மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு: அமராவதி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து தாராபுரம் பகுதி குடிநீர் தேவைக்காக நேற்றுமுன்தினம் தண்ணீர் திறக்கப்பட்டது. 5 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அமராவதி பழைய, புதிய ஆயக்கட்டு விவசாயிகள் கூட்டம் மடத்துக்குளத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், குடிநீர் தேவை என்ற பெயரில் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுவோருக்கு சாதகமாக செயல்படுவதால் அமராவதி பாசன விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, விவசாயிகள் அனைவரும் அமராவதி ஆற்றுக்கு சென்று தண்ணீரில் இறங்கி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது: எங்களது பாசன தேவையை பாதுகாக்கக்கோரி அமராவதி பழைய, புதிய ஆயக்கட்டு விவசாயிகள் ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இங்கு 60 ஆயிரம் ஏக்கர் பாசனம் இருக்கிறது. ஆனால் கடந்த ஆண்டு முழு கொள்ளளவான 90 அடிக்கு நீர்மட்டம் இருந்தபோதும் வெறும் 35 நாட்களுக்கு மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் விட்டனர். கடந்த காலங்களில் அணை நிரம்பினால் பழைய ஆயக்கட்டு பகுதிக்கு 6 மாதமும் புதிய ஆயக்கட்டு பகுதிக்கு 4 மாதமும் தண்ணீர் கிடைக்கும். ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பம்ப் செட்கள் மூலம் முறைகேடாக தண்ணீரை உறிஞ்சி எடுப்பதால், எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கிறது.
தற்போது அணையில் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. ஆனால் தாராபுரம் குடிநீர் தேவைக்காக என கூறி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நாங்கள் தாராபுரம் பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை எதிர்க்கவில்லை. ஆனால் தண்ணீர் அங்கு சென்று சேரவே 5 நாட்களுக்கு மேலாகி விடும். அப்படியானால் திறக்கப்படும் தண்ணீர் முழுவதையும் இடையில் மோட்டார் வைத்து 90 சதவீதம் நீரை முறைகேடாக உறிஞ்சிவிடுவார்கள். இதனால் தாராபுரம் மக்களுக்கு குடிநீர் கிடைக்காது. முறைகேடாக செயல்படும் மின்மோட்டார்களை பறிமுதல் செய்து, மின் இணைப்பை துண்டிக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவது ஏன்?குடிநீரும் கிடைக்காமல், பாசனத்துக்கும் நீர் கிடைக்காமல் பாதிக்கப்படுகிறோம். எனவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட கலெக்டர் இதை கவனத்தில் கொள்ளவேண்டும். முறைகேடான மோட்டார் மின் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். இல்லாவிட்டால் குடும்பத்துடன் அமராவதி அணையை முற்றுகையிட முடிவு செய்துள்ளோம். இது 60 ஆயிரம் ஏக்கர் விவசாயிகளின் வாழ்வாதார பிரச்னை. இவ்வாறு கூறினர்.

The post மோட்டார் வைத்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு: அமராவதி ஆற்றில் இறங்கி விவசாயிகள் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: