யுடர்ன் செய்து, சுனாமி குடியிருப்பு மற்றும் சோழிங்கநல்லூர் சென்றடையலாம். நாவலூரில் இருந்து வரும் வாகனங்கள் குமரன் நகர் சந்திப்பை அடுத்த யூடர்னில் திரும்பி திருவள்ளுவர் சாலை சென்றடையலாம். இந்த போக்குவரத்து மாற்றத்தை கடைபிடித்து போக்குவரத்து நெரிசலின்றி செல்ல வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்குமாறு தாம்பரம் மாநகர காவல் ஆணையரங்கம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

The post நெரிசலை குறைக்கும் வகையில் சோழிங்கநல்லூர் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்: தாம்பரம் காவல் ஆணையரகம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: