அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம் 1,303 ஆதிதிராவிட மகளிர், இளைஞர்கள் தொழில் முதலாளிகளாக உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய சாதனை

சென்னை: அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம் 1,303 ஆதிதிராவிட மகளிர் மற்றும் இளைஞர்களை தொழில் முதலாளிகளாக்கி தமிழ்நாடு அரசு புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2030க்குள், ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்த உறுதி பூண்டுள்ளார். அதற்காக, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டங்களைத் தீட்டி செம்மையாக செயல்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக, ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக, முதல்வர், ஆழ்ந்த சிந்தனையுடன், “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்” எனும் புதிய திட்டத்தை கடந்த ஆண்டு மே திங்களில் அறிவித்து, ரூ.100 கோடி அனுமதித்தார். இந்த திட்டம், பட்டியல் இன மற்றும் பழங்குடி இன இளைஞர்களைத் தொழில் முனைவோராக்கும் ஓர் அருமையான திட்டமாகும்.

இன் சிறப்பம்சம் என்னவென்றால், திட்டத்திற்கான தொழில் முதலீட்டில் 35 சதவீதத் தொகையை அரசு மானியமாக வழங்குகிறது; 65 சதவீத மூலதன தொகைக்குரிய வங்கிக் கடன் வட்டியில் 6 சதவீத வட்டி மானியமும் அளிக்கப்படுகிறது. இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஆதிதிராவிட, பட்டியலின மக்களிடையே வளர்த்திட மாவட்ட அளவிலும், கிராமங்கள் அளவிலும் பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டன. அதன் பயனாகப் பட்டியலின-பழங்குடியின இளைஞர்களிடமிருந்து தொழில் தொடங்க இணையத்தின் மூலம் 12,472 விண்ணப்பங்கள் பெறப்பட்டதில் 7,365 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுப் பல்வேறு வங்கிகளுக்குப் பரிந்துரைகள் செய்யப்பட்டன.

கடந்த நிதியாண்டில் குறுகிய காலத்திற்குள்ளாகவே 2,136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன்கள் அனுமதிக்கப்பட்டன. அத்துடன், இணையம் வழியாக நிதி மேலாண்மை, வர்த்தக யுக்திகள், வரவு செலவு மேலாண்மை போன்ற தலைப்புகளின்கீழ் தொழில் முனைவு பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 1,303 தொழில் முனைவோர்க்கு அரசு மானியமாக மட்டும் ரூ.159.76 கோடி வழங்கப்பட்டது. இதில் 288 மகளிர் தொழில் முனைவோர் மட்டும் ரூ.33.09 கோடியை பெற்றனர். இந்த திட்டத்தின் கீழ் அரசு மானிய உதவியுடன் வங்கிக் கடன்கள் பெற்று ஆதிதிராவிட, பழங்குடியின இளைஞர்கள் பலர், பல்வேறு தொழில்களைத் தொடங்கித் தொழில் முதலாளிகள் ஆகினர்.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட தொழில் மையம் மூலம் பயன்பெற்ற அஞ்சலி கூறியதாவது: நான், நார் இழைப் பைகள் நெய்யும் தொழிலை தொடங்க எண்ணியிருந்தேன். தமிழ்நாடு அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் பற்றி அறிந்தேன். பின்னர், சிவகங்கை மாவட்டத் தொழில் மைய அலுவலகம் சென்று தெரிவித்தேன். அதனைத்தொடர்ந்து, இணையதளம் வாயிலாக இத்திட்டத்தில் விண்ணப்பித்து ரூ.32,70,000 வங்கி கடன் பெற்று, அதற்கு 35 சதவீத மானியமும் 6 சதவீத வட்டி மானியமும் பெற்றுத் தொழில் தொடங்கினேன். தற்போது 10 பணியாளர்கள் எனது நிறுவனத்தில் பணியாற்றுகின்றனர். இதன்மூலம் மாதம் ரூ.4 லட்சம் வருவாயும், ரூ.70,000 லாபமும் பெறுகிறேன்.இத்திட்டம் என்னைப்போன்ற தாழ்த்தப்பட்ட பெண்களின் சுயதொழில் முயற்சிகளுக்கு ஊக்கமளித்து எங்கள் வாழ்க்கையையே மாற்றியுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்திய முதல்வருக்கு என்னுடைய நன்றி என்று கூறினார்.

தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மூலம் தொழில் முகவரான சந்தோஷ்கவின் என்ற ஆதிதிராவிட இளைஞர் கூறியதாவது: தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் தொடங்க இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தேன். தூத்துக்குடி மாவட்டத் தொழில் மைய அலுவலகம் மூலம் ரூ.1 கோடியே 96 லட்சத்து 92 ஆயிரம் வங்கிக் கடன் கிடைத்தது. அதில், 35 சதவீதத் தொகையான 60 லட்சத்து, 32 ஆயிரம் மானியமாக வந்தது. தீப்பெட்டி தொழிலில் எனக்கு மாதம் ரூ.30 லட்சம் வருவாய் கிடைத்தது. 15 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கியுள்ளேன்.அண்ணல் அம்பேத்கர் பெயரில் ஓர் அருமையான திட்டத்தை தொடங்கி ஆதிதிராவிட சமுதாய இளைஞர்களைத் தொழில் முதலாளிகளாக உயர்த்தும் முதல்வர் மு.க.ஸ்டாலினை நன்றியுடன் வணங்குகிறேன் என்றார். இத்திட்டத்தில் 1,303 தொழில் முனைவோர்க்கு அரசு மானியமாக மட்டும் ரூ.159.76 கோடி வழங்கப்பட்டது. இதில் 288 மகளிர் தொழில் முனைவோர் மட்டும் ரூ.33.09 கோடியை பெற்றனர்.

The post அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மூலம் 1,303 ஆதிதிராவிட மகளிர், இளைஞர்கள் தொழில் முதலாளிகளாக உயர்வு: தமிழ்நாடு அரசு புதிய சாதனை appeared first on Dinakaran.

Related Stories: