பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களால் சமுதாயத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது
* மனுதாரர் காவல்துறையின் உன்னதத்தை குறைத்துள்ளார்

சென்னை: பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரியும் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் 12ம் தேதி உறுதி செய்தது.

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் கோரி ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி எம். தண்டபானி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, ராஜேஷ் தாசுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவும், சரணடைய விலக்களிக்கவும் எதிர்ப்பு தெரிவித்தார். காவல்துறையில் உயர் பதவி வகித்ததால் தனக்கு விலக்கு அளிக்க வேண்டுமென்று ராஜேஷ் தாஸ் கூறுகிறார் ஆனால் அவரால் பாதிக்கப்பட்டதும் காவல்துறை உயர் அதிகாரி தான்.

அவர் விசாரணை நீதிமன்றத்தில் சரண் அடையாமல் இதுபோன்று மனுக்களை தாக்கல் செய்து தப்பிக்க நினைக்கிறார். அதை இந்த நீதிமன்றம் பரிசீலிக்க கூடாது. ராஜேஷ் தாஸ் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் அதற்கான ஆதாரங்களை முழுவதும் ஆய்வு செய்த பிறகே விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர் விசாரணை நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் கோரலாம். ராஜேஷ் தாஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, மனுதாரருக்கு எதிராக சதி செய்யப்பட்டு பொய் புகார் அளிக்கப்படதாக தெரிவித்தார். இதனையடுத்து, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் ராஜேஷ் தாஸ் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த 17ம் தேதி ஒத்திவைத்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று நீதிபதி எம்.தண்டபாணி தீர்ப்பளித்தார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது: பெண்களிடம் தவறாக நடந்து பெண்களின் மாண்பை குலைக்கும் செயலை செய்துவிட்டு தண்டனை நிறுத்த கோருவதை ஏற்க முடியாது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களால் சமுதாயத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது. இந்த வழக்கிலும் காவல் துறையில் மிகப்பெரிய பதவியில் இருந்த மனுதாரரான சிறப்பு டிஜிபி காவல் துறைக்கே உரிய நன்னடத்தையையும், அதன் மாண்பையும் காக்காமல் தன்னுடன் பணியாற்றும் சக பெண் அதிகாரியிடம் ஒழுக்க குறைவுடன் தவறாக நடந்துள்ளார். சாதாரண பொதுமக்கள் இதுபோன்ற குற்றங்களை செய்யும்போது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள். எனவே, நடவடிக்கை எடுப்பதில் போலீசார் பாரபட்சம் காட்ட கூடாது.

மனுதாரர் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு மிக தீவிரமானது. மற்ற குற்ற வழக்குகளைப்போல் இந்த வழக்கை கருத முடியாது. இந்த வழக்கில் சாட்சியங்களை வைத்து அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க கோர முடியாது. மனுதாரர் தனது செயல் மூலம் காவல்துறையின் உன்னதத்தை குறைத்துள்ளார். அவரது தண்டனையை நிறுத்தி வைக்க மனுதாரர் தரப்பு கூறும் வாதங்களை ஏற்க கூடியதாக இல்லை. எனவே, தண்டனை நிறுத்திவைக்க கோரும் அவரது மனுவும், நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்க கோரும் மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பெண்களிடம் தவறாக நடந்து பெண்களின் மாண்பை குலைக்கும் செயலை செய்துவிட்டு தண்டனை நிறுத்த கோருவதை ஏற்க முடியாது.

The post பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய முன்னாள் டிஜிபி ராஜேஷ்தாஸ் மனு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: