குள்ளஞ்சாவடி அருகே நள்ளிரவில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு; 4 பேர் கைது: போலீசார் குவிப்பு

கடலூர்: குள்ளஞ்சாவடி அருகே அம்பேத்கர் சிலை மீது நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய 4 இளைஞர்களை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பதற்றம் நிலவுவதால் அங்கு 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே அம்பலவாணன்பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை உள்ளது. அதன் பின்புறத்தில் உள்ள கட்டிடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் தபால்நிலையம் இயங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் மர்மநபர்கள் சிலர், அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீசியுள்ளனர். அந்த குண்டு, சிலையின் பின்னால் இயங்கி வந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தின் மீது பட்டு வெடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் விரைந்து வந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். மர்ம நபர்களை பிடிக்க அவரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் இரவோடு இரவாக தேடி 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், அம்பலவாணன் பேட்டையை சேர்ந்த விஜயராஜ் (20), கிருஷ்ணன் (20), சதீஷ் (29), வெற்றி (21) ஆகியோரை கைது செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், அம்பேத்கர் சிலைமீது தான் பெட்ரோல் குண்டு வீசியதாக 4 பேரும் தெரிவித்தனர்.

மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு பணிக்காக 100க்கும் மேற்பட்ட போலீசார் அம்பலவாணன்பேட்டை கிராமத்திலும், குள்ளஞ்சாவடி பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதற்கிடையில் தகவலறிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கடலூர் துணைமேயர் தாமரைச்செல்வன் விரைந்து வந்து பெட்ரோல் குண்டு வீசிய இடத்தை பார்வையிட்டு அம்பேத்கர் சிலைக்கு பால் அபிஷேகமும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கூறுகையில், வெடிகுண்டு வீசிய சமூக விரோதிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றார்.

The post குள்ளஞ்சாவடி அருகே நள்ளிரவில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு; 4 பேர் கைது: போலீசார் குவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: