இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம்

‘சரியான ஜோடி. ஜாடிக்கேத்த மூடி’’ என்று கல்யாண வீட்டிற்குச் சென்று திரும்புவோர் வழக்கமாகச் சொல்வார்கள். இது தோற்றப் பொருத்தமும், வசதிப் பொருத்தமும் பார்த்துச் சொல்வது. இதில் தவறில்லை. ஆனால், அதையும்விட முக்கியம், அவர்களை ஆள்கின்ற நட்சத்திரங்கள் பொருத்தமாக உள்ளனவா என்று பார்ப்பது! இதுவே இல்லற வாழ்க்கையை சிறப்பாக்கும். இந்த விஷயத்தில் ஜோதிடமும் பெண்களை மையப்படுத்தித்தான் பொருத்தங்களையே வைத்துள்ளது. பெண்ணின் நட்சத்திரத்தைக் கொண்டுதான் ஆணுக்குப் பொருத்தம் பார்க்க வேண்டும். ‘எனக்குப் பொருத்தமான பெண் வேண்டும்’ என ஆண்கள் தேட முடியாது. ‘மங்கைக்கேற்ற மணாளன்’ என்பதுதான் ஜோதிட விதி.மொத்தப் பொருத்தம் பத்து. அதில் முதலாவது, தினப் பொருத்தம். பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து 2வது, 4வது…, 6,8,9,11,13,15,24,17,18,27வது என்று எண்ணி வரும் நட்சத்திரங்கள் அனைத்திற்கும் அந்த நட்சத்திரத்தோடு தினப் பொருத்தம் இருக்கிறது என்று பொருள். இதில் 11,13,15,24,17,18,27 போன்ற எண்களெல்லாம் 2,4,6,8,9 போன்றவற்றின் கூடுதலாக வருகின்றன என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.

இப்போது 2,4,6,8,9 என்று இந்த வரிசையில் வரும் நட்சத்திரங்களால் பார்க்கப்படும் பொருத்தத்தால் என்ன பலன்கள் என்று பார்ப்போம்.தினப் பொருத்தம் என்பதே தினந்தோறும் கணவன் மனைவிக்குள் நிகழும் உரையாடல்கள், வாதங்கள் போன்றவற்றைக் குறித்துப் பேசுவதாகும். ஒரு நாளோ, இரு நாளோ அல்ல… மரண பரியந்தம் வரை தினந்தோறும் பார்த்துப் பழகுவதற்கான பொருத்தமென்பதால்தான் முதலில் இதை வைத்திருக்கிறார்கள். தினமும் எப்படியிருப்பார்கள் என்பதால்தான் தினப் பொருத்தம். இந்தப் பொருத்தத்தைப் பார்த்துவிட்டால் முரண்பாடுகளற்ற வாழ்க்கையை எளிதாக வாழலாம். பிரச்னை என்று வரும்போது சில நிமிடங்களிலேயே தீர்ந்து விடும். ‘‘நான் சொல்றதை என்னைக்கு அவர் ஏத்துக்கிட்டிருக்காரு’’ என்கிற புலம்பலைத் தவிர்க்கலாம். ‘‘கல்யாணமான நாள்லேர்ந்து என் பேச்சுல ஒண்ணையாவது அவர் கேட்டிருக்காரா’’ எனும் ஆதங்கத்தை அகற்றலாம்.

‘‘என்னங்க… காலையில எழுந்து எங்க போயிட்டு வர்றீங்க?’’‘‘ஏன்… உங்கிட்ட அவசியம் சொல்லணுமா. சொல்லாம போயிட்டு வர்ற அளவுக்குக்கூட எனக்கு சுதந்திரம் இல்லையா’’ என்று பதில் வந்தால், அங்கே தினப் பொருத்தம் இல்லையென்று அர்த்தம். ‘‘என்ன சமைச்சிருக்கே… வாயிலயே வைக்க முடியலை. உப்பு சப்பில்லாம இப்படித்தான் உங்க வீட்ல சமைப்பீங்களா?’’ என்று ஏடாகூடமாக பேச்சு தொடர்ந்தால் தினப் பொருத்தம் அமையவில்லை என்று கொள்ளலாம். இப்போது உதாரணத்திற்காக, புனர்பூசம் என்கிற நட்சத்திரத்தை எடுத்துக் கொள்வோம். புனர்பூசத்திற்கு இரண்டாவதாக பூசம் நட்சத்திரம் வருகிறது. எனவே தினப் பொருத்தம் இருக்கிறது. இது சரியாக இருந்தால் மேலே சொன்ன உரையாடலையே, ‘‘உங்கிட்ட சொல்லிட்டுப் போகலாம்னுதான் பார்த்தேன். ஆனா நீ பாத்ரூம்ல இருந்தே. சரி, வந்து சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன். பக்கத்து தெருவில இருக்கற ஃபிரண்டோட பையனுக்கு உடம்பு சரியில்லையாம். அதான் பார்த்துட்டு வந்தேன்’’ என்று பேச்சு இருக்கும். அடிப்படையிலேயே, ‘சொல்லிவிட்டுப் போவது நல்லது’ என்கிற தெளிவு இருக்கும். ‘‘நல்லாதான் சமைச்சிருக்க. சாம்பார்ல ஒரு கல்லு உப்பு சேர்த்திருந்தா அமிர்தமா இருந்திருக்கும்’’ என்று அறிவுரையோடு குறையை நிறைவு செய்வார்கள்.

தவறுகள் திருத்திக் கொள்ளப்படும்.இப்படி இரண்டாவது நட்சத்திரக்காரர்கள் பொருத்தமாக அமையும்போது பரஸ்பர பேச்சுவார்த்தைகள், கேள்வி பதில்கள் உடன்பாட்டோடு இருக்கும். ‘‘நானும் இதைத்தான் நினைச்சேன். நீயும் அதையே சொல்லிட்டியே’’ என்பார்கள். நான்காவது நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கைத் துணையாக வரும்போது எதையுமே கேட்டுக் கேட்டு செய்வார்கள். ‘‘ஆபீஸ்ல எல்லாரும் ஒண்ணா சாப்பிடப் போனோம். ஏதாவது வாங்கிட்டு வரலாம்னு யோசிச்சேன். போன வாரம்தான் பாவ்பாஜி வாங்கினேன். சரி இந்த வாரம் வேற வாங்கலாம்னுதான் இதை வாங்கிட்டு வந்தேன்’’ என்பார்கள். ‘‘உனக்கு இந்த பிரவுன் கலர் சுடிதார்தான் நல்லாயிருக்கும்’’ என்பார்கள். பொதுவாகவே நான்காவது நட்சத்திரக்காரரை மணமுடிக்கும்போது சுகபோக வாழ்க்கையில் கவனம் செலுத்துவார்கள். ஆறாவது நட்சத்திரக்காரர் வாழ்க்கைத் துணையாக வரும்போது, உடல்நலத்தில் அக்கறை காட்டுவார்கள். ‘‘ஏன் டல்லா இருக்கே? தலை வலிக்குதா… வேணா ரெஸ்ட் எடுத்துக்கோ’’ என்று விசாரிப்பார்கள். அதுபோல மனைவியும், ‘‘கடன் வாங்கி அவஸ்தைப்படாதீங்க.

இந்த நகையை வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க’’ என சட்டென்று விட்டுக் கொடுப்பார்கள். அடிப்படையாக முகத்தைப் பார்த்தே மனதை படித்து விடுவார்கள். எட்டாவது நட்சத்திரக்காரர்களோடு பொருத்தம் பார்த்து சேர்க்கும்போது அதிநட்போடு பழகுவார்கள். கடந்த கால தவறுகள், பழைய குப்பை கூளங்களைக் கிளற மாட்டார்கள். ‘‘பரவாயில்லை, ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை’’ என்று மறக்கச் செய்வார்கள். ‘‘உங்களப் பத்தி அன்னிக்கே தெரிஞ்சிருந்தா கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேன்’’ என்கிற பேச்சே வராது. ‘‘பிஞ்சிலயே பழுத்தவருதானே நீங்க. உங்க புள்ளையும் அதே மாதிரிதான் இருப்பான்’’ என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்ச மாட்டார்கள். ஒன்பதாவது நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுக்கும்போது சூட்சும புத்தியோடு வாழ்க்கையை நகர்த்துவார்கள். ‘‘உங்களுக்குப் பிடிக்காதுன்னு நானே சொல்லிட்டேன்… அடுத்த வாரம் உங்களுக்கு வேலை இருக்கும்னுதான் நான் ஊருக்குப் போகலை…’’ என்று சூட்சுமமாக உதவுவார்கள்.

தலையைப் பிடித்துக் கொண்டாலே மாத்திரையும் கையுமாக நிற்பார்கள். எமர்ஜென்சியான நேரத்தில் சமயோசித புத்தியோடு பேசுவார்கள். இப்படி தினப் பொருத்தத்திற்குள் பல விஷயங்கள் பொதிந்திருக்கின்றன. இதை முடித்தபிறகுதான் கணப் பொருத்தம் பார்க்க வேண்டும். கணங்களில் மூன்று விதங்கள் உண்டு. ஒன்று தேவ கணம், இரண்டாவதாக ராட்சஸ கணம், மூன்றாவது மனுஷ கணம் என குணங்களை வைத்துப் பிரித்திருக்கின்றனர்.திருமணப் பொருத்த விஷயமாக ஒரு அம்மாள் என்னைப் பார்க்க வந்தார். நான் கார்த்திகை நட்சத்திரம், ரிஷப ராசியிலுள்ள பையனின் ஜாதகத்தை எடுத்துக் கொடுத்தேன். ‘‘பையன் ராட்சஸ கணம். பொண்ணை நம்பிக் கொடுக்கலாமா’’ என்று பதறினார். ராட்சஸ கணமென்றாலே ஏதோ கம்சன், இரண்யாட்சன், நரகாசுரன் என்ற அளவிற்கு நினைத்துக் கொள்கிறார்கள். அராஜகமும், அட்டூழியமும் செய்பவர்களாக இருப்பார்கள் என்று எண்ணுகிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ராட்சஸ கணமென்றால் முன்வைத்த காலை பின்வைக்க மாட்டார்கள். தொட்ட விஷயத்தை விடாது தொடர்வார்கள். இறுதி வரை போராடுவார்கள். முகத்துக்கு நேராக பளிச்சென்று பேசுவார்கள்.

லாபமோ, நஷ்டமோ தன் தோளில் சுமப்பார்கள். வஞ்சகமாய் பேசுவதும், வாரிவிடும் தந்திரமும் இருக்காது. தன்னம்பிக்கை அதிகமிருக்கும். யாருக்கும் எளிதில் அடிபணிய மாட்டார்கள். இதுதான் ராட்சஸ கணத்தின் குணங்கள் என்று சொன்னபோது அரைகுறை மனதோடு கேட்டுக் கொண்டு, ‘‘இத்தனை ஜாதகம் கொண்டு வந்திருக்கும்போது தேவ கணமா பாருங்களேன்’’ என்றார்.
தேவ கணம் உயர்ந்ததுதான். இவர்களது செயல்பாடுகள் நேரடியாக இருக்காது. ‘‘என் அபிப்ராயம் இப்படி. நான் சொன்னேன்னு உங்க அம்மாகிட்ட சொல்லாத’’ என்பார்கள். ஒரு காரியமெனில் இவர்களும் போராடுவார்கள். பிடிபடவில்லையெனில், ‘நீங்களே பார்த்து முடிச்சுருங்களேன்’ என்று கைகாட்டி விட்டுவிடுவார்கள். எதிர் வீட்டுக்காரர் என்ன சொல்வாரோ, பக்கத்து வீட்டுக்காரர் ஏதாவது தவறாக எடுத்துக் கொள்வாரோ என்றெல்லாம் பயப்படுவார்கள். ‘‘இப்படியெல்லாம் பேசாதே. நாலு பேர் பார்த்தா என்ன நினைச்சுப்பாங்க?’’ என்று எச்சரித்தபடி இருப்பார்கள். பல நேரங்களில் இப்படி உணர்ச்சிகளையும் ஆசைகளையும் உள்ளுக்குள்ளேயே ஊசலாட வைத்து வெளியிடாமல் தவிப்பார்கள்.

சில சமயம் தங்களையும்மீறி கோப தாபத்தோடு பேசிவிடுவார்கள். பத்து நிமிஷம் கழித்து, ‘‘நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுடுங்க. இன்னிக்கு காலையிலிருந்தே மூடு சரியில்லை’’ என்று முணுமுணுப்பார்கள். பழிவாங்கும் குணமெல்லாம் ராட்சஸ குணத்தை விட அதிகமாகவே இருக்கும். ஆனால், நேரடியாக களத்திற்கு வந்து மோதமாட்டார்கள். மூளைச் சலவை செய்து எவரையாவது ஏவி விடுவார்கள். அதேசமயம் மனசாட்சியோடு பிறரது உணர்வுகளைப் புரிந்து கொள்வார்கள். விட்டுக் கொடுத்து உதவுவார்கள்.மனுஷ கணம் என்பது மத்திமமானது. இரண்டு குணத்தையும் எப்போதாவது பிரதிபலிக்கக் கூடியது. தேவ கணத்தில் வரும் நட்சத்திரங்களையும், ராட்சஸ கணத்தில் வரும் நட்சத்திரங்களையும் கண்டு பிரமித்துக் கொண்டே இருப்பார்கள். தனக்கு மிஞ்சின விஷயங்களை நம்ப மாட்டார்கள். தான் அனுபவப்படாத வரையிலும் அவ்வளவு எளிதில் எதிலுமே நம்பிக்கை பிறக்காது. ‘‘கோபம் வந்தா நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்’’ என்று அரற்றும்போதே, ‘‘சரி, போங்க…’’ என சுருதியைக் குறைப்பார்கள். சட்டென்று முடிவெடுக்க மாட்டார்கள். தேவ கணத்தின் சகிப்புத் தன்மையையும் சாதுர்யத்தையும், ராட்சஸ கணத்தாருடைய ரோஷத்தையும் தன்மானத்தையும் கண்டு வியப்பார்கள்.

சிலவற்றைப் பின்பற்றவும் செய்வார்கள். கணமும் கணமும் ஒன்றானால்தான் குணமும் குணமும் ஒன்றாகும் என்று என் தந்தையார் குறிப்பிடுவார். பொதுவாகவே தேவ கணத்திற்கு தேவ கணத்தையும், மனுஷ கணத்தையும் சேர்க்கலாம். தங்களுக்குள் ஒரே கணமாக இருப்பின் தாராளமாகச் சேர்க்கலாம். தேவமும் ராட்சஸமும் தவிர்த்தல் நல்லது. ராட்சஸத்திற்கு ராட்சஸம்தான் ஏற்றது. இந்த பத்துப் பொருத்தங்களில் முதலிரண்டு பொருத்தங்களை ஆராய்ந்தோம். தினமும், கணமும் சரியாக அமைந்து, குணங்கள் நிறைந்த வரனைத் தேர்ந்தெடுங்கள். இனிய சுபாவமுள்ள வாழ்க்கைத் துணை அமைய வேண்டுமெனில், குழல்வாய் மொழியம்மை என்று குற்றாலம் குற்றாலீஸ்வரர் தலத்தில் அருள்புரியும் அம்மனை வழிபடுங்கள். மேலும், கணப்பொருத்தம் சரியாக அமைய வேண்டுமெனில் கும்பகோணத்தை அடுத்த பாபநாசத்திற்கு அருகேயுள்ள திருப்பாலைத்துறையில் அருளும் தவள வெண்ணகை அம்பாளை தரிசித்து வாருங்கள். அதேபோல கனிவான பேச்சும், அன்புள்ளமும் கொண்ட துணை அமைய வேதாரண்யம் தலத்தில் அருளும் அம்மையான யாழைப் பழித்த மொழியம்மையை தரிசியுங்கள். ஏனெனில் இவளுடைய குரலின் குழைவும் கனிவும் கண்டு, சரஸ்வதி தன் வீணையையே கீழே வைத்துவிட்டு அதிசயத்தோடு இவளையே இத்தலத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பொருத்தத்தை வெறுமே பார்ப்பது மட்டுமின்றி, ‘ஏன் பார்க்கிறோம்’ என்று தெரிந்து பார்த்தால் அது இன்னும் தெளிவைத் தரும். அதனால் மற்ற பொருத்தங்களைப் பற்றி பார்க்கலாம்…

The post இனிமையான வாழ்க்கைத்துணை தரும் திருமணப் பொருத்தம் appeared first on Dinakaran.

Related Stories: