நாடாளுமன்ற தேர்தல் விதிமுறை எதிரொலி உரிய நேரத்தில் அறுவடை செய்ய முடியாத தர்பூசணி: விவசாயிகள் வேதனை

திருக்கழுக்குன்றம்: நாடாளுமன்ற தேர்தல் நடைமுறையால் திருக்கழுக்குன்றம் பகுதிகளில் பயிரிடப்பட்ட தர்பூசணி உரிய நேரத்தில் விற்காததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த 19ம் தேதி நடந்து முடிந்த நிலையில், தேர்தலுக்கான நடைமுறைகளில் ஒன்றாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வண்ணம் பறக்கும் படை அமைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டதால், வணிக ரீதியாகவும் கூட யாரும் பணம் கொண்டு செல்ல முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில் பொதுவாக மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தர்பூசணி சீசன் களைகட்டும். ஆனால் இந்தாண்டு தேர்தல் நடைமுறை காரணமாக வழக்கமாக வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து மொத்த வியாபாரிகள் பணம் கொண்டு வந்து விவசாயிகளிடம் தர்பூசணி வாங்க வராததால் உரிய நேரத்தில் தர்பூசணி அறுவடை செய்ய முடியாமல் தோட்டத்திலேயே அழுகியும், வெம்பியும் வீணானது. அந்த வகையில் திருக்கழுக்குன்றம் தாலுகாவில் மட்டும் சுமார் 1,500க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்ட தர்பூசணி பழங்கள் விற்பனையாகாமல் வெயிலில் காய்ந்து கிடக்கிறது.

இதனால் இந்தாண்டு தர்பூசணி விவசாயிகள் பெரும் நஷ்டம் ஏற்பட்டு மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் பல இடங்களில் கடன் வாங்கி தர்பூசணி பயிர் செய்வோம். பெரும்பாலும் தர்பூசணி ஓரளவுக்கு கை கொடுக்கும். வாங்கிய கடன் போக மீதம் குடும்ப செலவை பார்ப்போம். ஆனால் இந்தாண்டு தேர்தல் வந்ததால் பணம் கொண்டு வந்து தர்பூசணி வாங்க மொத்த வியாபாரிகள் யாரும் வராததால் தோட்டத்திலேயே அழுகிப் போய் விட்டது. இதனால் நாங்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளோம்’ என்றனர்.

The post நாடாளுமன்ற தேர்தல் விதிமுறை எதிரொலி உரிய நேரத்தில் அறுவடை செய்ய முடியாத தர்பூசணி: விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Related Stories: