நீண்ட ஆயுளோடு நிறைவான வாழ்க்கை :ஜோதிட ரகசியங்கள்

ஒரு ஜாதகத்தில் ஆயுள் பாவம் முக்கியம். அது நீண்ட ஆயுளா, மத்திம ஆயுளா, குறுகிய ஆயுளா என்பதை முதலில் பார்க்க வேண்டும். வேதம் ஒவ்வொரு மனிதனுக்கும் 100 வயது நிர்ணயம் செய்திருக்கிறது. ‘‘வேதநூல் பிராயம் நூறு” என்ற ஆழ்வார் பாசுரமும் இதை வழிமொழிகிறது. திருமண பொருத்தம் பார்க்கும் பொழுதும், முதலில் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆயுள் பாவம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துவிட்டுதான் மற்ற பொருத்தங்
களைப் பார்க்க வேண்டும். வெறும் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் பார்த்து முடிவுக்கு வந்து விடக்கூடாது. ஆயுள் பாவத்தை தீர்மானம் செய்வது எளிது. ஆனால் துல்லியமான ஆயுளை கணக்கு போடுவதுதான் கடினம். ஒருவருக்கு லக்னம் வலுவாக இருக்க வேண்டும்.

ராசி வலுவாக இருக்க வேண்டும். ராசிக்கு எட்டாம் இடம் லக்னத்திற்கு, எட்டாம் இடம் இவர்கள் பலமாக இருக்க வேண்டும். அடுத்து, ஆயுள் காரகன் என்று சொல்லப்படுகின்ற சனியின் நிலையைத் தீர்மானிக்க வேண்டும். இதற்கு அடுத்து, ஆயுள் ஸ்தான அதிபதி அதாவது எட்டாம் இடத்திற்கு உரிய கிரகம் வலிமையாக இருக்கிறதா அல்லது கெட்டுப் போய் எதிர் பலனை கொடுக்கக் கூடியதாக இருக்கிறதா என்பதையும் பார்க்க வேண்டும். இது ஒரு ஜாதகத்தில் அடிப்படையான விஷயம். ஆனால், இவற்றை மட்டும் வைத்துக் கொண்டு ஆயுளை தீர்மானிக்க முடியுமா என்றால் தீர்மானிக்க முடியாது. காரணம், நடக்கக்கூடிய தசா புத்தி என்ன என்பதை கணக்கிட வேண்டும். அது அஷ்டமாதிபதி திசையா அல்லது ஆறுக்கு உரியவன் திசையா அல்லது பாதகாதிபதி திசையா அல்லது இவற்றில் உள்ள 6,8,12-ஆம் இட புத்திகளா என்பதையும் பார்க்க வேண்டும். இதைவிட மிக முக்கியமாக, கோள் சாரத்தைக் கவனிக்க வேண்டும்.

ஒருவருடைய ஜென்ம ஜாதகம் வலிமை இழந்து அதாவது லக்னம் கெட்டு அஷ்டமாதிபதி கெட்டு, அதே நேரத்தில் அவருக்கு ஏழரைச் சனி, அஷ்டம சனியோ நடந்து, நடக்கக்கூடிய தசா புத்திகளும், 6,8,12க்கு உரிய தசாபுத்திகளோ அல்லது மாரகாதி தசாபுத்தியோ நடந்தால், அவருடைய ஆயுள் குறித்து சற்று எச்சரிக்கையாகவே அணுக வேண்டும். மாரகாதிபதி நேரடியாக ஆயுளை முடித்து வைக்காது. பல நேரங்களில் அது மரணத்திற்கு இணையான துன்பத்தைத் தரும். அப்பொழுது எந்த கிரக சேர்க்கைகள் என்பதையும் கவனிக்க வேண்டும். சனி, செவ்வாய், சுக்கிரன், ராகு போன்ற கிரக சேர்க்கைகள், அஷ்டமஸ்தானம் கெட்டிருக்கும் நிலையில் ஏற்படும் பொழுது, அவருக்கு விபத்துக்கள் மூலம் கண்டங்கள் ஏற்படலாம்.பொதுவாகவே சனி கெட்டாலும், குரு, சுக்கிரன், புதன் போன்ற கிரகங்கள் கெடக் கூடாது. லக்னத்திற்கு உரிய கிரகம் வலிமை கெட்டு சந்திரன் 6,8,12 ஆகிய இடங்களில் இருக்கக் கூடாது. 6,8,12 வீடுகளை குரு, சுக்கிரன் போன்ற சுப கிரகங்கள் பார்க்க அல்லது சுப கிரகங்கள் சொந்த வீட்டில் வலிமையோடு இருக்க, ஜாதகருக்கு நீண்ட ஆயுள்.

சனி, ஆயுள் காரகன் என்பதால் அவர் எட்டாவது வீட்டில் இருக்க அல்லது மூன்றாவது வீட்டில் இருக்க அல்லது லக்ன கேந்திரத்தில் இருக்க அவருக்கு நிச்சயம் 80 வயதுக்கு மேல் ஆயுள் என்று நிர்ணயம் செய்யலாம். அஷ்டமாதிபதி எட்டிலும், சனி எட்டிலும் இருக்க, குரு பலமாக இருந்து லக்னத்தை பார்த்தாலும் 60 வயதுக்கு மேல் நிச்சயம் சொல்ல முடியும். லக்னத்திற்கு 3,6,11 அல்லது சந்திரனுக்கு 3,6,11ல் ராகு இருக்க வயது 80க்கு மேல் சொல்லலாம். குரு பத்தாம் இடத்தில் இருந்தாலும், பத்தாம் இடத்தைப் பார்த்தாலும், அல்லது லக்னத்திற்கு 4,7,10 அல்லது சந்திரனுக்கு 1,7,9ல் இருந்தாலும் நீண்ட ஆயுள்.எனவே முதலில் ஆயுள் பலத்தை நிர்ணயிக்க வேண்டும். அதற்கடுத்து அந்த ஆயுளில் அவர் எப்படி வாழ்வார் என்பதை தீர்மானிக்க வேண்டும். நோய்நொடி இல்லாமல் இருப்பாரா என்பதை தீர்மானம் செய்ய வேண்டும். ஆறாம் இடம் கெட்டு, எட்டாம் இடம் வலிமையோடு இருந்தால், அவருக்கு அதிக ஆயுள் இருக்கும்.

ஆனால், ஆறாம் இடத்திற்கான கடன் நோய் முதலியவை வாழ்நாள் முழுவதும் இருந்து கொண்டிருக்கும். அதை நடைமுறையில் சில ஜாதகங்களில் பார்க்கலாம். சனி எட்டாம் இடத்தில் இருந்து நீண்ட ஆயுளைத் தருவார் அல்லது லக்னத்தை பார்த்து நீண்ட ஆயுளை தருவார். ஆனால் 6,2,11,10,7 முதலிய இடங்கள் கெட்டு இருக்கும். அதனால் வருமானம் இருக்காது. செய்யும் தொழிலில் லாபம் இருக்காது. தொழில் அமையாது. கௌரவம் இருக்காது. களத்திரமோ நட்போ நிலைக்காது. ஆனால் சனியின் பலத்தினால் நீண்ட ஆயுள் இருக்கும். எது எப்படி இருந்தாலும், ஒருவருக்கு லக்னம் மட்டும் பலமாக அமைந்துவிட்டாலும், சந்திரன், சூரியன் முதலிய கிரகங்கள் கேந்திரங்களில் சுப கிரகமான குருவோ சுக்கிரனோ அமைந்துவிட்டாலும், அவர்களுக்கு நீண்ட ஆயுளோடு நிறைவான வாழ்க்கையும் கிடைக்கும். சமீபத்தில் 90 வயது பெரியவரின் ஜாதகத்தைப் பார்த்தேன். மிதுன லக்னம். லக்னத்தை குரு பார்க்கிறார். ஆயுள் காரகன் சனி பாக்கியஸ்தானத்தில் ஆட்சி. அவரே அஷ்டமாதிபதி. லக்னத்திற்கு 8-ஆம் இடத்தை ஆட்சி பலம் பெற்று சுபத்துவம் கெடாத சந்திரன் பார்க்கிறார். 7ல் பாதக அதிபதி குரு. 2023 வரை குருதசை. குரு தசை மாரகத்தைக் கொடுத்திருக்க வேண்டும். கொடுக்கவில்லை. ஆனால், இந்தப் பெரியவருக்கு குரு தசை சில உடல்நலப் பிரச்னைகளை தந்ததோடு மாரகம் தரவில்லை. காரணம், தனித்த குருவாக இல்லாது ராகுவோடு இணைந்து இருந்தது.

 

The post நீண்ட ஆயுளோடு நிறைவான வாழ்க்கை :ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.

Related Stories: