சல்மான்கான் வீடு முன் துப்பாக்கியால் சுட்டவர் போலீஸ் காவலில் தூக்கிட்டு தற்கொலை


மும்பை: கடந்த மாதம் 14ம் தேதி மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள நடிகர் சல்மான்கானின் வீட்டுக்கு வெளியே 2 நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்ட குஜராத்தைச் சேர்ந்த விக்கி குப்தா(24), சாகல் பால்(21) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு ஆயுதம் சப்ளை செய்ததாக பஞ்சாப்பைச் சேர்ந்த சோனு குமார் சந்தர் பிஷ்னோய்(37) மற்றும் அனுஜ் தபன்(23) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அமோல் பிஷ்னோயின் அறிவுறுத்தலின் பேரில் துப்பாக்கிச்சூடு நடத்தியது தெரியவந்தது. இதனிடையே, வழக்கில் கைதான விக்கி குப்தா, சாகல் பால், அனுஜ் தபன் ஆகியோரை மே 8ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன் பேரில், போலீசார் 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மும்பையில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த அனுஜ் தபன் லாக்-அப்பில் உள்ள கழிவறையில் நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

பெட்ஷீட்டை பயன்படுத்தி அவர் கழிவறைக்குள் தூக்கிட்டுக் கொண்டார். கவலைக்கிடமான நிலையில் அவரை மீட்ட போலீசார், உடனடியாக அருகிலுள்ள ஜிடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

The post சல்மான்கான் வீடு முன் துப்பாக்கியால் சுட்டவர் போலீஸ் காவலில் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Related Stories: