கட்டாய கல்வி உரிமை சட்டம் குமரியில் 1800 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை

*ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடக்கம்

நாகர்கோவில் : கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் குமரி மாவட்டத்தில் 213 தனியார் சுயநிதி பள்ளிகளில் 1800 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்த ஆன்லைனில் விண்ணப்பித்தல் தொடங்கியுள்ளது.குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் 2024-2025ம் கல்வியாண்டில் அனைத்துச் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவுநிலை வகுப்பில் (எல்கேஜி, 1ம் வகுப்பு) குறைந்தபட்சம் 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குதல் சார்பாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலரால் சட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறும் விதமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் சேர்க்கை நடைமுறை தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் வழிகாட்டுதலின்படி தொடக்கநிலை வகுப்பிற்கு எல்.கே.ஜி. அல்லது முதல் வகுப்பிற்கு வீட்டில் இருந்து 1 கி.மீ. அருகாமையில் பள்ளி அமைந்திருக்க வேண்டும். சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர்கள் rte.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்தல் நேற்று தொடங்கியுள்ளது. மே 20ம் தேதி வரை எங்கிருந்தும் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம், கன்னியாகுமரி மாவட்டக்கல்வி அலுவலகம் (தனியார் பள்ளிகள்), மார்த்தாண்டம் மாவட்டக்கல்வி அலுவலகம் (இடைநிலை), மாவட்டக்கல்வி அலுவலகம் (தொடக்கக்கல்வி), வட்டாரக்கல்வி அலுவலகம்/ ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி வட்டாரவளமையம் ஆகிய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் பள்ளிகள் மூலமாகவும் இணைய வழி மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘குமரி மாவட்டத்தில் 213 தனியார் சுயநிதி பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நடத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு 1800 இடங்கள் இந்த அடிப்படையில் நிரப்பப்பட்டன. இந்த ஆண்டும் இதே காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பில் 30 மாணவர்கள் சேர்க்கப்படும் நிலையில் அதில் 8 மாணவர்கள் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சேர்க்கப்படுவர். ஆனால் கடந்த ஆண்டு 24 மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தால் அந்த பள்ளிகளில் 6 பேருக்கு மட்டுமே இந்த முறை வாய்ப்பு வழங்கப்படும்’ என்றார்.

3 வயது நிறைவு பெற்றால் எல்கேஜியில் சேரலாம்

*சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் எல்கேஜி மாணவர் சேர்க்கைக்கு 31.7.2024 அன்று 3 வது நிறைவு பெற்றிருக்க வேண்டும். பெற்றோர் இணையதளம் மூலம் எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.

*ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு கீழ் உள்ள நலிவடைந்த பிரிவு பெற்றோர், வருமான சான்றிதழ் நகல் உடனும், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் (பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் வகுப்பினர்) சாதி சான்றிதழ் நகல் உடனும், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் (மாற்றுதிறன் குழந்தைகள், துப்புரவு தொழிலாளர் குழந்தைகள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகள்) தகுந்த சான்றிதழ் நகல் உடனும் விண்ணப்பிக்கலாம்.

*விண்ணப்பதாரரின் வீட்டில் இருந்து பள்ளி இருக்கும் பகுதி 1 கி.மீ தொலைவுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் பிறப்பு சான்று, பெற்றோர் ஆதார் அட்டை நகல், ரேஷன்கார்டு நகல், குழந்தையின் புகைப்படம் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

*இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்கும் பள்ளி நிர்வாகங்களுக்கு அந்த மாணவர்களுக்குரிய கல்வி கட்டணத்தை அரசே வழங்கிவிடுகிறது. அந்தந்த கல்வியாண்டின் இறுதியில் கல்வி கட்டணம் வழங்கப்பட்டு விடும்.

*சிறுபான்மையினர் அல்லாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க முடியும்.
*வாய்ப்பு மறுக்கப்பட்டவர் பிரிவில் ஆதரவற்றவர், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத்திறனாளி, துப்புரவு தொழிலாளர் குழந்தைகள் விண்ணப்பம் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

*ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்திற்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிர்ணயித்த இடங்களை விட அதிக விண்ணப்பங்கள் வந்தால் பள்ளிகளில் வெளிப்படையான குலுக்கல் நடைமுறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்.

The post கட்டாய கல்வி உரிமை சட்டம் குமரியில் 1800 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை appeared first on Dinakaran.

Related Stories: