நலன்களை வாரி வாரி வழங்கும் ஸ்ரீநரசிம்மனைக் கொண்டாடுவோம்!

நரசிம்ம ஜெயந்தி – 22.5.2024

1. அவதாரங்கள் ஏன்?

பகவான் எண்ணற்ற அவதாரங்களை எடுக்கின்றான் என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் குறிப்பாக 10 அவதாரங்களை மட்டும் நாம் சிறப்பாகப் பேசுகின்றோம். ஆயினும் அவருடைய அவதாரங்கள் அதிகம். வேதம் பகவானின் அவதார வைபவத்தை “அஜாயமாநோ பஹூதா விஜாயதே” என்ற அழகான தொடரால் குறிப்பிடுகிறது. சாதுக்களை காப்பதற்காகவும் துஷ்டர்களை அழிப்பதற்காகவும் ஏதோ ஒரு வடிவத்தில் பகவான் கீழே இறங்கி வருகிறான்.

“அவ” என்றாலே மேலே இருந்து கீழே என்று பொருள். (அவ என்ற சொல் கீழ் முதலிய பொருள்களைக் குறிக்கும் வடமொழி யுபசர்க்கம்.) அவரோகணம், அவதாரம் என்ற சொற்கள் இதைக் காட்டுகின்றன, பகவான் எதற்கு மேலே இருந்து கீழே இறங்கி வர வேண்டும் என்று சொன்னால் கீழே இருப்பவர்களின் சங்கடங்களைத் தீர்ப்பதற்காகவும், அவர்களை மேல்நிலையில் உயர்த்துவதற்காகவும் இறங்கி வருகின்றான். (பிறந்தார் உயர்ந்தே-திருவாய்மொழி)

2. நரசிம்ம அவதாரம் ஒரு வித்தியாசமான அவதாரம்

அவதாரங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த அவதாரம் நரசிம்ம அவதாரம். சித்திரை மாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் பகவான் எடுத்த அவதாரம் நரசிம்ம அவதாரம். ஒரு கண நேரத்தில் அவதாரம் எடுத்து, அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டு தன்னுடைய சோதிக்கு எழுந்தருளியவன். ‘நர’ என்றால் மனிதன். சிம்மம் என்றால் சிங்கம். சிங்க முகமும், மனித உடலும் கலந்த உருவம். இந்த அவதாரத்தில் பாதிக்கப்பட்ட பிரகலாதன், பகவானை ‘‘தன்னை காப்பாற்ற வா’’ என்று சொல்லி அழைக்கவில்லை. ஆனால் அழைக்காமலேயே பக்தனைக் காப்பாற்ற வந்த அவதாரம் நரசிம்ம அவதாரம்.

3. தந்தைக்கு எதிரி பிள்ளையா?

அவதார கதை ஸ்ரீ விஷ்ணு புராணத்தில் கீழ்க்கண்டபடி உள்ளது ஏழாவது மன்வந்தரத்தில் காசியபரின் மனைவி ததி என்பவளுக்கு இரண்யன், இரண்யாட்சன் என்று இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். இரண்யாட்சனை வராக அவதாரம் எடுத்து சம்காரம் செய்தார் பெருமாள். இரணிய கசிபுக்கு நான்கு பிள்ளைகள். கிலாதன், பிரகலாதன் அனுகிலாதன், சமகிலாதன். அதிலே பிரகலாதன் மிகச்சிறந்த விஷ்ணு பக்தனாக இருந்தான்.

ப்ரஹ்லாத நாரத பராசர புண்டரீக
வ்யாஸ (அ)ம்பரீஷ சுக சௌநக பீஷ்ம தால்ப்யான்
ருக்மாங்கத (அ)ர்ஜுந வஸிஷ்ட விபீஷணாதீன்
புண்யான் இமான் பரம பாகவதான் ஸ்மராமி

சிறந்த பக்தர்கள் வரிசையிலே பிரகலாதனுக்கு முதல் இடம் உண்டு. எல்லோரும் உஜ்ஜீவனமடைய நாராயண நாமத்தைச் சொல்லுங்கள் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தான். தன்னுடைய நாமத்தையே எல்லோரும் சொல்ல வேண்டும், தான் தான் இறைவன் என்று அகங்காரத்தோடு இருந்த இரணிய கசிபு தன்னுடைய பிள்ளையே தன்னுடைய கொள்கைக்கு எதிரியாக வந்தவுடன் பிள்ளை என்றும் பார்க்காமல் அவனை ஒழித்து விட தீர்மானித்தான்.

4. எங்கே உன் ஹரி?

பல்வேறு அடக்குமுறைகளை பிள்ளையின் மீது ஏவுகின்றான். தந்தையின் தண்டனைகளை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்ட பிரகலாதன், பகவானால் காப்பாற்றப்படுகின்றான். இப்படியே விட்டு வைத்தால், இவன் அசுர குலத்தின் பெருமையை குறைத்து விடுவான் என்ற அகங்காரத்தினால், அவனோடு நேருக்கு நேர் மோதுவதற்கு தயாராகின்றான் தந்தையான இரண்யன். ‘‘உன்னுடைய நாராயணன் எங்கே இருக்கின்றான்?’’ என்று கேட்க, பிரகலாதன் அற்புதமான ஒரு பதிலைச் சொல்லுகின்றான்.

‘‘அப்பா, நாராயணன் எங்கே இருக்கின்றான்’’ என்று கேட்கக் கூடாது? எங்கே இல்லை என்று தான் கேட்க வேண்டும்? காரணம் அவன் இல்லாத இடமே இல்லை. விஷ்ணு என்றாலே அவன் கரந்து எங்கும் பரந்து உளன் என்றுதான் பொருள். அவன் என்னிடமும் இருக்கின்றான். உன்னிடமும் இருக்கின்றான். இந்த பொருள்கள் ஒவ்வொன்றிலும் ஊடுருவி இருக்கின்றான் என்று பல்வேறு உபநிடத வாக்கியங்களை மேற்கோள் காட்டி, தன்னுடைய தந்தையிடம் அவன் சொன்ன பொழுது இரண்யன் ஆத்திரம் அடைந்தான்.

5. இங்கே இருக்கிறானா?

‘‘அந்தக் கதையெல்லாம் இங்கே விடாதே, இதோ இங்கே, என் எதிரே, நானே கட்டிய இந்தத் தங்கத்தூண் இருக்கிறது. இந்த தூணில் உன்னுடைய ஹரி இருக்கின்றானா?’’ என்று கேட்க, கொஞ்சமும் தயங்காமல் மகா விசுவாசத்துடன், ‘‘ஆம். இருக்கின்றான்’’ என்று பதில் சொல்ல, தன்னுடைய கதாயுத்தினால் அந்தத் தூணை ஓங்கி அடிக்க, அந்த நிமிடமே, கோடிச் சூரிய பிரகாச ஜோதியாய் விண்ணும் மண்ணும் ஜொலிக்க பயங்கர உருவத்தோடு நரசிம்மர் வெளிப்பட்டு, இரணியனை வதை செய்தார் என்பது வரலாறு.

எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து,
இங்கு இல்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப
அங்கு அப்பொழுதே அவன் வீயத்
தோன்றிய என்
சிங்கப் பிரான் பெருமை ஆராயும்
சீர்மைத்தே?
என்பது திருமொழியில் நம்மழ்வார் நரசிம்மரைக் குறித்துப் பாடிய பாசுரம்.

6. அடடா, இப்படியொரு விளக்கமா?

இந்தப்பாசுரத்துக்கு அதி அற்புதமான விளக்கம் தந்திருக்கிறார்கள் உரையாசிரியர்கள். அந்த விளக்கம் பார்ப்போம்.1. வேறேயொரு தூணிலிருந்து நரசிங்கமூர்த்தி தோன்றினால், முன்னமே ஒரு நரசிங்கத்தை உள்ளே வைத்து நாட்டிய தூண் அது என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே, அந்த வார்த்தைக்கு இட மில்லாதபடி, அந்த இரணியன் தானே தனது உயரம் பருமனுக்குப் பொருந்தப் பார்த்து அளந்து நாட்டிய அவன் வாசல் தூணிலிருந்தே திருமால் நரசிங்கமாய்த் தோன்றினான்.

2. வேறு யாரேனும் கையால் தட்ட தட்டியவிடத்திலிருந்து தோன்றினால் ‘அவர் தம் கையில் நரசிங்கத்தை அடக்கிக் கொண்டு வந்து தூணிலே பாய்ச்சினார்” என்று சொல்லிவிடக் கூடுமாகையாலே, அந்த வார்த்தைக்கு அவகாசமில்லாதபடி அவ்விரணியன் தானே தன் கையால் தட்டின அளவில் திருமால் தோன்றினான்.

3. அவன் ஓரிடத்தில் தட்ட மற்றோரிடத்திலிருந்து நரசிங்கம் தோன்றினால் ‘எங்குமுளன்’ என்று பிரகலாதன் செய்த சத்திய வாக்கு தவறி, ‘நீ சொல்லுகிறவன் இங்கில்லை’ என்று இரணியன் சொல் நிற்குமாகையாலே, அதற்கு இடமில்லாதபடி அவன், தட்டின இடத்திலிருந்தே திருமால் தோன்றினான்.4. அவன் தட்டினபிறகு சிறிதுபோது கழித்து நரசிங்கம் தோன்றினால் ‘நான் தட்டினபொழுது திருமால் அங்கில்லை’ என்று அவன் சொல்லி, திருமால் எங்கும் எப்பொழுதும் எல்லாப்பொருள்களிலும் உள்ளும் புறமும் வியாபித்திருக்கிற உண்மை பொய்யாகிவிடும் என்பதால் வேத உண்மையை காப்பாற்றவும் அப்போதே தோன்றினான்.

7. ஏன் நேரடியாக தோன்றினான்?

நரசிம்மரின் அம்சங்களை வேதத்தின் பல பாகங்களில் நாம் காண லாம். இதற்கென்றே பல உபநிஷத் வாக்கியங்கள் இருக்கின்றன. இங்கே இன்னொரு கேள்வி எழுகின்றது. பகவான் நேரடியாக அவதாரம் எடுத்து வந்து ஹிரண்யனை வதை செய்ய வேண்டுமா? இருந்த இடத்திலிருந்து தன்னுடைய கையாழியினால் (சக்கரத்தை ஏவி) வதம் செய்திருக்கலாமே என்ற கேள்வி எழலாம். ஆனால் காரணம் அதுவல்ல. இரணியன், ‘‘நான் உன்னைக் கொல்ல போகின்றேன், முடிந்தால் உன்னுடைய ஹரி உன்னை காப்பாற்றட்டும்’’ என்று சொல்லி இருந்தால், இருந்த இடத்திலிருந்து பகவான், அவனை எத்தனையோ முறை காப்பாற்றியது போல, இந்த முறையும் காப்பாற்றி இருக்கலாம். இதனை அதிர்ஷ்ட பலம் என்று சொல்வார்கள்.

(அதாவது மறைந்திருந்து காப்பாற்றுதல்) ஆனால் இந்தத் தூணில் உன்னுடைய ஹரி இருக்கின்றானா என்று கேட்டபோது, ‘‘இருக்கிறான்’’ என்று பிரகலாதன் பதில் சொல்ல, அந்தத் துணை அவன் ஓங்கி தட்டும் பொழுது நரசிம்ம அவதாரம் புறப்படுவதற்கு காரணம், பிரகலாதனைக் காப்பாற்றுவதற்காக அல்ல, பிரகலாதன் சொன்ன சொல்லைக் காப்பாற்றுவதற்காக என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

8. வேதத்தில் நரசிம்ம வர்ணனை

அதர்வ வேதத்தில் ‘நரசிம்ம’ பூர்வதாபனீய உபநிஷத், நரசிம்மரை இப்படி வர்ணிக்கிறது. மனித வடிவம் சிங்க முகமும் பொருந்தியவர். சத்யசீலர். பரப்பிரம்ம சொரூபம். கருப்பாகவும் பொன் சிவப்பாகவும் இரண்டு வர்ணம் உடையவர். எல்லோருக்கும் மங்களத்தைச் செய்பவர். ஓம் ருதம் சத்யம் பரப்பிரமம் புருஷம் ந்ரூகேஸரி விக்ரகம் என்றபடி, எல்லா வித்தைகளுக்கும் ஈஸ்வரன். எல்லா உயிர்களுக்கும் ஈஸ்வரன். வேதத்திற்கு ஆதி நாயகன். பிரம்மாதிகளுக்கு தலைவர். யஜுர் வேதத்திலும், சாம வேதத்திலும் போற்றப்படுபவர். மூன்று திருக்கண்களை உடையவர். நினைத்த மாத்திரத்தில் ம்ருத்யுவை நாசம் செய்பவர். ஆயுளை அள்ளி வழங்குபவர்.

9. நரசிம்ம தத்துவம்

‘பக்த ரக்ஷணம்’ என்ற உயர்ந்த தத்துவத்தின் வெளிப்பாடுதான் நரசிம்மாவதாரம். பொதுவாக அவர் கம்பத்தில் அவதரித்தவர், அதாவது தூணில் அவதரித்தவர் என்று சொல்வார்கள். ஆயுஷ் ஹோம மந்திரத்தில் “ஸ்வர்ணரம்பக்ருஹம் அர்சயம்” என்ற வாக்கியம் வருகிறது. அதாவது தங்கத்தினாலான வாழை மரம் போல உள்ள தூண் எவனுக்கு வீடாக ஆயிற்றோ அவன் என்று கூறுகிறது. இதனால் நரசிம்மன் தூணில் இருந்து அவதாரம் செய்தார் என்பது ஆகிறது.

அளந்து இட்ட தூணை அவன் தட்ட ஆங்கே-
வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க உருவாய்
உளந் தொட்டு இரணியன் ஒண்மார்வு அகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி

என்ற பெரியாழ்வார் பாசுரமும் தூணில் அவதரித்த விதத்தைப் பேசுகிறது.ஆனால், ஹரி வம்சம், பாரதம் போன்ற நூல்களில் சில இடங்களில் பிரம்மாவின் வார்த்தையை சத்தியமாக்குவதற்காக காட்டிலிருந்து நரசிம்ம ரூபத்தை எடுத்து வந்ததாகக் கூறுகின்றது.

10. நரசிம்ம அவதாரத்திற்கு என்ன தனிச் சிறப்பு?

மற்ற அவதாரங்களுக்கும் நரசிம்ம அவதாரத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன என்று பார்க்க வேண்டும். மற்ற அவதாரத்தில், தான் ஒரு மீனாக வடிவம் எடுத்து வந்து, பிரளயத்தில் காப்பாற்றுவேன் என்று சத்திய விரதன் என்கிற ராஜாவிடம் பகவானே சொன்னதாக வருகிறது. அதைப்போலவே கூர்மாவதாரம் எடுக்கும் போது நான் ஆமை வடிவம் எடுத்து இந்த மந்தர மலையைத் தாங்கி கடலைக் கடைந்து உங்களுக்கு அமுதம் தருவேன் என்றார்.

ராமாவதாரம், கிருஷ்ணாவதாரம் முதலிய பூர்ணாவதாரங்களும் ஏற்கனவே நிர்ணயம் செய்து முன்கூட்டியே வெளிப்படுத்திய அவதாரங்கள். சில அவதாரங்களில் அவன் கர்ப்பவாசம் செய்து, சில காலம் கழித்து, தன்னுடைய அவதார நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுகிறான். ஆனால் நரசிம்ம அவதாரத்தை பொறுத்தவரையில் பகவானே தான் எப்படி அவதாரம் எடுக்கப் போகின்றோம் என்பதை முன்கூட்டியே தேவர்களுக்கு அறிவித்ததாகவோ புராணங்களில் கூட இல்லை.

11. எங்கே கை காட்டுவானோ?

பிரகலாதன் எந்த இடத்தைக் காட்டுவான் என்பது தெரியாததால் உலகத்தில் உள்ள அத்தனை பொருள்களிலும் தயார் நிலையில் இருந்தான். சர்வ வியாபக தன்மையைக் குறிப்பது நரசிம்ம அவதாரம் என்பதால் மகாவிஷ்ணு என்ற சொல்லுக்கு நுட்பமான பொருளை நரசிம்ம அவதாரம் தருகிறது என்று பெரியோர்கள் சொல்லுவார்கள். ‘‘சர்வம் விஷ்ணு மயம் ஜகத்’’ என்கின்ற தொடருக்கு பொருளாக அமையும். அதைத்தான் தினசரி சங்கல்பத்திலே நாம் சொல்லுகின்றோம். அப்பொழுதே நரசிம்மனை பிரார்த்தித்து விடுகின்றோம். இதை நம்மாழ்வார்,

‘‘கரவிசும் பெருவளி நீர் நிலம் இவை மிசை
படர்பொருள் முழுவதுமாய் அவை அவை தொரும்
உடல்மிசை உயிரென கரந்து எங்கும் பரந்துளன்
சுடர்மிகு சுருதியுள் இவை உண்ட சுரனே”

12. நரசிம்மனுக்கு அதிகமான ஆலயங்கள்

எண்ணற்ற அவதாரங்கள் பெருமாள் எடுத்திருந்தாலும் சில அவதாரங்கள் மட்டுமே பெரிய அளவில் வழிபாட்டுக்குரிய அவதாரங்களாக இருக்கின்றன. அதிலும் அதிக திருக்கோயில்கள் என்று எடுத்துக் கொண்டால், பூரண அவதாரங்களான ஸ்ரீராம அவதாரத்திற்கும் கிருஷ்ணாவதாரத்திற்கும் தான் இருக்கின்றன. அதற்கு பிறகு அதிக கோயில் உள்ள அவதாரம் நரசிம்ம அவதாரம். வராக அவதாரத்திற்கு ஆலயங்கள் இருந்தாலும், அவைகள் மிகவும் குறைவு. தசாவதாரங்களில் மூன்று அவதாரங்களுக்கு தான் மிக அதிகமான ஆலயங்கள் பூலோகத்தில் இருக்கின்றன.

13. ஏன் பயங்கரமான அவதாரத்தை பகவான் எடுத்தார்?

பயங்கரமான கோலத்தோடு வெகு உக்கிரமாக நரசிம்ம அவதாரத்தை எடுத்தது பக்தர்களை பயமுறுத்த அல்ல. பக்தர்களின் விரோதிகளை அச்சுறுத்தவே உக்கிர அவதாரம் எடுத்தார். பக்தர்களை அச்சுறுத்துபவர்களும் துன்பம் செய்பவர்களும் ஹிரண்யன் போல எத்தனை பெரிய வரபலம் மிகுந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அழிப்பதற்கு எம்பெருமான் தயங்குவதில்லை. பக்தர்களுக்கு அவன் அபயப்பிரதன்.

நரசிம்ம ரூபத்தை தியானிப்பவர்களுக்கு மனதில் பயம் என்பதே வருவதில்லை என்று பிரகலாதனே சொல்லுகின்றார். பகவான் சாந்தமான ரூபத்துடனும் உக்கிரமான ரூபத்துடனும் இருக்க வேண்டியது அவசியமாகிறது என்று வேதமே சொல்லுகின்றது. பகவானின் ஆறு குணங்களில் பலம், வீரியம், தேஜஸ் ஆகியவை உக்கிரமான ரூபத்திற்கு அடிப் படையாக விளங்குகின்றன. “வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி தன்னோ நரசிம்ம பிரஜோதயாத்” என்று தைத்திரிய நாராயண வல்லி நரசிம்மரை விவரிக்கிறது.

14. எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்

நரசிம்ம பெருமாள் வடிவத்தை வேதம் இப்படி வர்ணிக்கிறது. விண்ணைத் தொடுவது போன்ற நீண்ட நெடிய மேனி. பிடரித் தலை மயிர்களால் தடித்த முகம். வீங்கிய கழுத்து. முகத்தில் உருக்கி வார்த்த பொன் போன்ற கண்கள். குகை போன்ற வாய். கோரைப்பற்கள். கூர்மையான வாள் போல் தொங்கும் நாக்கு. தூக்கி நிற்கும் காதுகள். நன்கு விரிந்த அகல மார்பு. சினம் கொப்பளிக்கும் பார்வை. குறுகிய வெள்ளை மயிர்கள் குத்திட்டு நிற்கும் பெரு உடல். கூரிய ஆயுதம் போன்ற நீண்ட நகங்கள் என அந்த உருவை பார்க்கவே அச்சப்படும் படியான தோற்றம் இருந்தது. நரசிம்ம அவதாரம் எடுத்தவுடன் அசுரர்கள் மட்டும் அல்ல தேவர்களும் கூட அருகில் நெருங்குவதற்கு அச்சப்பட்டு விலகி ஓடினார்கள். இதை ஆழ்வார் பாசுரமும் விவரிக்கிறது.

இவையா! பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா! எரிவட்டக் கண்கள்? இவையா
எரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரிபொங்கிக் காட்டும் அழகு? (நான்முகன் திருவந்தாதி)

15. ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமத்தில் நரசிம்ம அவதாரம்

நரசிம்ம அவதாரத்தைக் கண்டு பயப்படாமல் இருந்த பக்தன் பிரகலாதன் மட்டுமே. தாய் தன் குழந்தையை அணைத்துக் கொண்டு செயல்படுவது போல, பிரகலாதனை காப்பாற்ற, தன் இடுப்பில் வைத்துக் கொண்டு, இரணியனோடு போர் புரிந்ததாக ஒரு குறிப்பு இருக்கின்றது. பராசர பட்டர் அற்புதமாகச் சொன்னார். “சிங்கமானது தன்னுடைய குட்டிக்கு பால் கொடுத்துக் கொண்டே எதிரில் உள்ள மிருகங்களை வேட்டையாடுவது போல” தன்னுடைய பக்தனான பிரகலாதனை அரவணைத்துக் கொண்டு எதிரியான இரண்யனை வதம் செய்தார் என்று வர்ணிப்பார். ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமத்தில் நரசிம்ம அவதாரம் பற்றி பல இடங்களில் வருகின்றது. நரசிம்ம வபு; என்றும், ஸ்ரீமான் என்றும், அமிருத்யு என்றும், ஸர்வ த்ருக் என்றும். ஸிம்ஹ: என்றும், சந்தாதா என்றும், சந்திமான் என்றும், ஸ்திர என்றும், அஜ: என்றும், துர்மர்ஷண: என்றும், சாஸ்தா என்றும், விச்ருதாத்மா என்றும் ஸூராரிஹா என்றும் வருகின்றது.

16. பிரதோஷ வேளையும் நரசிம்ம வழிபாடும்

பொதுவாக ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு உகந்த நாட்களாக வளர்பிறை சதுர்த்தசியைச் சொல்லலாம். அதைப்போலவே சுவாதி நட்சத்திர நாளையும் பிரதோஷ நாட்களையும் ஸ்ரீ நரசிம்மர் வழிபாட்டுக்குச் சிறந்த நாட்களாகக் கருதலாம். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை அவரது அவதார திதியான வளம்பிறை சதுர்த்தசியில் பிரதோஷம் காலமான மாலை நேரத்தில் வணங்குவதன் மூலம் முன் ஜென்மத்தில் செய்த பாவங்கள் (பழவினைகள்) தீரும். கடன்கள் நீங்கும். பகை, தீராத வியாதிகள் இருந்தாலும் நரசிம்மரின் பேரருளால் தீர்ந்துவிடும். அப்பொழுது கீழ்க்காணும் மந்திரத்தை ஜெபித்து அவருடைய அருளைப் பெற முடியும். இந்த மந்திரம் நரசிம்மரின் 32 எழுத்து மந்திரம் ஆகும். இதனை ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மூல மந்திரம் என்பார்கள்.

17. ஸ்ரீ நரசிம்ம பீஜ மந்திரம்

‘‘உக்ரம் விரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் ம்ருத்யுர் ம்ருத்யும் நமாம் அஹம்”

என்பது ஸ்ரீ நரசிம்ம பீஜ மந்திரம். மனதில் ஏற்படும் பயத்தை அழித்து, ஆன்மிக ரீதியில் உற்சாகமாக வைத்திருக்கும் சக்தி வாய்ந்த மந்திரம். உங்கள் வாழ்க்கையை நேர்மறை மற்றும் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வைக்கும் மந்திரம். இந்த மந்திரத்தை தினமும் ஜபிப்பவருக்கு, அனைத்து ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். மரணத்தின் மரணம் (ம்ருத்யுர் ம்ருத்யும்) நிகழும். அதாவது ஆயுள் பயம் நீங்கும். நரசிம்மரை சரண டைந்து இந்த உன்னத மந்திரத்தை நம்பிக்கையுடனும் பக்தியுடனும் தினமும் உச்சரிக்கும் ஒரு பக்தனின் வழியில் எந்தத் தடைகளும், தீய சக்திகளும், எவ்வளவு பெரியதாக இருந்தாலும், நிற்க முடியாது.

18. சுவாதி நட்சத்திர பெருமை

சூரியன் முன்னிலையில் இருள் நிற்காதது போல நரசிம்மரை ஒருவன் தஞ்சம் அடையும்போது, ​​ முற்றிலும் அச்சமற்றவனாகிறான். உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் என்ற மந்திரத்தில் ‘‘ஜ்வலந்தம்’’ என்கிற வார்த்தை மிக முக்கியமானது. அது லட்சுமி நரசிம்மருக்கே உரியது. ‘‘ஜ்வலந்தம்’’ என்றால் நினைத்த நேரத்தில் பிரகாசமான ஒளியுடன் மின்சாரம் போல் தோன்றுபவர் என்று பொருள். எனவே ஸ்ரீ நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரம் ஒளி உடைய நட்சத்திரம். ராகுவிற்கு உரிய நட்சத்திரம். துலாம் ராசியில் இருக்கும் இந்த நட்சத்திரம் சுக்கிரனுடைய வீட்டில் அமைந்திருப்பதால் சகல மங்களங்களையும் ஐஸ்வர்யங்களையும் கொடுக்கக்கூடியது. தோஷம் இல்லாத நட்சத்திரங்களில் ஸ்வாதியும் ஒன்று. இந்த சுவாதி நட்சத்திரத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபட்டால் சர்ப்ப கிரகங்களால் வருகின்ற தோஷம் நீங்கும்.

19. பௌமாஸ்வினி

அதைப்போலவே ஸ்ரீ நரசிம்மரை வணங்குவதற்கு மிகச் சிறப்பான ஒரு நாள் உண்டு அது அஸ்வினி நட்சத்திரமும் செவ்வாய்க்கிழமையும் இணைந்து வருகின்ற நாளாகும். இது வருடத்திற்கு ஓரிருமுறை வரலாம். இந்த நாளுக்கு ‘‘பௌமாஸ்வினி” என்று பெயர் இந்த நன்னாளில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வணங்குவதன் மூலமாகவும் அவருடைய மூல மந்திரத்தை ஜெபிப்பதன் மூலமாகவும் லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வதன் மூலமாகவும், பற்பல நன்மைகளை அடையலாம். அதோடு செவ்வாய் தோஷம் நீங்கும். செவ்வாய்க்குரிய காரகங்களான வீடு கட்டுதல், சகோதர ஒற்றுமை, மற்றும் அரசாங்க வேலை வாய்ப்பு, மன தைரியம், ரத்த சம்பந்தமான நோய்கள் தீருதல் முதலிய நன்மைகள் ஏற்படும்.

20. எப்படி வணங்க வேண்டும்?

இந்த நாளில் லட்சுமி நரசிம்மரை ஒரு நெய் தீபம் ஏற்றி பானகம் அல்லது பால் வைத்து வழிபட்டால் செவ்வாய் தோஷம், விபத்து தோஷம் முதலியவை விலகும். பூமி வாங்கும் யோகம் ஏற்படும். ஸ்ரீ நரசிம்மரை போற்றுவதற்கு ஏராளமான மந்திரங்களும் பாடல்களும் ஸ்தோத்திரங்களும் உண்டு. இதில் ருண விமோசன ஸ்தோத்திரம் மற்றும் மந்திர ராஜபத ஸ்தோத்திரம் மிக மிக சக்தி வாய்ந்தது கீழ்க்காணும் ருண விமோசன ஸ்தோத்திரத்தை ஒருவர் 48 நாட்கள் ஜெபிப்பதன் மூலமாக அடைக்கின்ற நன்மைகள் அளவற்றது.

தேவதாகார்ய ஸத்யர்த்தம் ஸபாஸ்தம்பம் ஸமுத்பவம்
“ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தாநாம் வரதாயகம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

ஆந்த்ரமாலாதரம் சங்க சக்ராப்ஜாயுத தாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
ஸ்மரணாத் ஸர்வ பாபக்நம் கத்ருஜ விஷநாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

ஸிம்ஹநாதேந மஹதா திக்தந்தி பயநாசநம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
ப்ரஹலாத வரதம் ஸ்ரீசம் தைத்யேச்வர விதாரிணம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

க்ருரக்ரஹை பீடிதாநாம் பக்தாநாம் மபயப்ரதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.
வேதவேதாந்த யஜ்ஞேசம் ப்ரஹ்மருத்ராதிவந்திதம்
ஸ்ரீ ந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே.

யஇதம் படதே நித்யம் ருணமோசந ஸம்ஜ்ஞ்தம்
அந்ருணீ ஜாயதே ஸத்யோ தநம் சீக்ரமவாப்நுயாத்’’

குறிப்பாக, ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் இருக்கக் கூடிய அத்தனை தோஷங்களும் நீங்கி வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். இனி முக்கியமான சில நரசிம்மரின் ஆலயங்களை தெரிந்து கொள்வோம்.

21. திருக் குறையலூர் உக்கிர நரசிம்மர் கோயில்

சீர்காழியிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும், திருவெண்காட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது இத்தலம். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தரும் அபூர்வ நரசிம்மரை இங்கு தரிசிக்கலாம். பெருமாள் ஸ்ரீ உக்கிர நரசிம்மர் தாயார் திருநாமம் அமிர்த வல்லி. குறைகளை அகற்றும் ஊர் என்பதே மருவி, திருக்குறையலூர் என்று ஆயிற்று. மிகவும் பழமையான இத்தலத்தை ‘ஆதி நரசிம்மர் தலம்’ என்றும், தெற்கில் மிகவும் உயர்ந்த நரசிம்ம ஷேத்திரம் என்பதால் ‘தட்சிண நரசிம்மர் தலம்’ என்றும் சிறப்பு பெயரிட்டு அழைக்கிறார்கள் பத்ம புராணம், நாரத புராணத்தில் இத்தலம் ஸ்ரீ பூரண புரி, பூரண நரசிம்ம ஷேத்திரம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் அவதரித்த தலம் இது.

பஞ்ச நரசிம்ம தலங்களில் முதலாவது இத்தலம். கருவறையில் உக்கிர நரசிம்மர். ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். நரசிம்மரை இவ்வாறு இரண்டு தாயார்களுடன் தரிசிப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத காட்சியாகும். அமாவாசை, சுவாதி நட்சத்திரம், பிரதோஷம் ஆகிய நாட்களில் ஸ்ரீஉக்கிர நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்படுகின்றன. பித்ரு தோஷம் உள்ளவர்கள், அமாவாசை நாளில் இங்கு வந்து நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்யலாம்.

22. திருமங்கை மடம் வீர நரசிம்மர்

சீர்காழியில் இருந்து பூம்புகார் போகும் வழியில்திருவெண்காடு அருகில் உள்ள ஊர். திருமங்கையாழ்வார் இந்த ஊரில் தான் தினசரி ஆயிரம் வைணவர்களுக்கு ததி ஆராதனம் நடத்தினார். பஞ்ச நரசிம்ம தலங்களில் இரண்டாவது தலம் இங்குள்ள நரசிம்மருக்கு வீர நரசிம்மர் என்று திருநாமம் சாளக்கிராம கல்லால் ஆனவர் உற்சவர் ஸ்ரீ ரங்கநாதர். தாயார் ஸ்ரீ செங்கமலவல்லி நாச்சியார் இங்கே உள்ள தீர்த்தத்துக்கு ஸ்ரீ செங்கமலவல்லி புஷ்கரணி என்று பெயர். ஆடி மாதத்தில் பிரம்மோற்சவம் விசேஷமாக நடைபெறும். நோய் நொடி உள்ளவர்கள் சுபகாரியத் தடை உள்ளவர்கள், மண முறிவு வழக்குகளில் தவிப்பவர்கள், இத்தலத்தில் வந்து, வீர நரசிம்மருக்கு துளசி மாலையை சாத்தி, நெய் தீபம் ஏற்றி வணங்கினால் நினைத்த காரியம் வெற்றி பெறும்.

23. திருநகரி யோக நரசிம்மர்

திருநகரி அற்புதமான திருத்தலம். திருவாலி திருநகரி என்று இரண்டு தலத்தைச் சொல்லுவார்கள். அதில் திருநகரி பெரிய கோயில். மூலவராக அமர்ந்த கோலத்தில் ஸ்ரீ கல்யாண ரங்கநாதப் பெருமாள் காட்சி தருகின்றார். வயலாளி மணவாளன் என்ற திருநாமம் உண்டு. தாயாருக்கு ஸ்ரீ அமிர்தவல்லி தாயார் என்ற திருநாமம். குமுதவல்லி நாச்சியாருடன் “அணைத்த வேலும் தொழுத கையுமாக” காட்சிதரும் திருமங்கை ஆழ்வாருக்கு தனிச் சந்நதி, கொடிமரம், உற்சவங்கள் உண்டு. இத்தலத்தில் இரண்டு நரசிம்மர்கள் உண்டு.

ஒன்று வடக்கு பிரகாரத்தில் காட்சி தரும் ஹிரண்ய சம்ஹார நரசிம்மர். ஹிரணியனை மடியில் வைத்து வதம் செய்யும் கோலத்தில் காட்சி தருவார். தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிக் கவசம் அணிந்து தகதக என ஜொலிப்பார். ஒரு சிறு மாடி போன்ற அமைப்பில் ஏறித்தான் நரசிம்மரை தரிசிக்க வேண்டும்.

24. யோக நரசிம்மர்

கருவறை மண்டபம் வெளியே கிழக்கு உள் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் காட்சி தரும் நரசிம்மர் யோக நரசிம்மர். பிரகார வலம் வரும் போது இந்த இரண்டு நரசிம்மரையும் தரிசித்து விடலாம். யோக நரசிம்மர் மிகுந்த வரப்பிரசாதி. இவரை சிகப்பான மலர்களைச் சாத்தி நல்லெண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் தீபமேற்றி வணங்கினால் பற்பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியங்கள் எளிதில் கைகூடும். எந்தக் காரியத்திலும் வெற்றி கிடைக்கும்.

ஹிரண்ய சம்ஹார நரசிம்மருக்கு நீல நிற பூக்களைச் சாத்தி, நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட்டால், குடும்பத்தில் அன்பும் சந்தோஷமும் நிலவும். மேலும் ஆக்கமான சுபச் செயல்கள் விருத்தி அடையும் பிரதோஷம், சுவாதி நட்சத்திரம் முதலிய தினங்கள் இந்த நரசிம்மர் வழிபாட்டுக்கு உரிய விசேஷமான தினங்கள். அவரவர் ஜென்ம நட்சத்திரத்திலும் சிறப்பு வழிபாடு செய்யலாம்.

25. திருவாலி ஸ்ரீ லட்சுமி நரசிம்மர்

சீர்காழிக்கு அருகே உள்ள திவ்ய தேசங்களில் திருவாலி திருநகரி என்கின்ற இரட்டை திருப்பதியை ஒரே திவ்ய தேசமாகச் சொல்வார்கள். இதில் திருநகரி பெரிய கோயில். திருமங்கையாழ்வார் உற்சவ மூர்த்தி இருக்கின்ற கோயில். திருவாலி என்பது ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் காட்சியளிக்கும் திருத்தலம். பெரும்பாலான உற்சவங்கள் இரண்டு கோயிலையும் இணைத்தே நடக்கும்.
பங்குனி உத்திரத்தை ஒட்டி நடைபெறும் வேடுபரி உற்சவத்தின் பொழுது, இங்குதான் கல்யாணரங்கநாதப் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.

இத்தலத்தில் திருக்காட்சி தரும் தாயார் அதி அற்புதமாக இருப்பார். அவருக்கு ஸ்ரீ அமிர்த வல்லி தாயார் என்ற திருநாமம். திருநகரி தாயாருக்கும் இதே திருநாமம் தான். மிகுந்த வரப்பிரசாதி. கைகூப்பி வணங்கிய கோலத்தில் இங்கு தாயார் காட்சி தருவது சிறப்பு. வியாபார வெற்றிக்கும், சுபகாரியத் தடைகள் நீங்கவும் இத்தலத்து எம்பெருமானை வணங்கி பலன் பெறலாம். பிரதோஷ நாளில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேகம் செய்த எண்ணெயை வாங்கி பிரசாதமாகப் பயன்படுத்தினால் உடற்பிணியும் உளப் பிணியும் நீங்கும்.

26. ஏன் மஹாலஷ்மி மடியில் அமர வேண்டும்?

சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள் ளது. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.

ஸ்ரீமான் என்றால் அழகானவன் என்று பொருள். மற்ற அனைத்துப் பெருமாள்களுக்கும் மகாலட்சுமி இறையும் அகலகில்லேன் என்று திருமார்பில் அமர்ந்திருக்க, நரசிம்மருக்கு
மட்டும் மடியில் அமர்ந்திருக்க ஒரே காரணம்தான். ஸ்ரீமானான நரசிம்மரின் அழகிய முகத்தைக் கண்டுகளிக்க வேண்டுமெனில் திருமார்பில் இருந்தபடி காணமுடியாது. மடியில் அமர்ந்தால்தானே காண முடியும்? அதனால் தான், ஸ்ரீமானின் மடியில் ஸ்ரீதேவி அமர்ந்திருக்கிறாள்.

27. எல்லா ஆலயங்களிலும் நரசிம்மருக்கு தனிச் சந்நதி

நரசிம்மருடைய தலங்கள் இல்லாத ஊர்களே இல்லை. எந்தத் திருமால் கோயிலாக இருந்தாலும் ஏதோ ஒரு இடத்தில் நரசிம்மருக்கு தனிச் சந்நதி இருக்கும். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நரசிம்மர் தலங்கள் நிறைய உண்டு. மதுரைக்கு அருகே உள்ள ஒத்தக்கடை நரசிம்மர், திண்டுக்கல்லுக்கு அருகே உள்ள 10 நரசிம்மர்கள், ஒரே நேர்கோட்டில் அமைந்த பரிக்கல் சிங்ககிரி, பூவரசன்குப்பம் முதலிய நரசிம்மர் ஆலயங்கள், சென்னைக்கு அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிங்கப்பெருமாள் கோயில் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

28. 108 திவ்ய தேசங்களில் 2 நரசிம்மர் தலங்கள்

நரசிம்மரைப் போற்றி பாடாத ஆழ்வார்களே இல்லை. நரசிம்மரின் திருத்தலத்தை நேரடியாக மங்களாசாசனம் செய்து பதிகம் பாடுவது ஒரு வகை. வேறு வேறு திருத்தலங்களைப் பாடுகின்ற பொழுது நரசிம்மரின் வைபவத்தை இணைத்துப் பாடுவது என்பது ஒரு வகை. 108 திவ்ய தேசங்களில் இரண்டு நேரடியான நரசிம்மர் தலங்கள் உண்டு. ஒன்று அகோபிலம் எனப்படும் சிங்கவேள் குன்றம். ஆந்திராவில் கர்னூல் மாவட்டத்தில் உள்ளது. இங்கு நவ நரசிம்மர்கள் காட்சி தருகின்றார்கள்.

இன்னொன்று அரக்கோணம் அருகே அமைந்துள்ள திருக்கடிகை என்று வழங்கப்படும் சோழசிம்மபுரம். கடிகாசலமும் அகோபிலமும் மலைமேல் உள்ள தலங்கள். இரண்டு மலைகளிலும் ஏறுவது சற்று கடினம். அதாவது நரசிம்மரை கொஞ்சம் முயற்சி செய்து தான் அணுக வேண்டும். அணுகி விட்டால் அவன் நம்மை காப்பாற்றாமல் இருக்க மாட்டான். இந்த இரண்டு திருத்தலங்களையும் நேரடியாக தரிசித்துப் பாடி இருக்கிறார் திருமங்கை ஆழ்வார்.

29. நரசிம்ம தரிசனம்

நரசிம்மரைப் பார்த்ததும் பிரகலாதனுடைய மகிழ்ச்சி எப்படி இருந்தது என்பதை கம்பனைத் தவிர வேறு யாரும் காட்டவில்லை. நரசிம்மபெருமாளின் சிரிப்பொலியை கேட்டு மகிழ்ந்து ஆனந்தக் கூத்தாடினான். பொல பொலவென்று கண்ணீர் விட்டு அழுதான். இறைவனின் பல்வேறு விதமான நாமங்களைப் பாடி ஆரவாரம் செய்தான். தன்னுடைய சிவந்த கைகளை தலையில் வைத்து தொழுதான். ஆடினான். பாடினான். கீழே விழுந்து வணங்கினான். துள்ளிக் குதித்து ஓடினான் என்று கம்பன் பிரகலாதனுடைய அந்த உற்சாகத்தை அற்புதமாகக் காட்டுகின்றார்.

30. எப்படிக் கொண்டாடுவது?

இந்த மகிழ்ச்சியும் ஆனந்தமும் நமக்கும் வரவேண்டும். வரும். பிரகலாதனை நினைத்து நாமும் அவனை சரணாகதி செய்வோம். நரசிம்ம ஜெயந்தி (22.5.2024) அன்று காலையில் அவனைப் பற்றிய பல்வேறு நாமங்களைக் கூறி, துளசி மாலையால் அலங்கரித்து, நெய் தீபம் ஏற்றி வைத்து, பானகமோ பாலோ நிவேதனம் செய்து, நரசிம்ம ஜெயந்தியைக் கொண்டாடுவோம்.

The post நலன்களை வாரி வாரி வழங்கும் ஸ்ரீநரசிம்மனைக் கொண்டாடுவோம்! appeared first on Dinakaran.

Related Stories: