இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி பட்டப்படிப்பு படிக்க சேர்க்கை ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசித்து வரும் மாணவிக்கு பட்டப்படிப்பு படிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் சேர்க்கை ஆணை வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம், தேக்காட்டூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசித்து வரும் சுசந்த அஜித்குமார் – மரியகிறிஸ்டின் தம்பதியரின் மகள்கள் ஷரினா கிறிஸ்ட் மற்றும் மெனிஷா கிறிஸ்ட் ஆகியோர் கைப்பேசி வாங்குவதற்காக தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை தமிழ்நாடு அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கினர்.

அவர்களின் இந்த செயலை பாராட்டி, கல்விக்கு பயன்படும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கையடக்க கணினிகளை வழங்கி வாழ்த்தினர். ஷரினா கிறிஸ்ட், பிளஸ் 2 பொதுத் தேர்வில் 468 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

மருத்துவத் துறையோடு தொடர்புடைய பாரா மெடிக்கல் பிரிவில் பி.எஸ்சி., (அனெஸ்தசியா) பட்டப்படிப்பு படிக்க உதவிடுமாறு மாணவியின் தாய் மரிய கிறிஸ்டின், தமிழ்நாடு முதல்வருக்கு கடிதம் மூலம் கோரியிருந்தார். இதனை கனிவுடன் பரிசீலித்த முதல்வர், நேற்று சென்னை முகாம் அலுவலகத்தில் மாணவி ஷரினா கிறிஸ்ட்-க்கு கற்பக விநாயகா மருத்துவ அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி (மயக்க மருந்துவியல்) பட்டப்படிப்பு படிக்க சேர்க்கை ஆணையை வழங்கினார். மேலும், மாணவிக்கு கலைஞர் எழுதிய திருக்குறள் உரை நூல் மற்றும் பேனாவையும் பரிசாக வழங்கி வாழ்த்தினார். அப்போது, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாணவியின் குடும்பத்தினர் உடனிருந்தனர்.

The post இலங்கை தமிழர் மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாணவி பட்டப்படிப்பு படிக்க சேர்க்கை ஆணை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: