குருவும் திருவும்

குழந்தைகளுக்கு அடிப்படை உறவுகளை அறிமுகம் செய்யும்போது, ‘‘மாதா, பிதா, குரு, தெய்வம்’’ என்று வரிசைப்படுத்தி அறிமுகப்படுத்துவது மரபு. இதில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும் உறவுகளுக்கும், குழந்தைக்கும் இந்த பந்தமுண்டு. இறுதியில் இருக்கும் தெய்வத்திற்கு படைத்தவன் என்ற பந்தமுண்டு.

ஆனால், எந்தவித பந்தமும் இல்லாமல் சம்பந்தப்பட்டு, குழந்தையை இறைவனிடம் சம்பந்தப்படுத்துவதுதான் குருவின் கருணை. “கு’’ என்றால் இருள்; “ரு’’ என்றால் நீக்குபவர். இருளை நீக்கி அருளைப் பெற ஆற்றுப்படுத்துபவர்தான் குருநாதர். தாயின் இடத்தை, தகுந்த தந்தையால் நிறைவு செய்ய முடியும். தாய் மற்றும் தந்தையாகிய இருவரின் இடத்தையும் சரியான குருநாதரால் சமன் செய்யமுடியும்.

குருவைப் பற்றிக் கொண்டால் போதும். கட்டாயமாகத் திருவருள் கிடைத்தே தீரும். அறுபத்து மூன்று நாயன்மார்களில் அப்பூதியடிகளார் என்பவர் சிவபெருமானை வழிபடவில்லை. சிவபெருனை வழிபட்ட திருநாவுக்கரசரைத்தான் வழிபட்டார். அவரைப் பொறுத்தவரை நமசிவாய என்பதைவிட ‘‘நாவுக்கரசு’’ என்பது அவருக்குப் பஞ்சாட்சரம்.

ஆழ்வார்களில் மதுர கவியாழ்வார் பெருமாளைத் துதிக்கவில்லை. நம்மாழ்வார்தான் அவருக்கு நம்பெருமாள். இறைவனை நேரடியாக வழிபடுவதைவிட, குருவின் வழியாக வழிபடுவதுதான் கூடுதல் சிறப்பு மற்றும் அது எளிய வழியும்கூட.

காட்டு வழியில் நடக்கமுற்படும்போது, அதற்கு முன்பே ஒருவர் அவ்வழியில் நடந்திருந்தால், கல்லோ முள்ளோ குத்தி கால்வலி ஏற்படாமல் எந்தச் சிரமமும் இன்றி சேர வேண்டிய இடத்தைச் சேரலாம். காரணம், அவரின் தடம் பதித்த வழி சற்று சௌகரியமாக இருக்கும்.

அதுபோல், கடவுள் வழிபாட்டில் நாமே ஒரு வழியில் சென்றால் இலக்கை அடைவது சற்றுக் கடினம்தான். காரணம் வழியில் பல துன்பங்கள் இருக்கலாம். ஏன்? நாம் தேர்ந்தெடுத்த வழி தவறாகவேகூட இருக்கலாம். அதுவே, குருவாக வந்து ஒருவர், கூட இருந்து வழிகாட்டினால், திருவருள் பெறுவதில் எந்தத் தடங் கலும் இருக்காது. அடர்காட்டுக்குள் கிடைக்கும். வெளிச்சத்தைப் போன்றது ஆண்டவன் வழிபாட்டில் ஆசானின் வழிகாட்டல். அவர் காட்டும் ஒளி நம் அறியாமை இருட்டைப் போக்கவல்லது.

அதனால், குருவை சரியாகக் கண்டுகொண்டால், திருவருள் பெறுவது எளிது. இன்று பல குருமார்கள் தோன்றிவிட்டார்கள். அவர்களுள் தனக்கான, உண்மையான குரு யார் என்று தேர்ந்தேடுத்துக் கொள்ள வேண்டும். தவறான குருவைத் தேர்ந்தெடுத்துப் பயணித்தால், கண் தெரியாத ஒருவர் கண்தெரியாத இன்னொருவர் வழிகாட்ட நடந்தால் இருவரும் சேர்ந்து குழியில் விழுவர் என்கிறார் திருமூலர்.

இப்படிச் சொன்ன திருமூலர், நல்ல குருவைக் காண்பதும், அவர் பெயரை உச்சரிப்பதும், அவரின் வாயிலிருந்து வரும் சொற்களைக் கேட்பதும் சொல்வதும் குருநாதரைப் பற்றி சிந்திப்பதும் சிறந்தது என்கிறார். குருவருளால் திருவருள் கிடைத்தே தீரும்.

முனைவர் சிவ. சதீஸ்குமார்

The post குருவும் திருவும் appeared first on Dinakaran.

Related Stories: