மக்களவை 4ம் கட்ட தேர்தல் 96 தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது: ஆந்திரா சட்டப்பேரவைக்கும் 13ம் தேதி வாக்குப்பதிவு

புதுடெல்லி: மக்களவை 4ம்கட்ட தேர்தலை முன்னிட்டு 96 தொகுதிகளில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது. வரும் 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதால் அதற்கான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப். 19ம் தேதி தொடங்கி கடந்த ஏப். 26, மே 7ம் தேதியுடன் மூன்று கட்டங்கள் முடிந்துள்ளன. இன்னும் வரும் 13ம் தேதி, 20ம் தேதி, 25ம் தேதி, ஜூன் 1ம் தேதி ஆகிய 4 கட்டங்களில் வாக்குப்பதிவு நடைபெற வேண்டியுள்ளது. மீதமுள்ள 4 கட்ட வாக்குப்பதிவுகள் முடிந்தவுடன் ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்நிலையில் நான்காம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட 96 தொகுதிகளில் சூடுபிடித்துள்ளது.

வரும் 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதால், இன்று மாலையுடன் (மே 11) பிரசாரம் ஓய்கிறது. ஆந்திராவில் 25 மக்களவை தொகுதி, 175 சட்டப்பேரவை தொகுதி (ஒரே கட்டம்), தெலங்கானாவில் 17 மக்களவை தொகுதிகள், உத்தரப் பிரதேசத்தில் 13, மகாராஷ்டிராவில் 11, மத்தியப் பிரதேசத்தில் 8, மேற்குவங்கத்தில் 8, பீகார் மற்றும் ஜார்கண்டில் தலா 5, ஒடிசாவில் 4 மக்களவை மற்றும் 28 சட்டசபை தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. 4ம் கட்ட தேர்தல் நடைபெறும் 96 தொகுதிகளிலும் மொத்தம் 4,264 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தற்போது 1,717 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. அரசியல் கட்சி தலைவர்களும், வேட்பாளர்களும் இறுதி கட்ட பிரசாரத்தை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

ஸ்டார் வேட்பாளர்கள்
1. சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் – கன்னோஜ் (உத்தரப் பிரதேசம்)
2. திரிணாமுல் மூத்த தலைவர் மஹுவா மொய்த்ரா (எம்பி பதவி சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்) – கிருஷ்ணநகர் (மேற்கு வங்கம்)
3. காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி – பஹரம்பூர் (மேற்கு வங்கம்)
4. கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் – பஹரம்பூர் (மேற்கு வங்கம்)
5. ஆந்திர முதல்வர் ஜெகன் சகோதரி ஒய்.எஸ்.சர்மிளா – கடப்பா (ஆந்திரப் பிரதேசம்)
6. ஒன்றிய அமைச்சர் அர்ஜுன் முண்டா – குந்தி (ஜார்கண்ட்)
7. நடிகர் சத்ருகன் சின்ஹா – அசன்சோல் (மேற்கு வங்கம்)
8. நடனக் கலைஞர் மாதவி லதா – ஐதராபாத் (தெலங்கானா)
9. அசாதுதீன் ஓவைசி – ஐதராபாத் (தெலங்கானா)

The post மக்களவை 4ம் கட்ட தேர்தல் 96 தொகுதிகளில் பிரசாரம் இன்று மாலை ஓய்கிறது: ஆந்திரா சட்டப்பேரவைக்கும் 13ம் தேதி வாக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: