7 ஆண்டுகளாக பூட்டி கிடந்த அய்யனார் கோயில் திறப்பு

சாயல்குடி, மே 19: முதுகுளத்தூர் அருகே 7 ஆண்டுகளாக பூட்டி கிடந்த கோவில் தாசில்தார் முன்னிலையில் நேற்று திறக்கப்பட்டது. முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட இறைச்சிக் குளம் கிராமத்தில் பேராயிர மூர்த்தி அய்யனார் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு இறைச்சிகுளம் கிராமத்தில் சில பிரச்னை காரணமாக கோவிலில் மூடப்பட்டது. மேலும் அந்த கிராமத்தில் இரு தரப்பினராக செயல்பட்டு வருவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரக்கூடாது என்பதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கோயில் பூட்டப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையில் முதுகுளத்தூர் தாசில்தார் தலைமையில் பல்வேறு கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் உடன்பாடு ஏற்படவில்லை. இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் முதுகுளத்தூர் தாசில்தார் சடையாண்டி முன்னிலையில் பேராயிர மூர்த்தி அய்யனார் கோவில் நேற்று திறக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவில் திறந்த பின்பு சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர். இந்த கோவில் திறப்பின் போது முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் துரைப் பாண்டியன், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். பின்பு பேராயிர மூர்த்தி அய்யனாருக்கு பூஜைகள் செய்யப்பட்டது. கிராமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

The post 7 ஆண்டுகளாக பூட்டி கிடந்த அய்யனார் கோயில் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: