தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 48 நபர்களுக்கு ரூ.4.70 கோடி கடன்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 48 நபர்களுக்கு ரூ.4.70 கோடி கடன் தொகை வழங்கப்பட்டது. இதில் மானியமாக ரூ.2.53 கோடி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் விவசாயம், அரசு வேலை, தனியார் நிறுவனங்களில் வேலை செய்தல் என்ற அளவிலேயே இருப்பதை மாற்றி தொழில் முனைவோர்களாக உருவாகவும், பலருக்கு வேலை வாய்ப்பை அளிக்கவும், அச்சமுதாய மக்கள் ஒருங்கிணைந்து முன்னேற்ற பாதையில் செல்லவும் இந்திய அளவில் முதன்மையான திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசால் கடந்த 2023-24 நிதியாண்டில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் துவங்கப்பட்டது. கடந்த ஆண்டு, மிக குறுகிய காலகட்டத்திலேயே இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 2,136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன் ஒப்பளிப்பு வழங்கப்பட்டு, இணைய வழியாக நிதி மேலாண்மை, வர்த்தக யுத்திகள், வரவு செலவு மேலாண்மை போன்ற தலைப்புகளின் கீழ் பத்து நாட்கள் தொழில் முனைவு பயிற்சி, தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்தால் வழங்கப்பட்டு 1,303 தொழில் முனைவோர்களுக்கு ரூ.159.76 கோடி அரசின் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதில் 288 பெண் தொழில்முனைவோருக்கு ரூ.33.09 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்தில் 374 நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 279 நபர்களின் விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டன. அதில் 74 நபர்களின் விண்ணப்பங்களுக்கு தற்காலிக கடன் ஒப்பளிப்பும், 60 விண்ணப்பங்களுக்கு இறுதிக் கடன் ஒப்பளிப்பும் பெறப்பட்டதைத் தொடர்ந்து 48 விண்ணப்பதாரர்களுக்கு மொத்தம் ரூ.4.70 கோடி கடன் தொகை வழங்கப்பட்டது. இதில், மானியமாக ரூ.2.53 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கடனுதவி பெற்றவர்கள் பல்வேறு தொழில்களை தொடங்கி தொழில் முனைவோர்களாகி பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகின்றனர் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 48 நபர்களுக்கு ரூ.4.70 கோடி கடன் appeared first on Dinakaran.

Related Stories: