ஜெனீவா: விமான போக்குவரத்தில் ஜிஎஸ்டி குறுக்கீடு மற்றும் இடைநிறுத்தம் சம்பவங்கள் அதிகரிப்பதால் விமானிகள் விழிப்புடன் இருக்க வேண்டுமென சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) அறிவுறுத்தி உள்ளது. விமானங்கள் சரியான பாதையில் பயணிக்கவும், சரியான இடங்களில் தரையிறங்கவும் ஜிபிஎஸ் உதவி அவசியமானதாக உள்ளது. ஆனால் போர் பகுதிகள், சைபர் தாக்குதல்கள் போன்ற பல்வேறு காரணங்களால் இந்த ஜிபிஎஸ் சிக்னல்கள் இடைமறிக்கப்படுகின்றன அல்லது குறுக்கீடுகள் நிகழ்கின்றன. இதன் காரணமாக, ஜிபிஎஸ் செயலிழப்பு அல்லது தவறான வழிகாட்டல்கள் விமான விபத்திற்கு வழிவகுக்கும். இதுபோன்ற ஜிபிஎஸ் குறுக்கீடுகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
இதற்கு முன் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகளவில் நடந்த இந்த சம்பவங்கள் ரஷ்யா-உக்ரைன் போரை பகுதியிலும், தற்போது இந்தியா, வெனிசுலா போன்ற நாடுகளிலும் அதிகரித்துள்ளதாக ஐஏடிஏ கூறி உள்ளது. சமீப காலங்களில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, அமிர்தசரஸ், ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களிலும் ஜிபிஎஸ் குறுக்கீடு சம்பவங்கள் நடந்துள்ளன. உலகளாவிய விமான போக்குவரத்ததில் 80 சதவீத அதிகமான பங்களிப்பை கொண்ட ஐஏடிஏ அமைப்பின் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஜெனிவாவில் நடந்தது. அதில் பேசிய ஐஏடிஏ அதிகாரிகள், ஜிபிஎஸ் குறுக்கீடு அதிகரிப்பால் விமானிகள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தி உள்ளனர்.
ஐஏடிஏவின் தரவுகளின்படி, 2022ல் ஜிபிஎஸ் இழப்பு சம்பவங்களின் எண்ணிக்கை 1,000 விமானங்களுக்கு 31 ஆக இருந்த நிலையில், 2025ல் 59 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளில் விமானங்களின் ஜிபிஎஸ் அமைப்பில் மொத்தம் 1,951 குறுக்கீடுகள் பதிவாகியுள்ளதாக ஒன்றிய சிவில் போக்குவரத்து அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.
