திருவைகுந்த விண்ணகரம் வைகுந்தநாதப் பெருமாள்

திருநாங்கூர் பகுதிக்குள்ளேயே இருக்கும் இன்னொரு திவ்ய தேசம், திருவைகுந்த விண்ணகரம். இதற்கு முன் தரிசித்த மணிமாடக் கோயில் நாராயணப் பெருமாளைப் போலவே இந்த திவ்ய தேசப் பெருமாளான வைகுந்தநாதரும் அமர்ந்த திருக்கோலத்திலேயே காட்சி தருகிறார். வைகுந்தத்தில் உறையும் அதே அற்புதத் தோற்றம்! ஆனால் இவ்வளவு எளிதாக நமக்குக் காட்சி தரும் வைகுந்தநாதன், மாமன்னன் சுவேதகேதுவுக்கும் அவனது மனைவிக்கும் மட்டும் காட்சி தரவில்லை! அது என்ன கதை?ராமன் அவதரித்த இக்ஷ்வாகு குலத்தோன்றல், சுவேதகேது. அவன் மனைவி, தமயந்தி. மக்கள் மனம் சிறிதும் கோணாத வகையில் ஆட்சி புரிந்த சுவேதகேது, இகலோக வாழ்க்கையில் நிறைவெய்தியவனாய், மந் நாராயணனை வைகுந்தத்திலேயே நேரடியாக தரிசனம் செய்து, தன் பிறவிப் பயனை முழுமையாக அடைந்திட சித்தம் கொண்டான். கணவன் அடியொற்றி வாழவே பழக்கப்பட்டுவிட்ட தமயந்தி, தானும் அவனுடன் தவமியற்ற முன்வந்தாள்.

அரச சுகபோகங்களைத் துறந்து, ஆட்சி, ஆதிக்க எண்ணங்களை விட்டொழித்து, முழு மனதாலும் நாராயணனை மட்டும் தொழுதபடி அவ்விருவரும் தவத்தில் ஆழ்ந்தார்கள். பல்லாண்டுகள் கடுந்தவம் மேற்கொண்டதன் பயனாக அவர்களால் வைகுந்த உலகத்திற்குச் செல்ல முடிந்தது. ஆனால் என்ன துர்ப்பாக்கியம்! அவர்களால் வைகுந்தநாதனை தரிசிக்கவே முடியவில்லை. எந்த நோக்கத்திற்காக தவ துன்பத்தை அவர்கள் ஏற்றார்களோ, அதற்கான முழுமைப் பயன் அவர்களை எட்டவேயில்லை. அதுமட்டுமல்ல, வைகுந்தம் அவர்கள் எதிர்பார்த்தபடி இன்பம் சூழ்ந்த, விசனமற்ற, வேதனையற்ற உலகமாகக் காணப்படவில்லை. அவர்களுக்குப் பசித்தது, தாகம் எடுத்தது. என்ன கொடுமை இது! எந்த அற்ப உடல் உணர்வுகளுக்கெல்லாம் விடை கொடுத்துவிட்டு தவாக்கினியில் தங்களை தகிக்கக் கொடுத்தார்களோ, அதே உணர்வுகள் இந்த வைகுந்தத்தில் துளிர்ப்பது எப்படி? அவர்களுக்குப் புரியாத புதிராக இருந்தது. அதெப்படி வைகுந்தத்தில் தாகமெடுக்கும், பசிக்கும்? குழப்பத்தில் தடுமாறிய அவர்கள், மிகுந்த ஏமாற்றத்தோடு பூவுலகு திரும்பினார்கள். .

தாங்கள் தவமிருந்ததில் ஏதேனும் தவறா? அல்லது வைகுந்தம் என்று தவறான முகவரிக்கு பகவான் அனுப்பி வைத்துவிட்டானா? எந்தத் துன்பமும் இருக்கவே முடியாத வைகுந்தத்தில் தங்களுக்கு மட்டும்தான் பசி, தாகம் எடுத்ததா? இதில் நிச்சயம் ஏதோ விவகாரம் இருக்கிறது. அதாவது தாங்கள் இருவர் மட்டுமே பாதிக்கப்படும் மர்மம். சிந்தை கலங்கியபடி கீழிறங்கிக்கொண்டிருந்தவர்களை நாரதர் எதிர்கொண்டார். அவரைப் பார்த்ததும் மனசில் ஒளி பரவியது. மர்ம முடிச்சு அவிழும் என்ற நம்பிக்கை தோன்றியது. உடனே அவரிடம், தங்கள் வருத்தத்தையும்,ஏமாற்றத்தையும் சொல்லி அழுதார்கள். நாரதர் அவர்களை சமாதானப்படுத்தினார். முற்பிறவியில் அவர்கள் ஆன்மிக கர்வம் கொண்டிருந்ததைச் சுட்டிக் காட்டினார். அக்னி வளர்த்து, நெய் வார்த்து எந்த யாகமோ, ஹோமமோ செய்யாத அவர்களுடைய அகம்பாவத்தைக் குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல, பெருமாள் அடியார் வழிபாடு எதையும் செய்யாமல் இறுமாப்புடன் வாழ்ந்ததையும் சொன்னார்.

வெறுமே தவமிருந்தால் மட்டும் போதும், தாமோதரன் இற(ர)ங்கி வந்துவிடுவான் என்ற ஆணவத்துடன் தலை நிமிர்ந்திருந்ததையும் நினைவுபடுத்தினார். ‘ஆனாலும் பரவாயில்லை,’ நாரதர் ஆறுதலும் அளித்தார். தம் அடியாருக்கு விருந்தோம்பல் செய்யாத, வேதங்கள் ஒலிக்க யாகம் செய்யாத அவர்களைப் பரந்தாமன் அப்படியே கைவிட்டுவிடமாட்டான் என்று நம்பிக்கை அளித்தார். வைகுந்தத்தில் ஈடேறாத அவர்கள் அவா, இங்கே பூலோகத்திலேயே ஈடேறக்கூடும் என்றும் அவர் கணித்தார். ஏற்கெனவே இதே நாராயணன் தரிசனத்துக்காகக் காத்திருக்கும் ஐராவதேஸ்வரர் என்றழைக்கப்பட்ட சிவபெருமான் மற்றும் உதங்க முனிவருடன் சேர்ந்து வைகுந்தவாசனை வேண்டி அடிபணிந்தால், சுவேதகேது தம்பதியின் விருப்பம் நிறைவேற வாய்ப்பு உண்டு என்று அவர்களுக்கு வழியும் காட்டினார், நாரதர். சுவேதகேது, தன் மனைவியுடன் கஜாரண்யம் என்ற பூலோகப் பகுதிக்கு வந்தான். அங்கே ஐராவதேஸ்வரரைக் கண்டு வணங்கி, தம் விருப்பத்தையும், நாரதரின் வழிகாட்டலையும் தெரிவித்தான்.

ஐராவதேஸ்வரர், தாமும் அதே விருப்பம் கொண்டிருப்பதால், அவர்களுடன் சேர்ந்து தவமிருக்க முன்வந்தார். பூர்வ ஜன்மத்து ஆன்மிக கர்வம் முற்றிலும் அழிந்துவிட்ட நிலையில், சுவேதகேதுவுக்கு, ஐராவதேஸ்வரர் துணையால், திருமாலின் திவ்ய தரிசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கை வேரூன்றியது. இவர்கள் கடுந்தவம் மேற்கொள்ளவிருந்த அதேசமயம், அங்கே உதங்க முனிவரும் வந்து சேர்ந்துகொண்டார். ஒருவருக்கு நால்வராக நெடுந்தவம் இயற்றினால் நாராயணன் மனமிறங்கி நமக்கு வைகுந்தவாசனாகக் காட்சி நல்குவார் என்று ஆர்வம் கொண்டார்கள். நீடித்த தவம் கண்டு நெகிழ்ந்த நாராயணன் வைகுந்தத்திலிருந்து இறங்கி வந்தார். அவர் வைகுந்தத்திலிருந்து வந்தாரா அல்லது இவர்கள்தான் வைகுந்தத்துக்குப் போனார்களா என்று ஆச்சரியப்படும் வகையில் வைகுந்தத்தில் தான் எப்படித் தோற்றமளிக்கிறோமோ அதே கோலத்தில், ஸ்ரீ தேவிபூதேவியுடன் அமர்ந்த கோலத்தில், இவர்கள் முன் காட்சியளித்தார். நால்வரும் பேருவகை கொண்டார்கள்.

மனதில் களிநடனம் புரிந்தார்கள். பிறகு ஐராவதேஸ்வரர், பெருமாளிடம் வேண்டிக் கொண்டார்: ‘ஐயனே நாங்கள் பெற்ற இப்பெரும் பேறு உலகோர் அனைவரும் பெற வேண்டும். ஆகவே தாங்கள் இதே வடிவத்தில் அர்ச்சாவதார மூர்த்தியாக தரிசனம் நல்கி அருள் வழங்க வேண்டும்.’’நாராயணனும் அவ்வாறே அவர்களுக்கும், அதன் பிறகான பக்தப் பெருமக்களுக்கும் காட்சி தந்தார், தந்துகொண்டிருக்கிறார். அந்தத் தலம் வைகுந்த விண்ணகரம் என்று போற்றப்படுகிறது. பெருமாள் வைகுந்த நாதர் எனவும், தாயார் வைகுந்தவல்லி என்றும் திருப் பெயர்கள் கொண்டிருக்கிறார்கள். அங்கு உருவான தீர்த்தம் லட்சுமி புஷ்கரிணி என்று வழங்கப்பட்டது. உதங்க முனிவரே இத்தலத்துக்கு உரிய மகா முனிவராகவும் நியமனம் பெற்றார்.

சுவேதகேதுவும் அவன் மனைவியும் இத்தலத்திலேயே வாழ்ந்து யாகங்கள் பல செய்து, பரமன் அடியார்களுக்கு சேவை புரிந்து, இறுதியில் பரமபதம் அடைந்து, அங்கேவைகுந்தத்தில் நாராயணன் அடி சேர்ந்தனர். மூலவர் சந்நதியில் வைகுந்த நாதர், ஸ்ரீ தேவி-பூதேவி- நீளாதேவியுடன் அருட்காட்சி நல்குகிறார். சாளக்கிராம கல்லால் உருவானவர் இவர் என்கிறார்கள். உற்சவரும் அதே வைகுந்த நாதராக, மூன்று தேவியருடனும், காளிங்க நர்த்தன கிருஷ்ணனுடனும் விளங்குகிறார். தனி சந்நதியில் தாயார் வைகுந்தவல்லி பேரெழிலுடனும், பேரருளுடனும் அற்புத தரிசனம் தருகிறாள். சக்கரத்தாழ்வாரும் தனி சந்நதி கொண்டு அருள் பாலிக்கிறார். வைகுந்தத்தில் கிடைக்கக்கூடிய பெரும்பேற்றினை இத்தலத்திலேயே அனைவருக்கும் அன்புடன் வழங்க பெருமாள் காத்திருக்கிறார்.

திண்ணியதோர் அரி
உருவாய் திசையனைத்தும் நடுங்கத்
தேவரோடு தானவர்கள் திசைப்ப, இரணியனை
நண்ணி அவன் மார்வு அகலத்து உகிர் மடுத்த நாதன்
நாடோறும் மகிழ்ந்து இனிது மருவியுறை கோயில்
எண்ணில்மிகு பெருஞ் செல்வத்து எழில் விளங்கு மறையும்
ஏழிசையும் கேள்விகளும் இயன்ற பெரும் குணத்தோர்
மண்ணில் மிகுமறையவர்கள் மலிவு எய்து நாங்கூர்
வைகுந்த விண்ணகரம் வணங்கு மடநெஞ்சே

என்று உளம் உருகி மங்களாசாசனம் செய்திருக்கிறார் திருமங்கையாழ்வார். மொத்தம் பத்துப் பாசுரங்கள் அவர் இத்தலத்தின்மேல் பாடியிருக்கிறார். அதாவது, திசைகளெல்லாம் நடுநடுங்க, விண்ணகதோரும், அசுரர் பலரும் அஞ்சி கலங்க, வலிமை மிகக் கொண்ட சிங்கப் பிரானாய் தோன்றி, எரியும் நெருப்பையும் எளிதாக அணைப்பவன்போல இரண்யனை எதிர்கொண்டு, அவனது மனதை அறியும் பொருட்டு அவனுடைய வலிமையான மார்பின் மீது தன் மென்மையான பாதம் பதித்து கால் நகங்களால் கீறிப் பிளந்து, நல்லோர் உள்ளமெல்லாம் குளிரச் செய்த எம்பெருமான் உவந்து வாழும் தலம், இந்த வைகுந்த விண்ணகரம். அளப்பறிய பெருமை மிகக் கொண்ட வேதங்கள், ஏழுவகை இசைத் திறமைகள், கேள்விச் செல்வம் எல்லாம் நிறைவாகப் பெற்றிருக்கும் அந்தணர்கள் மனம் மகிழ வாழும் திருத்தலமும் இதுவே
என்கிறார் ஆழ்வார்.

தியான ஸ்லோகம்

“ஸ்ரீ வைகுண்ட நப: புரேது பகவாந் வைகுண்ட நாமா ஹரி:
தேவீ தஸ்ய ததாஹ்யுதங்க வரதஸ் தீர்த்தம் ஹ்யுதாங்காச்ரயம்
தத்ராநந்த விவர்த்த நாஹ்வயலஸத் தத்வயோமயாநே ஸ்தித:
ஸாக்ஷாந் மந்மத ஸுந்தரஸ் ஸுரகணை: ஆஸீந ரூபோ வஸன்’’

எப்படிப் போவது: செம்பொன்செய் கோயிலுக்குச் சற்றுத் தொலைவில் உள்ளது, வைகுந்த விண்ணகரம். முன்கூட்டியே திட்டமிட்டுக்கொண்டு சீர்காழியிலிருந்து டாக்ஸி அல்லது ஆட்டோ அமர்த்திக்கொண்டு, இக்கோயிலுக்கு வரலாம். கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 9.30 முதல் 12.30 மணிவரையிலும், மாலை 5 முதல் 7 மணிவரையிலும்.முகவரி: அருள்மிகு வைகுந்தநாதப் பெருமாள் திருக்கோயில், நாங்கூர் அஞ்சல், சீர்காழி வட்டம், நாகை மாவட்டம் – 609106 .

The post திருவைகுந்த விண்ணகரம் வைகுந்தநாதப் பெருமாள் appeared first on Dinakaran.

Related Stories: