மழையால் பாதிக்கப்பட்ட கோடைசாகுபடி பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்

வேதாரண்யம், மே 19: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோடை மழையால் பாதித்த எள், கடலை ,உளுந்து பயிருக்கு உரிய நிவாரண வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தலைஞாயிறு, கீவளூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி அறுவடைக்கு பின்பு குறைந்த செலவில்அதிக லாபம் தரக்கூடிய எள், கடலை, சணல் மற்றும் பணப் பயிர்களான மா, முந்திரி உள்ளிட்ட பயிர்கள் எதிர்பாராத விதமாக பெய்த கோடை மழையினால் கடும் பாதிப்புக்கு உள்ளானது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 15,000 ஏக்கரில் சம்பா சாகுபடிக்கு பிறகு எள், கடலை உளுந்து பயிறுவகைகள் பயிரிடப்பட்டிருந்தன.

சம்பா சாகுபடி அறுவடை நிறைவுற்ற நிலையில் குறைந்த ஈரப்பதத்திலும், அதிக அளவு உரம் இடுதல் இல்லாமலும், பூச்சி தாக்குதல் இல்லாமலும், அதிக வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய எள் சாகுபடியை விவசாயிகள் ஆர்வமுடன் அதிகளவில் செய்து இருந்தனர். தற்போது எள் செடிகள் நன்றாக வளர்ந்து நிலையில், குறைந்த செலவில் அதிக லாபம் தரக்கூடிய எள் சாகுபடிக்கு அவ்வப்போது கோடை மழையும் பெய்து நன்றாக வளர்ந்து எள் காய்க்கத் தொடங்கின. இந்த நிலையில்பருவத்தை தவறி பெய்த கோடை மழையால் அனைத்து கோடை சாகுபடியும் நீரில் சூழ்ந்து அழுக தொடங்கி விட்டன. மழையால் பாதித்த கோடை சாகுபடியினை வேளாண்மை துறையினர் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும். சம்பா சாகுபடியில் ஏற்பட்ட நஷ்டத்தை கோடை சாகுபடியில் ஈடு செய்து விடலாம் என்று காத்திருந்த விவசாயிகளுக்கு இந்த மழையால் மிகுந்த பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து பாதித்த அனைத்து கோடை சாகுபடிதாரர்களுக்கும் உரிய நிவாரண வழங்க வேண்டும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post மழையால் பாதிக்கப்பட்ட கோடைசாகுபடி பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: