இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம்

புதுடெல்லி: இந்தியா கூட்டணியில்தான் மம்தா இருக்கிறார். அவர் கூட்டணியில் இருப்பதை எதிர்ப்பவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கூறினார். இந்தியா கூட்டணிஆட்சி அமைத்தால் வெளியில் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு தரும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அண்மையில் தெரிவித்திருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மம்தாவை நம்ப முடியாது. அவர் தேர்தல் முடிந்ததும் பாஜ பக்கம் சாய்ந்துவிடுவார் என்று கூறினார். இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் கேட்டதற்கு,‘‘இந்தியா கூட்டணியில்தான் மம்தா இருக்கிறார்.

யார் கூட்டணியில் இருக்க வேண்டும் என்பதை முடிவு எடுக்கும் அதிகாரம் ஆதிர் ரஞ்சனுக்கு கிடையாது. நானும், காங்கிரஸ் மேலிடமும்தான் அதை முடிவு செய்வோம். இதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்’’ என்று காட்டமாக கூறியிருந்தார். அதன் பிறகு ஆதிர் ரஞ்சன் அளித்த பேட்டியில், என்னையும், மேற்கு வங்கத்தில் காங்கிரசையும் அழிக்க நினைக்கும் மம்தா பானர்ஜியை ஆதரிக்க முடியாது என்று கார்கேவுக்கு பதிலளித்தார். இதற்கிடையே கொல்கத்தாவில் மாநில காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியே ஒட்டப்பட்டிருந்த பேனர், போஸ்டர்களில் இருந்த கார்கேயின் போட்டோ மீது மர்ம நபர்கள் சிலர் மை பூசினர். மேலும், கார்கே படத்துக்கு அருகே திரிணாமுல் ஆதரவாளர் என்று பேனாவால் எழுதியிருந்தனர்.

The post இந்தியா கூட்டணியில் மம்தா இருப்பதை எதிர்ப்பவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றம்: கார்கே காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: