வாலாஜாபாத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட ஒரு ஆழ்துளை கிணறுக்கு இருவித பெயர் பலகை


வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட ஒரு ஆழ்துளை கிணறுக்கு, இருவிதமான பெயர் பலகை அமைக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. வாலாஜாபாத் ஒன்றியம், வில்லிவலம் ஊராட்சியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ஒன்றிய பொது நிதி, ஊராட்சி நிதி, சட்டமன்ற உறுப்பினர் நிதி உள்ளிட்ட பல்வேறு நிதிகள் மூலம் குடிநீர், சாலை, மின்சாரம் ஆகிய வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில், வில்லிவலம் ஊராட்சியில் கோடை காலத்திற்கு முன்பு குடிநீர் பற்றாக்குறையை போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆழ்துளை கிணறு அமைத்து, அதன்மூலம் குடிநீர் விநியோகிக்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல், மற்றொரு பகுதியில் நாயக்கன்பேட்டை ஊராட்சிக்கு போடப்பட்ட ஆழ்துளை கிணறு திட்ட பலகை எழுதியுள்ளனர். ஒரே ஆழ்துளை கிணற்றில் ஒருபுறம் நாயக்கன்பேட்டை ஊராட்சிக்கும், மற்றொரு புறம் வில்லிவலம் ஊராட்சி குடிநீர் பணி என ஒரே திட்டத்திற்கு இரு விதமான நிதியை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என எழுதப்பட்டிருந்தது.இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குநர் ஜெயக்குமார் கூறுகையில், ‘குடிநீர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை, பணியும் நடைபெறவில்லை. தவறுதலாக யாரோ பணி நடந்ததுபோல மற்றொரு ஊராட்சியின் ஆழ்துளை கிணறு இருக்கும் இடத்தில் எழுதியது காரணமாகவே கடந்த சில நாட்களுக்கு முன்பே சென்று ஆய்வு செய்து தவறுதலாக எழுதப்பட்டிருந்ததை அழித்து விட்டோம். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது புகார் அளிக்க உள்ளோம் என தெரிவித்தார்.

The post வாலாஜாபாத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட ஒரு ஆழ்துளை கிணறுக்கு இருவித பெயர் பலகை appeared first on Dinakaran.

Related Stories: