திருமணத்துக்கு எப்படிப் பார்க்கணும் ராசிப் பொருத்தம்?

சண்டை, சச்சரவு எனில் பஞ்சாயத்து பேச வருபவர்கள், ‘‘ராசியாப் போங்க எதுக்கு ஒருத்தரோட ஒருத்தர் மோதிக் கிட்டிருக்கீங்க’’ என்று விலக்கி விடுவதை எல்லோரும் கேட்டிருப்பீர்கள். சிலரைப் பார்த்தால் நமக்குப் பிடிக்கிறது. சிலரை இதற்குமுன் பார்த்திருக்கவே மாட்டோம். ஆனால், முதல் பார்வையிலேயே பிடித்துப் போகும். இவையெல்லாம் ராசிகள் மறைமுகமாகச் செய்யும் மாயமே ஆகும். திருமணத்துக்கான பத்து பொருத்தங்களில் ராசிப் பொருத்தம்தான் மிகவும் முக்கியமானது.

‘‘இந்த வீட்டுக்குக் குடிவந்து ஏழு வருஷம் ஆகுது. பக்கத்து வீட்ல இருக்கற புருஷனும், பொண்டாட்டியும் சண்டை போட்டு பார்த்ததே இல்லை. அவங்க அதிர்ந்து பேசியும் கேட்டதில்லை’’ என்று எந்த தம்பதியரையாவது யாரேனும் குறிப்பிட்டுப் பேசினால், அவர்களுக்குள் ராசிப் பொருத்தம் அமோகமாக இருக்கிறது என்று அர்த்தம்.

அடிப் படையாக ராசிப் பொருத்தம் இருந்தால், தம்பதியருக்குள் ஈகோ பிரச்னையே வராது. நாத்தனார், ஓரகத்தி, மாமனார், மாமியார், அண்ணன், தம்பி என்று நெருங்கிய உறவினர்களாலும்கூட தம்பதியரைப் பிரிக்க முடியாது. ராசிப் பொருத்தம் இருந்தால், பெண் பார்க்கப் போகும்போதே எல்லா தகுதிகளையும் மீறிய ஒரு ஈர்ப்பு இருக்கும். ஜாதி, மதம், இனம், மொழி தாண்டி கண்டதும் காதலைத் தூண்டுவதுகூட இந்த ராசிப் பொருத்தம்தான்.
‘‘அதோ அந்த பிங்க் கலர் புடவைய எடுங்களேன்’’ என்று கணவர் சுட்டும் போதே, ‘‘அட… நானும் அதையேதாங்க நினைச்சேன். என் மனசுல இருக்கறத அப்படியே சொல்றீங்க’’ என்று பரஸ்பரம் ரசனைகூட ஒரே மாதிரி இருக்கும்.
‘‘அத்தனை பேரை வச்சுக்கிட்டு அந்த இடத்துல அவரு அப்படிப் பேசியிருக்கக் கூடாதுதான். அதனால என்ன? இப்பவும் அவர்மேல எனக்கு எந்த வருத்தமும் இல்லை. சூழ்நிலை அவரை அதுமாதிரி நடக்க வச்சுடுச்சி’’ என்று பேசினால் நூறு சதவீத ராசிப் பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம். கணவன் மனைவிக்குள் அந்த நேரம் உணர்ச்சிவசப்பட்டு பேசினாலும், அடுத்த நிமிடம் அரவணைத்துக் கொண்டு போவதற்குத்தான் ராசிப் பொருத்தம் பார்ப்பது.
ராசிப் பொருத்தம் இருந்தால், அடுத்தவர்கள் மத்தியில் கணவரை விட்டுக் கொடுக்காது பேசுவார்கள். ராசிப் பொருத்தத்திற்குப் பின்னால் குடும்ப ஒற்றுமையும் இருக்கிறது.

இருவரும் ஒரே ராசியாக இருந்தால் திருமணம் செய்து கொள்ளலாமா? இப்படி இருந்தால் ‘ஏக ராசி’ என்று சொல்லி, ‘பொருத்தமும் இருக்கிறது’ என்று பழைய நூல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், நடைமுறையில் இதில் முரண்பாடுகள் இருக்கின்றன. ஒரே நட்சத்திரம், ஒரே ராசி என்று சேர்க்கும்போது அவர்களுக்கு ஒரே தசை நடைபெறும். அப்போது ஒருவருக்கு பிரச்னை எனில் மற்றொருவருக்கும் பிரச்னை இருக்கும். ஒருவருக்கு ஏழரைச் சனி நடந்தால் மற்றொருவருக்கும் ஏழரைச் சனி நடக்கும். அப்படித்தான் அஷ்டம சனியும் வந்து போகும். இதனால் இரண்டு பேருமே பாதிக்கப்படுவார்கள். இதில் ஈகோ மோதலும், நடைமுறை சங்கடங்களும்கூட ஏற்படும்.
‘‘பையன் ஸ்கூலுக்கு கிளம்பும்போது வாட்டர் பாட்டில் கொடுத்திருப்பேன்னு நினைச்சேன்… நீ கொடுக்கலையா?’’ என்றும், ‘‘ஐயோ… நானும் எலக்ட்ரீஷியனுக்குப் பணம் கொடுத்தேன்… நீ வேற கொடுத்தேன்னு சொல்ற’’ என்று ஒரே மாதிரியான சிந்தனை இருக்கும். செய்தால் இரண்டு பேரும் ஒரே வேலையைச் செய்வார்கள். இல்லையெனில் இருவரும் அப்படியே இருப்பார்கள். இப்படி ஒரே மாதிரியான சிந்தனையும், செயலும் இருக்கும்போது பிரச்னைகள் தானாக வந்து விடும்.

இதில் ஒரேயொரு சலுகை வேண்டுமானால் இருக்கிறது… ஒரு ராசிக் கட்டத்திற்குள் மூன்று நட்சத்திரங்கள் இருப்பது உங்களுக்குத் தெரியும். அதில் முதல் நட்சத்திரம் ஆணின் நட்சத்திரமாகவும் கடைசி நட்சத்திரம் பெண்ணின் நட்சத்திரமாகவும் இருந்தால் அவர்களுக்கு திருமணம் செய்துவிடலாம். ஏனெனில் வெவ்வேறு தசை நடக்கும் காலங்களில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் தப்பித்துக் கொள்வார்கள். ஒருவருக்கு சனி தசை நடக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு சனி ஆகாத கிரகமாக இருந்தால், இன்னொருவருக்கு குரு தசை நடந்து பிரச்னையின் வீரியம் குறைந்து விடும். உதாரணமாக மிதுன ராசியை எடுத்துக் கொள்வோம். அதில் மிருகசீரிஷம் நட்சத்திரம் பையனுக்கு அமைந்து, பெண்ணுக்கு புனர்பூசம் என்று வந்தால் தாராளமாக திருமணம் செய்யலாம். அந்த நட்சத்திரங்களின் குணங்களின் கலவை அழகாக இருவருக்குள்ளும் ஒத்துப்போகும். ஒரு பிரச்னை வந்தால், ‘‘சே… இவ்ளோதானே! நான் பார்த்துக்கறேன். போனா போயிட்டு போகுது…’’ என்று ஆறுதல் தருவார்கள். ஒரே ராசியாகவோ, நட்சத்திரமாகவோ வந்தால், ‘‘உனக்கு சுயமாவும் தெரியாது… சொல்புத்தியும் கிடையாது’’ என்று ஒருவருக்கொருவர் மோதிக் கொள்வர்.
வேறெந்த முறையில் எல்லாம் ராசிப் பொருத்தம் வருகிறது என்று பார்ப்போமா?

ஜோதிடத்தில் ராசிகளுக்குள் ‘சம சப்தப் பார்வை’ இருந்தால் அந்த ராசிக்காரர்களை சேர்க்கலாம் என்று இருக்கிறது. அதாவது 180 டிகிரி பார்வை இருக்க வேண்டும். சப்த என்றால் ஏழு என்று பொருள். சரியாக ஒரு ராசிக்கு ஏழாவது ராசியை சமசப்த ராசி என்று சொல்வார்கள். பெண்ணின் ராசிக்கு ஏழாவதாக வரும் ஆணின் ராசிக்குப் பொருத்தம் சரியாக இருக்கும்.

மேஷத்திற்கும் துலாத்திற்கும் பொருத்தம் உண்டு. அதேபோல ரிஷபத்தையும் விருச்சிகத்தையும் சேர்க்கலாம். மிதுன ராசிக்குள் பெண்ணின் நட்சத்திரம் புனர்பூசமாக இருக்க, தனுசு ராசியில் மூலம் நட்சத்திரம் ஆணாக இருந்தால் சரியாக இருக்கும். மகர ராசியில் பெண் உத்திராடமாகவும், கடகத்தில் பூசம் ஆணாகவும் இருந்தால் சரி. கும்பத்தில் பூரட்டாதி பெண் நட்சத்திரமாகவும், சிம்மத்தில் மகம் ஆண் நட்சத்திரமாகவும் இருந்தால் அமோக சமசப்த பொருத்தம் உண்டு. கன்னி ராசியில் பெண் உத்திரமாகவும் அதற்கு நேர் ராசியான மீனத்தில் ஆண் உத்திரட்டாதியாகவும் வந்தால் வாழ்க்கை ஒளிமயமாக இருக்கும். இப்படி நேர் பார்வையாக இருக்கும்போது, ‘நான் பேச நினைப்பதெல்லாம்… நீ பேச வேண்டும்’ என்று ரொமான்ஸாக இருப்பார்கள்.

பெண்ணின் ராசிக்கு மூன்றாவது ராசியாக ஆண் ராசி வந்தால் ராசிப் பொருத்தம் இருக்காது என்று சில நூல்கள் சொல்கின்றன. அதேபோல ராசிக்கு இரண்டாவது ராசியாக ஆண் ராசி வந்தால் சிறு சிறு விபத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். தகாத வார்த்தைகளில் தம்பதியர் பேசிக் கொள்வார்கள். அதேபோல ஐந்தாவது ராசியாக வந்தால், உத்யோகத்தின் பொருட்டோ, வியாபாரத்தின் பொருட்டோ அடிக்கடி பிரிய வேண்டி வரும். இப்படி திருமணம் செய்த பல தம்பதியர் போனிலேயே குடித்தனம் செய்து கொண்டிருப்பதையும் பார்க்கிறேன். ‘‘பையன் பொறந்து பேர் வைக்கறப்ப வந்தாரு… இப்போ எல்.கே.ஜி. சேர்க்கும்போது வர்றேங்கறாரு’’ என்று ஏதோ காரணத்தினால் பிரிந்து வெகுகாலம் கழித்து இணைவார்கள்.

பன்னிரண்டாவது ராசியைச் சேர்ந்த ஆணை திருமணம் செய்தால், ஆயுள் நீடித்திருக்கும். ஆனால், திடீர் திடீரென்று செலவுகளால் அலைக் கழிக்கப்படுவார்கள். ‘‘நல்லா சம்பாதிக்கறாருப்பா… ஆனா, வீட்டுக்கு வர்றத்துக்குள்ள கால்வாசி பணத்தை ஏதோ செலவு… என்னமோ கடன்னு கொடுத்துட்டு வந்துடறாரு’’ என்று புலம்பல் எழும். வீடு வாங்கி… நிலம் வாங்கி… அதையும் விற்று மீண்டும் வாங்கி என்பதாக ஏனோதானோ என்று குடித்தனம் ஓடும்.
என்னைப் பார்க்க ஒருவர் வந்தார். ‘‘சார்… சஷ்டாஷ்டகம்னு சொல்லி சொல்லியே எங்க குடும்ப ஜோசியரு எல்லா வரனையும் வேண்டாம்னு சொல்றாரு. என்னைப்போல மகள் கல்யாணத்துக்காக வரன் தேடறவங்க எல்லாருக்குமே இப்படித்தான் சொல்றாரு. இதென்ன செவ்வாய் தோஷம் புதுவிதமா இருக்கே…’’ என்று புலம்பினார்.

அவருக்குச் சொன்ன விளக்கம் இங்கேயும் அவசியப்படுகிறது. ‘‘சஷ்டம்னா ஆறு. அஷ்டம்னா எட்டு. பெண்ணோட ராசியிலிருந்து எண்ணிக்கிட்டே வந்தீங்கன்னா ஆறாவது ராசியா எது வருதோ அது அந்த பொண்ணுக்கு பொருந்தாது. அப்படியே அந்தப் பையனோட ராசிலேர்ந்து எண்ணினா எட்டாவது ராசியா பெண்ணோட ராசியும் வரும். அதைத்தான் சஷ்டாஷ்டகம்னு சொல்றாங்க. இப்படி ஒரு ஆறு, அப்படி ஒரு எட்டு அவ்ளோதான். இதனால குழந்தைப் பிறப்பு தாமதமாகும். தந்தைக்கும் மகனுக்கும் மோதல் இருந்து கொண்டே இருக்கும். ‘நான் மெடிக்கல் படிடான்னு சொன்னேன்… அவன் எஞ்சினியரிங்தான் படிப்பேன்னு பிடிவாதமா இருக்கான்’ என்று இரண்டு பக்கமும் பிடிவாதமாக இருப்பார்கள். ‘நாலு காரு வச்சிருந்தாரு. இப்போ நடந்துதான் ஆபீசுக்கே போறாரு’ என்கிற நிலை வரும். ஆரம்பத்தில் கொஞ்சம் வளர்ச்சியைக் கொடுக்கும். பிறகு அழுத்தும். ‘மொதல்ல மில் ஓனரா இருந்தாரு. இப்போ வேற கம்பெனியில வேலை செய்யறாரு’ என்றெல்லாம் மாறும். மேலும் தம்பதியரில் ஒருவர் ஆடம்பரச் செலவு செய்பவராக இருப்பார்.

ஆனால், இதிலும் ஜோதிடத்தில் சில விலக்குகள் உள்ளன. அப்படியே இந்த விஷயத்தை புரட்டிப்போட்டு ‘சுப சஷ்டாஷ்டகம்’ என்று ராசிக்குள் பொருத்தத்தை ஏற்படுத்துகின்றன. பெண்ணின் ராசி மேஷம் என்று வைத்துக் கொள்வோம். ஆணின் ராசி கன்னி எனில் எண்ணிப் பார்த்தால் ஆணின் ராசியான கன்னி ஆறாகவும், கன்னியிலிருந்து மேஷம் எட்டாகவும் வரும். அப்போது தோஷம் என்று விலக்கலாம் அல்லவா? ஆனால், இதுபோல சில ராசிகளுக்கு விலக்கு கொடுத்து அவை சுப சஷ்டாஷ்டகம் என்றும், யோகத்தைக் கொடுக்கும் அம்சங்களாக மாறும் என்றும் ஜோதிட நூல்கள் சொல்கின்றன. அதாவது தனுசு ராசிப் பெண்ணையும் ரிஷப ராசி ஆணையும் சேர்க்கலாம். துலாத்தையும் மீனத்தையும் சேர்த்தால் மேன்மை பெருகும். கும்பத்தையும் கடகத்தையும் இணைக்க, ஏற்றம் பெறுவார்கள். சிம்மத்தையும் மகரத்தையும் சேர்க்க, சிறப்பான வாழ்க்கை வாழ்வர். மிதுனத்தையும் விருச்சிகத்தையும் சேர்க்கும்போது வியக்கும் வகையில் முன்னேற்றம் இருக்கும்.

இவை எல்லாவற்றையும் ஓரளவு புரிந்து கொண்டீர்களா… இப்போது எடுத்த எடுப்பில் ராசிப் பொருத்தம் சரியாக அமைய என்ன செய்யலாம் என்றும் சொல்கிறேன். பெண்ணின் ராசிக்கு ஒன்பதாவது, பத்தாவது, பதினொன்றாவது ராசியாக ஆண் வந்தால் ராசிப் பொருத்தம் மகோன்னதமாக இருக்கிறது என்று உறுதியோடு இருங்கள். ஒன்பதாவது ராசி எனில் சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்வார்கள். பத்தாவது ராசியெனில் திடீர் யோகம் ஏற்படும். மாப்பிள்ளை வேலை பார்க்கிறவராக இருந்தால் உத்யோகத்தை விட்டுவிட்டு வியாபாரம் செய்பவராக மாறிவிடுவார். ‘என்னை கல்யாணம் பண்ணிக்கும்போது உங்க அப்பாக்கு ஏழாயிரம் ரூபா சம்பளம். அடுத்த ஒரு வருஷத்துல உங்கப்பாவே இருபது பேருக்கு சம்பளம் கொடுக்கிற ஓனரா மாறிட்டாரு’’ என்று பின்னாளில் சொல்வார்கள். பதினோராவது ராசியைச் சேர்ந்தவர் எனில் எப்போதும் சந்தோஷம்தான்.

ராசிப் பொருத்தத்தைப் பார்த்துப் பார்த்து சேருங்கள். வாழ்க்கையை எப்படி திட்டமிடுகிறோமோ, அதுபோல ஜாதகங்களை சரியாக அலசி ஆராய்ந்து சேருங்கள். நூறு பார்த்தால் ஒன்று சரியாக இருக்கும். ஆனால் அதைப் பொறுமையாகப் பாருங்கள். ராசிப் பொருத்தம் சரியாக அமையவும் கோயில்கள் உள்ளன. இது தம்பதியரின் ஒற்றுமையையும், அன்யோன்யத்தையும் உணர்த்தும் விஷயம் என்பதால், ஈசனும் உமையும் சேர்ந்திருக்கும் அமைப்புள்ள இறைவனை வணங்குதல் சரியான விஷயமாகும். எப்பேர்ப்பட்ட கணவன் மனைவி பிரச்னையாக இருந்தாலும் திருச்சத்திமுற்றம் எனும் தலத்தில் அருளும் தழுவக் குழைந்த நாதரை தரிசித்த அளவில் உடனடியாக பிரச்னைகள் தீர்ந்து விடுகின்றன. சிவ சக்தி ஐக்கியத்தை இக்கோயிலின் மூலவராக அமைந்துள்ள மூர்த்தங்கள் உணர்த்துகின்றன. ஈசனின் லிங்க சொரூபத்தை அம்பாள் தழுவ, அப்படியே ஈசன் குழைந்து பேரன்பில் முகிழும் அற்புதமான மூர்த்தமாகவும் இது விளங்குகிறது. இத்தலம் கும்பகோணத்திற்கு அருகேயுள்ள பட்டீஸ்வரத்திற்கு வெகு அண்மையில் உள்ளது. அதேபோல காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் அருளும் ஈசனை தரிசியுங்கள். கோயிலுக்குள்ளேயே அமைந்துள்ள அம்பாள் தவமிருந்த மாமரத்தையும் தரிசித்து வணங்கி வாருங்கள்.

The post திருமணத்துக்கு எப்படிப் பார்க்கணும் ராசிப் பொருத்தம்? appeared first on Dinakaran.

Related Stories: