முடிவை மாற்றிய சமாஜ்வாடி கன்னோஜ் தொகுதியில் அகிலேஷ் போட்டி

எடாவா: உத்தரப்பிரதேசத்தில் கன்னோஜ் தொகுதியில் தேஜ் பிரதாப் யாதவ்விற்கு மாறாக அகிலேஷ் யாதவ் போட்டியிடுவார் என்று சமாஜ்வாடி கட்சி அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு மே 13ம் தேதி நடைபெறுகின்றது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகின்றது. இந்த தொகுதியை கடந்த 2000, 2004, 2009 ஆகிய ஆண்டுகளில் சமாஜ்வாடி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் தொடர்ந்து கைப்பற்றி வந்தார்.

2012ம் ஆண்டு அவர் முதல்வரானபோது எம்பி பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து அவரது மனைவி டிம்பிள் யாதவ் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2014ம் ஆண்டும் இந்த தொகுதியில் டிம்பிள் யாதவ் வெற்றி பெற்றார். ஆனால் 2019ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதி பாஜவசமானது. எனவே இந்த தொகுதியில் மீண்டும் அகிலேஷ் யாதவ் போட்டியிடக்கூடும் என்று மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிவந்த நிலையில், கன்னோஜ் தொகுதியில் சமாஜ்வாடி வேட்பாளராக தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடுவார் என்று 2 நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கன்னோஜ் தொகுதியில் தேஜ் பிரதாப் யாதவை போட்டியிட செய்வது என்ற தனது நிலைப்பாட்டில் இருந்து சமாஜ்வாடி கட்சி மாறியுள்ளது. இதனை தொடர்ந்து கன்னோஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவார் என்றும், அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வார் என்றும் சமாஜ்வாடி நேற்று அறிவித்துள்ளது.

The post முடிவை மாற்றிய சமாஜ்வாடி கன்னோஜ் தொகுதியில் அகிலேஷ் போட்டி appeared first on Dinakaran.

Related Stories: