1,2ம் கட்ட மக்களவை தேர்தலில் 501 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள்

புதுடெல்லி: நாடு முழுவதும் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விரைந்து முடிக்கக் கோரிய பொதுநல மனுக்கள் தொடர்பான நிலவரத்தை அறிய நியமிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், ‘எம்பி, எம்எல்ஏக்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்கள் கடந்தாண்டு மட்டும் 2000க்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளன.

நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், சம்பந்தப்பட்ட உயர் நீதிமன்றங்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்பதால், கூடுதல் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலின் முதல் இரண்டு கட்ட தேர்தலில் 501 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மொத்தம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள 2,810 வேட்பாளர்களில் (முதல் கட்டத்தில் 1,618 வேட்பாளர்கள் மற்றும் இரண்டாம் கட்டத்தில் 1,192 வேட்பாளர்கள்), 501 (18 சதவீதம்) வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவர்களில் 327 (12 சதவீதம்) பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 7,928 வேட்பாளர்களில் 1,500 வேட்பாளர்கள் (19 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 1,070 வேட்பாளர்கள் (13 சதவீதம்) கடுமையான குற்ற வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 17வது மக்களவைக்கு (2019-2024) தேர்ந்தெடுக்கப்பட்ட 514 உறுப்பினர்களில் 225 உறுப்பினர்கள் (44 சதவீதம்) மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 1,2ம் கட்ட மக்களவை தேர்தலில் 501 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் appeared first on Dinakaran.

Related Stories: