மாவட்டம் முழுவதும் 173.1 மிமீ பதிவு கரூரை குளிர்வித்த 2 மணி நேர மழை

கரூர், மே. 17: சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெயிலுக்கு மத்தியில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை கரூர் மாவட்டம் முழுவதும் 173.1 மிமீ மழை பெய்து கரூரை குளிர்வித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக வரலாறு காணாத அளவுக்கு வெயில் வாட்டி வதக்கியது.

குறிப்பாக, பிற மாவட்டங்களுடன் போட்டி போட்டு முதலிடத்தை தக்க வைத்துக் கொள்ளும் வகையில், கரூர் மாவட்டம் வெயிலின் அளவில் முதலிடத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மே 2ம்தேதி அன்று தமிழகத்திலேயே மிக அதிகளவு வெயிலான 111.7 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மே 4ம்தேதி முதல் 28ம்தேதி வரை அக்னி நட்சத்திர வெயில் வாட்டி வதக்கி வருகிறது. இதற்கு முன்னதாகவே, மார்ச், ஏப்ரல் ஆகிய இரண்டு மாதங்கள் கடும் வெயில் வாட்டி வதக்கி. அனைத்து தரப்பினர்களையும் கடும் அவதிக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில், அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் கடந்த சில ஆண்டுகளாக மழை பெய்து மாவட்டத்தை குளிர்வித்து வருகிறது. அதனடிப்படையில், இந்த அக்னி நட்சத்திர வெயில் காலத்திலும் கரூர் மாவட்டத்தில் அதிகளவு மழை பெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலும், பிரார்த்தனையிலும் மக்கள் இருந்தனர். இதனை வலியுறுத்தும் வகையில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் இடி மின்னலுடன் கரூர் மாவட்டம் முழுவதும் லேசான அளவில் மழை பெய்து, கரூரை குளிர்வித்து வருகிறது. அந்த வகையில், வழக்கம் போல, நேற்று மாலை 5 மணி முதல் 7மணி வரை இரண்டு மணி நேரம் கரூர் மாநகர பகுதிகளில் மழை பெய்து கரூரை குளிர்வித்துள்ளது.

அதன்படி, கரூர் 34.2 மிமீ, அரவக்குறிச்சி 33.8 மிமீ, அணைப்பாளையம் 47.6 மிமீ, க.பரமத்தி 16 மிமீ. குளித்தலை 3 மிமீ, தோகைமலை 4 மிமீ, கிருஷ்ணராயபுரம் 4.8 மிமீ, மாயனூர் 4.6 மிமீ, பஞ்சப்பட்டி 3 மிமீ, பாலவிடுதி 14.1 மிமீ, மயிலம்பட்டி 2 மிமீ என மாவட்டம் முழுவதும் 173.1 மிமீ மழை பெய்திருந்தது. இதன் மொத்த சராசரி 14.43 மிமீ ஆக உள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் கரூர் மாவட்டத்தில் தொடர்ந்த மழை பெய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் அனைத்து தரப்பினர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மாவட்டம் முழுவதும் 173.1 மிமீ பதிவு கரூரை குளிர்வித்த 2 மணி நேர மழை appeared first on Dinakaran.

Related Stories: