திருவாரூர் அரசு மாதிரி பள்ளியில் சிறந்த வல்லுனர்களை கொண்டு பயிற்சி

*கலெக்டர் சாருஸ்ரீ தகவல்

திருவாரூர் : திருவாரூர் அரசு மாதிரி பள்ளியில் சிறந்த வல்லுநர்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு மாதிரிப்பள்ளியில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான செயல்விளக்க கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.

இதில் மாணவர்களுக்கு சேர்க்கை படிவத்தினை வழங்கி கலெக்டர் சாருஸ்ரீ பேசியதாவது, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கல்வி, நுண்கலை மற்றும் விளையாட்டுக்களில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்பினை வழங்கிட வேண்டும் என்ற உன்னத நோக்கில் தமிழக அரசால் சிறப்புத் திட்டமாக மாதிரிப் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மாதிரி பள்ளியின் சிறப்புக்களாக, திருவாரூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயின்ற சிறந்த மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இவர்கள் அனைவரையும் கல்வி உள்ளிட்ட அனைத்து திறன்களிலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் மாணவ, மாணவியரை உண்டு உறைவிடத்துடன் தங்கிப் பயில சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வகுப்பறைகளிலும் திறன் கரும்பலகைகள் கொண்டு பாடம் பயிற்றுவிக்கப்படுகிறது. இவர்கள் கல்வி உள்ளிட்ட அனைத்துத் திறன்களிலும் தலைசிறந்தவர்களாக வர வேண்டும் என்ற உன்னத நோக்கோடு இப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

மிகச்சிறந்த ஆசிரியர்களின் நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன.மேலும் சிலம்பம், பறையாட்டம், கதை சொல்வது போன்ற பல்வேறு தனித்திறன்களை வளர்க்கும் பயிற்சிகளும், பயிற்சி பெற்று கலை ஆசிரியர்கள் மூலம் நடத்தப்படுகிறது. மேலும் பாட வல்லுநர்களுடன் இணைய வழியில் கலந்துரையாடவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாசிப்பினை மேம்படுத்த நாள்தோறும் தமிழ், ஆங்கில நாளிதழ்கள் வழங்கப்படுகின்றன. வாரத்தில் 2 நாட்கள் பல்வேறு விளையாட்டு பொருட்கள் கொண்டு மாணவர்கள் விளையாட அனுமதிக்கப்படுகின்றனர்.

சனிக்கிழமைதோறும் சிறப்பு வல்லுநர்கள் கொண்டு சிறப்பு கலந்தாய்வு வகுப்புகளும், உளவியல் வல்லுநர்கள் மூலம் உளவியல் வகுப்புக்களும் நடத்தப்படுகின்றன. ஆண்டு இறுதிப் பொதுத் தேர்வில் மாணவர்கள் சிறப்பிடம் பெறுவதற்காக நாள்தோறும் சிறு, சிறு மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அகில இந்தியளவில் நடைபெறும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் வாரத்தோறும் இணையவழித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன.

தேர்வு நேரத்தில் ஏற்படும் மன உளைச்சலை களைந்திடும் வகையில் சிறப்பு மனநல ஆலோசகரைக் கொண்டு ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும் உயர்கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்களோடு இணைய வழியில் கலந்துரையாட வாய்ப்பு வழங்கப்படுகிறது. அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கான விண்ணப்பங்கள் என அனைத்திற்கும் இப்பள்ளி வழியே இதற்கான விண்ணப்பக் கட்டணத்தினை அரசே செலுத்தி விண்ணப்பிக்கப்படுகின்றன.

சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பேராசிரியர்களைக் கொண்டு நேரடி மற்றும் இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்றுவருகின்றன. இதுமட்டுமின்றி மாணவ, மாணவிகளுக்கு சத்தான உணவுக்கள் குறித்தநேரத்தில் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாணவர்களை களப்பயணம் அழைத்துச் செல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி மாணவர்களுக்கு பல்வேறு முன்னணி கல்லூரிகள் மூலம் புத்தாக்க பயிற்சி வழங்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், முதன்மை கல்வி அலுவலர் நேர்முக உதவியாளர் சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவாரூர் அரசு மாதிரி பள்ளியில் சிறந்த வல்லுனர்களை கொண்டு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: