3 சவரன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த அரசு பஸ் கண்டக்டர் குவியும் பாராட்டு செய்யாறு அருகே பஸ்சில் தவறவிட்ட

செய்யாறு, மே 21: செய்யாறு அருகே அரசு பஸ்சில் தவறவிட்ட 3 சவரன் தங்க நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த அரசு பஸ் கண்டக்டருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. காஞ்சிபுரம் ஓட்டேரி குல தெருவை சேர்ந்தவர் விஜயபாலன், அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற செக்கிங் இன்ஸ்பெக்டர். இவர் தனது மனைவி கீதா மற்றும் பேத்தி வருணிகா ஆகியோருடன் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நடைபெறும் உறவினர் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நேற்று முன்தினம் காலை காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்ட செய்யாறு அரசு பஸ் பணிமனைக்கு உட்பட்ட தடம் எண் 438 என்ற பஸ்ஸில் பயணம் செய்தார்.

அப்போது, தனது பேத்தியை மடி மீது அமர வைத்து கொண்டு பயணம் செய்துள்ளனர். ஆரணி சென்ற பிறகு நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில், குழந்தைக்கு தங்க நகையை அணிவிக்கலாம் என்று விஜயபாலன் அவருடைய பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த நகையை எடுக்க முயன்றார். அப்போது, பாக்கெட்டில் நகை பாக்ஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே விஜயபாலன் ஆரணி பஸ் நிலையத்தில் உள்ளே இருந்த நேரக் காப்பாளரிடம் தகவல் தெரிவித்தார். விசாரணையில், அரசு பஸ் செய்யாறு பஸ் பணிமனையை சேர்ந்தது என தெரியவந்தது.

உடனே செய்யாறு பஸ் பணிமனை மேலாளருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். செய்யாறு பேருந்து பணிமனை மேலாளர் மூலம் தடம் எண் 438 பஸ் கண்டக்டர் வரதராஜன் மற்றும் டிரைவர் பிரபாகரன் ஆகியோருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பஸ் கண்டக்டர் வரதராஜன் பஸ்ஸில் உள்ள இருக்கையின் கீழ் பகுதியில் தேடும்போது நகைப்பெட்டி ஒன்று இருந்ததை பத்திரமாக எடுத்து வைத்திருந்தார். சேலத்தில் இருந்து நேற்று காலை வந்த கண்டக்டர் வரதராஜன், பணிமனை மேலாளர் (பொறுப்பு) ஜி.ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார்.

தொடர்ந்து, நகையை தவறவிட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த விஜயபாலனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரை செய்யாறு பஸ் ஸ்டாண்டுக்கு வர வைத்து விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர், டாலர் வைத்த செயின், 2 வளையல்கள், மோதிரம் என 20 கிராம் தங்க நகைகள் அடங்கிய நகைப்பெட்டியை விஜயபாலனிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம் நகையை தவறவிட்ட விஜயபாலனுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நகையை பத்திரமாக மீட்டு எடுத்து வந்த கண்டக்டர் வரதராஜனையும் டிரைவர் பிரபாகரனையும் இதற்கு உறுதுணையாக செயல்பட்ட தொமுச மண்டல பொருளாளர் எஸ்.மோகனரங்கன் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். ₹2 லட்சம் மதிப்பிலான தங்க நகையை மீட்டுக்கொடுத்த அரசு பஸ் கண்டக்டர் வரதராஜனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

The post 3 சவரன் நகையை உரியவரிடம் ஒப்படைத்த அரசு பஸ் கண்டக்டர் குவியும் பாராட்டு செய்யாறு அருகே பஸ்சில் தவறவிட்ட appeared first on Dinakaran.

Related Stories: