கோவை, டிச.18: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் நடந்து முடிந்தது. கடந்த ஜனவரி மாதம் வெளியான வாக்காளர் பட்டியலில் 32,25,198 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது சுருக்க திருத்த பணிகளின் மூலமாக 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. மொத்த வாக்காளர்களில் 18 முதல் 20 சதவீதம் பேர் நீக்கம் செய்யப்படும் நிலை இருக்கிறது.
இறந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் தவிர மற்றவர்கள் வாக்காளர் திரும்ப இடம் பெற வேண்டுமானால், அவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் படிவம் 6ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் இவர்கள் திரும்ப வாக்காளர்களாக சேர்க்க முடியும். எஸ்ஐஆர் பணிகள் முடிந்த நிலையில் மீண்டும், இரண்டாம் கட்டமாக சந்தேக விண்ணப்பங்களை திரும்ப சோதனை செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பின்னர் இந்த ஆய்வு பணி நடத்தப்படும். குறிப்பாக மூத்த வாக்காளர்களின் விண்ணப்ப படிவங்களில், தந்தை, பட்டனார் குறித்த விவரங்களின் உண்மை தன்மை அறிய வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தேர்தல் கமிஷன் தகவல் தெரிவித்திருக்கிறது.
சில வாக்காளர்கள் தங்களது மூதாதையர் பெயர், ஓட்டு சாவடி குறித்த விவரங்களை குறிப்பிடாமல் படிவங்களை ஒப்படைத்துள்ளனர். குறிப்பாக 2002-2005ம் ஆண்டு கால கட்டத்தில் ஓட்டு உரிமை வைத்திருந்த சிலர் தங்களவு விவரங்களையும், தந்தை, பட்டனார் விவரங்களை குறிப்பிடாமல் இருந்தால் அதை விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சரியான தகவல் இருந்தால் அந்த விண்ணப்பங்கள் அப்படியே ஏற்கப்படும்.
இல்லாவிட்டால் அதில் உள்ள விவரங்கள் தொடர்பாக சந்தேகம் தெரிவிக்கப்படும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இதில் தகுதியற்ற மேலும் சில வாக்காளர்கள் நீக்கம் செய்ய வாய்ப்புள்ளது.
