வனபாதுகாப்பு திருத்த சட்டத்தின் மூலம் மோடி அரசு பழங்குடியினரின் உரிமைகளை நீர்த்து போக செய்தது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: மோடி அரசின் வனபாதுகாப்பு திருத்த சட்டம் பழங்குடியினரின் உரிமைகளை நீர்த்து போக செய்து விட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பிரதமர் மோடி நேற்று பிரசாரம் செய்தார். அதற்கு முன்பாக மோடிக்கு காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் ட்விட்டர் பதிவில் சில கேள்விகளை எழுப்பி உள்ளார். ஜெய்ராம் ரமேஷ் ஊழல் ஜனதா கட்சி என்ற தலைப்பில் வௌியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மோடி அரசின் வன பாதுகாப்பு திருத்த சட்டம், வரலாற்று சிறப்பு மிக்க வன உரிமை சட்டத்தின் முன்னேற்றங்களை தடுத்து, பழங்குடியினரின் உரிமைகளை நீர்த்து போக செய்து விட்டது.

ஜாம்ஷெட்பூர் ஒரு தொழில்துறை நகரமாக இருந்தபோதும் மோசமான போக்குவரத்து இணைப்புகளை கொண்டுள்ளது. பாகல்பூர், பெங்களூரூ, டெல்லி போன்ற முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை. ஜாம்ஷெட்பூர் 2016 வரை செயல்படும் விமான நிலையத்தை கொண்டிருந்தது. ஆனால் 2018ல் உதான் திட்டத்தில் இணைக்கப்பட்ட போதும் புதிய விமான நிலையத்துக்கான திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.

டிசம்பர் 2022க்குள் தால்பூம்கர் விமான நிலையம் நிர்மாணிக்க 2019 ஜனவரியில் ஜார்க்கண்ட் அரசுக்கும், இந்திய விமான நிலைய ஆணையத்துக்கும் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இது நிறைவேற்றப்பட்டிருந்தால் டாடா குழுமம் முதல் ஆதித்யாபூரில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வரை ஒரு மிகப்பெரிய தொழில் வளர்ச்சிக்கு ஊக்கம் அளித்திருக்கும். டிசம்பர் 2022 காலக்கெடு முடிந்தும் திட்டம் கொண்டு வராதது பற்றி 2023 பிப்ரவரி 27 நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் திட்டம் கைவிடப்பட்டதை உறுதிப்படுத்தினார். ஜார்க்கண்டின் இத்தகைய உள்கட்டமைப்பு வசதியை மோடி புறக்கணித்தது ஏன்?

ஆட்சியை இழக்க போகும் பிரதமரின் இரண்டு சிறந்த நண்பர்கள்(அதானி, அம்பானி) அமலாக்கத்துறை, ஒன்றிய புலனாய்வு அமைப்புகளிடமிருந்து பாதுகாப்பாக உள்ளனர். ஆனால் வெட்கமேயின்றி ஜார்க்கண்டின் ஆதிவாசி முதல்வர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். மோடியின் சிறந்த நண்பர்களின் டெம்போக்களை அமலாக்கத்துறை, புலனாய்பு அமைப்புகள் இன்னும் ஏன் சோதனை செய்யவில்லை என்ற உண்மையை மோடி சொல்ல முடியுமா? மோடி அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதிகளை தருவதில் காலதாமதம் செய்வது ஜாம்ஷெட்பூரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

The post வனபாதுகாப்பு திருத்த சட்டத்தின் மூலம் மோடி அரசு பழங்குடியினரின் உரிமைகளை நீர்த்து போக செய்தது: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: