மாவோயிஸ்ட் மொழியில் ராகுல் காந்தி பேசுகிறார்: பிரதமர் மோடி தாக்கு

ஜாம்ஷெட்பூர்: ‘ராகுல் காந்தி மாவோயிஸ்ட்களின் மொழியில் பேசுவதால், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதலீடு செய்ய தொழிலதிபர்கள் ஒன்றுக்கு 50 முறை யோசிக்கின்றனர்’ என பிரதமர் மோடி குற்றம்சாட்டி உள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நேற்று நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பயன்படுத்தும் மொழி, எந்தவொரு தொழிலதிபரையும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் முதலீடு செய்வதற்கு முன் 50 முறை யோசிக்க வைக்கும். அந்தளவுக்கு ராகுல், மாவோயிஸ்ட்களின் மொழியில் பேசுகிறார். இது பணத்தை பறிப்பதற்கான புதுமயைான வழி. ராகுலின் தொழில் வளர்ச்சி எதிர்ப்பு, தொழிலதிபர்களுக்கான எதிர்ப்பு பேச்சுடன் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் உடன்படுகிறார்களா என பதில் சொல்லும் தைரியம் இருக்கிறதா? மக்களவை தொகுதிகளை தங்களின் பரம்பரை சொத்தாக காங்கிரஸ் தலைவர்கள் கருதுகிறார்கள். முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டதன் மூலம் 18,000 கிராமங்களின் நிலை 18ம் நூற்றாண்டில் இருந்ததைப் போலவே இருந்தன’’ என்றார்.

மேற்கு வங்க மாநிலம் புருலியாவில் நடந்த பிரசாரத்தில் பேசிய மோடி, ‘‘இஸ்கான், ராமகிருஷ்ணா மிஷன், பாரத் சேவாஸ்ரம் சங்கம் ஆகியவைகளுக்கு எதிராக பொய்களை பரப்புவதில் திரிணாமுல் காங்கிரஸ் எல்லை மீறி விட்டது. இந்து மத நம்பிக்கைகளை திரிணாமுல் காங்கிரஸ் அவமதிக்கிறது. மாநில முதல்வர் மம்தா, இந்து துறவிகளையும், இந்து மத அமைப்புகளையும் மிரட்டுகிறார். தனது திருப்திபடுத்தும் வாக்கு வங்கிக்காக இத்தகைய மிரட்டல்களை மம்தா விடுக்கிறார். பிற மாநிலத்தவர்களை ‘அந்நியர்கள்’ என்கிறது திரிணாமுல் காங்கிரஸ். ஆனால் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கொண்டாடுகிறது. சட்டவிரோத குடியேறிகளால் மேற்கு வங்கத்தின் மக்கள் தொகையை மாறியிருக்கிறது. பல பகுதிகளில் இந்துக்கள் சிறுபான்மையினர் ஆக மாறிக் கொண்டிருக்கிறார்கள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் தலித் மற்றும் ஏழைகளின் நிலங்களை அபகரிக்கின்றனர்’’ என குற்றம்சாட்டினார்.

The post மாவோயிஸ்ட் மொழியில் ராகுல் காந்தி பேசுகிறார்: பிரதமர் மோடி தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: