தாம்பரம் மாநகராட்சி 4, 5வது மண்டலங்களில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்: தலைமை நீரேற்று நிலையத்தில் புனரமைப்பு பணி முடிந்ததால் நடவடிக்கை


தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியின் தலைமை நீரேற்று நிலையத்தில் புனரமைப்பு பணிகள் முடிந்ததை தொடர்ந்து, 4, 5வது மண்டலங்களில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. தாம்பரம், பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் நகராட்சிகள், சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகள் இணைக்கப்பட்டு கடந்த 2021ம் ஆண்டு தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. 87.64 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தாம்பரம் மாநகராட்சியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 70 வார்டுகளை உள்ளடக்கிய 5 மண்டலங்களாக தாம்பரம் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது.

தாம்பரம், பல்லாவரம் பகுதி வாழ் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதமும், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, சிட்லப்பாக்கம், மாடம்பாக்கம் மற்றும் திருநீர்மலை ஆகிய பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 90 லிட்டர் என்ற அடிப்படையில் மாநகராட்சியின் தினசரி குடிநீர் தேவை 123.09 லட்சம் லிட்டர் ஆகும். பொதுமக்களுக்கு தேவையான குடிநீரை 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாலாறு படுகையிலிருந்து பெறப்படுகிறது. மேலும் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் மெட்ரோ ஆகிய திட்டங்கள் வாயிலாக, மேலச்சேரி தலைமை நீரேற்று நிலையம் பாலாறு படுகை மூலம் 13 எம்எல்டி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் மூலம் 17.30 எம்எல்டி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் 11.20 எம்எல்டி, உள்ளூர் குடிநீர் ஆதாரம் (ஆழ்துளை கிணறு, பொது கிணறு, குவாரி) மூலம் 31.50 எம்எல்டி என மொத்தம் 73 எம்எல்டி கிடைக்கிறது.

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 4வது மண்டலம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மேற்கு தாம்பரம் மற்றும் 5வது மண்டலம், கிழக்கு தாம்பரம், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 85,679 வீடுகளில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் 4வது மண்டலம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை மற்றும் 5வது மண்டலம், மாடம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ளுர் நீர் ஆதாரமான 18 பொது கிணறுகள் மூலம் தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 4வது மண்டலம், மேற்கு தாம்பரம், 5வது மண்டலம், கிழக்கு தாம்பரம் ஆகிய பகுதி வாழ் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் பாலாற்று படுகையில் அமைந்துள்ள தலைமை நீரேற்று நிலையங்களிலிருந்து தினசரி 10 எம்எல்டி வீதம் குடிநீர் பெறப்பட்டு வந்த நிலையில் தற்போது கோடை காலம் துவங்கியுள்ளதால்,

தண்ணீர் பற்றாகுறையை எதிர்கொள்ளும் நோக்கில் மாநகராட்சிக்கு சொந்தமான தலைமை நீரேற்று நிலையத்தில் கூடுதலாக 4 எம்எல்டி குடிநீர் பெறப்படும் நோக்கில் 14 உறிஞ்சு கிணறுகள் சரி செய்யப்பட்டும், 52 கிலோ மீட்டர் நீளத்தில் உள்ள குடிநீர் பிரதான குழாய்களில் உள்ள அனைத்து குடிநீர் குழாய் காற்று போக்கிகளும் புதுப்பிக்கப்பட்டு தற்போது பாலாற்று படுகையிலிருந்து 13 எம்எல்டி குடிநீர் தினசரி பெறப்பட்டும், மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திடம் 2.5 எம்எல்டி குடிநீர் பெறப்பட்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கூடுதலாக 4 எம்எல்டி குடிநீர் பெறுவதற்கு ஒரு கோடி ரூபாய் செலுத்தப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. தலைமை நீரேற்று நிலையத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதின் மூலம் 4வது மண்டலம், மேற்கு தாம்பரம், 5வது மண்டலம், கிழக்கு தாம்பரம் பகுதிகளில் 4 முதல் 5 தினங்களில் வழங்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் தற்போது 3 நாட்களுக்கு ஒருமுறை என்ற வீதத்தில் குடிநீர் விநியோகம் கால இடைவெளி குறைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

The post தாம்பரம் மாநகராட்சி 4, 5வது மண்டலங்களில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்: தலைமை நீரேற்று நிலையத்தில் புனரமைப்பு பணி முடிந்ததால் நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: