வெள்ளிங்கிரி மலையேறிய வாலிபர் தவறி விழுந்து பலி: உயிரிழப்பு 8 ஆக உயர்வு

கோவை: கோவை பூண்டி வெள்ளிங்கிரி மலைக்கு கடந்த பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து தினமும் ஏராளமான பக்தர்கள் மலையேற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் எஸ்.வி காலனி 6வது வீதியை சேர்ந்த வீரக்குமார் (31) கடந்த 18ம் தேதி இரவு தனது நண்பர்களுடன் வெள்ளிங்கிரி மலை ஏறினார். அவர் 7வது மலையில் சாமி தரிசனம் செய்து விட்டு 19-ம் தேதி காலை 7 மணிக்கு நண்பர்களுடன் கீழே இறங்கினார். அப்போது 7வது மலையில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இது குறித்து அவரது நண்பர் ஜெகதீஸ் என்பவர் கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்தார். இதையடுத்து வீரக்குமார் டோலி மூலம் மலை அடிவாரம் அழைத்து வரப்பட்டார். பின்னர், அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி வீரக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெள்ளிங்கிரி மலையேற்றத்தில் ஈடுபட்ட 7 பேர் உயிரிழந்திருந்தனர். தற்போது வீரக்குமார் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post வெள்ளிங்கிரி மலையேறிய வாலிபர் தவறி விழுந்து பலி: உயிரிழப்பு 8 ஆக உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: