பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சிய சமூக ஆர்வலர்கள்

 

பல்லடம், ஏப்.24: பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்லடம் – தாராபுரம் சாலையில் காய்ந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சினர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் – தாராபுரம் சாலை கடந்த சில மாதங்களுக்கு முன் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது. சாலை விரிவாக்கத்தின் போது சாலையின் 2 புறங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டது. இந்நிலையில் கடும் கோடை வெயிலால் அவை காய்ந்து கருகி போகும் நிலை வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் தனியார் தண்ணீர் வேன்கள் மூலம் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சினர். இதற்கிடையே பல்லடம் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்லடம் – தாராபுரம் சாலையில் காய்ந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சினர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை கூறியதாவது: பல்லடம் – தாராபுரம் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட போது வைக்கப்பட்ட மரக்கன்றுகளில் பெரும்பாலானவை தண்ணீர் இன்றி காய்ந்து கருகி வருகின்றன.

இதனால், மரக்கன்றுகள் வைத்ததற்கான செலவு மற்றும் மனித உழைப்பு ஆகியவை வீணாகி வருகிறது. இதுகுறித்து அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் தண்ணீர் விலைக்கு வாங்கி காய்ந்த மரக்கன்றுகளுக்கு தண்ணீர் பாய்ச்சினோம். ஏற்கனவே பல்லடம் பகுதியில், வெட்டப்பட்டு வருகின்றன.

புதிதாக வைக்கப்படும் மரக்கன்றுகளையும் இவ்வாறு அலட்சியம் காட்டுவதால், பல்லடம் பகுதி பாலைவனமாக மாறிவிடும் அபாயம் உள்ளது. எனவே, காய்ந்த கருகிய மரக்கன்றுகளுக்கு இணையாக, புதிய மரக்கன்றுகளை நடவு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு மரம் வெட்டினால் அதற்கு இணையாக 4 மரங்களை நடவு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் யாரும் இதை பின்பற்றுவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post பல்லடத்தில் கோடை வெயிலால் காய்ந்த மரக்கன்றுகளுக்கு நீர் பாய்ச்சிய சமூக ஆர்வலர்கள் appeared first on Dinakaran.

Related Stories: