தேசியவாத காங்கிரஸ் கட்சியை 2004ம் ஆண்டே உடைத்திருக்க வேண்டும்: அஜித் பவார் பேச்சு

இந்தபூர்: மகாராஷ்டிரா மாநிலம் பாராமதி தொகுதியில் சரத் பவார் கட்சி சார்பில் போட்டியிடும், அவருடைய மகள் சுப்ரியா சுலேயை எதிர்த்து துணை முதல்வர் அஜித் பவார் தனது மனைவி சுனேத்திராவை வேட்பாளராக நிறுத்தியுள்ளார். மனைவிக்கு ஆதரவாக இந்தபூரில் தேர்தல் பிரசாரம் செய்த அஜித் பவார் பேசியதாவது: 1978ம் ஆண்டு மகாராஷ்டிராவில் வசந்ததாதா பாட்டீல் அரசை சரத் பவார் கவிழ்த்தார். அப்போது நான் சரத் பவாருக்கு எதிராக எதுவும் பேசவில்லை. 1999ம் ஆண்டு சோனியா காந்தி வெளிநாட்டவர் என்று கூறி காங்கிரஸ் கட்சியை உடைத்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார்.

பின்னர் அதே ஆண்டு ஆட்சி அமைப்பதற்காக சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தார். 2004ம் ஆண்டு மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியை விட தேசியவாத காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றிய போது, முதல்வர் பதவியை காங்கிரஸ் கட்சி தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு விட்டுக்கொடுத்தது. ஆனால் சரத் பவார் கூடுதலாக 4 அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்டு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தார். அப்போதே நான் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்திருக்க வேண்டும். அவர் எடுக்கும் முடிவுகள் ராஜதந்திரம் என் வர்ணிக்கப்படுகிறது. நான் எடுக்கும் முடிவுகள் துரோகம் என்று வர்ணிக்கப்படுகிறது.
இவ்வாறு அஜித் பவார்பேசினார்.

The post தேசியவாத காங்கிரஸ் கட்சியை 2004ம் ஆண்டே உடைத்திருக்க வேண்டும்: அஜித் பவார் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: