நீலகிரியில் வால் பேரிக்காய் சீசன் துவக்கம்

 

ஊட்டி, மே 22: நீலகிரியில் விளையும் வால் பேரிக்காய் கிலோ ரூ.100 முதல் 150 விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலை பிரதான தொழிலாக உள்ளது. இது தவிர மாவட்டம் முழுவதிலும் மலைக்காய்கறி அதிகளவு பயிரிடப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே கோத்தகிரி, அரவேணு, பேரார் மற்றும் குன்னூர் போன்ற பகுதிகளில் தேயிலை செடிகளின் நடுவே ஊடு பயிராக பழ மரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, பேரிக்காய், வால் பேரிக்காய், ஆரஞ்சு ஆகிய பழ மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மரங்களில் ஆண்டிற்கு ஒரு முறை காய்க்கும் பழங்கள் மூலம் விவசாயிகளுக்கு ஒரு கணிசமான தொகை கிடைத்து வருகிறது. தற்போது வால் பேரிக்காய் சீசன் துவங்கியுள்ளது. பெரும்பாலான விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் விளையும் வால் பேரிக்காய்களை பறித்து வந்து விற்பனை செய்கின்றனர்.

கிலோ ரூ.100 முதல் 150 வரை விலை கிடைக்கிறது. இதனால், விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கிறது. ஊட்டி நகரில் பல்வேறு பகுதிகளிலும் கடைகள், மார்க்கெட் மற்றும் சாலையோர நடைபாதை நடைகளில் தற்போது இந்த வால் பேரிக்காய் விற்பனை செய்யப்படுகிறது. தரத்திற்கு ஏற்ப தற்போது கிலோ ஒன்று ரூ.150 முதல் 200 வரை விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால், தற்போது குரங்கு மற்றும் கரடி போன்ற வன விலங்குகளின் தொல்லையால் மகசூல் குறைந்தே காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

The post நீலகிரியில் வால் பேரிக்காய் சீசன் துவக்கம் appeared first on Dinakaran.

Related Stories: