ஷாரோன் கொலை வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

*கிரீஷ்மாவுக்கு பின்னடைவு

திருவனந்தபுரம் : குமரி கல்லூரி மாணவர் ஷாரோன் கொலை வழக்கில் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு டிஎஸ்பி தாக்கல் செய்த இறுதி விசாரணை அறிக்கையை ரத்து செய்யக் கோரி கிரீஷ்மா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.குமரி மாவட்டம் நெய்யூரிலுள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2022ம் ஆண்டு படித்து வந்த பாறசாலை மாணவர் ஷாரோனை கஷாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவத்தில் களியக்காவிளையை சேர்ந்த அவரது காதலியான கிரீஷ்மா திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இவரிடம் நடத்திய விசாரணையில் கொலைக்கு கிரீஷ்மாவின் தாய் சிந்துவும், மாமா நிர்மல் குமாரும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களையும் போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் அடைத்தனர்.பல மாத சிறைவாசத்திற்கு பின்னர் இவர்கள் மூன்று பேரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த திருவனந்தபுரம் குற்றப்பிரிவு டிஎஸ்பி இறுதி விசாரணை அறிக்கையை நெய்யாற்றின்கரை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் சம்பவம் நடந்தது தமிழக எல்லை என்பதால் சட்டப்படி கேரள நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக்கூடாது என்றும், வழக்கை தமிழகத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கூறி கிரீஷ்மா தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்திலும், பின்னர் உச்சநீதிமன்றத்திலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அந்த மனுக்கள் இரண்டு நீதிமன்றங்களிலும் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில் கிரீஷ்மா தரப்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், போலீஸ் நிலையத்தின் பொறுப்பிலுள்ள அதிகாரி தான் இறுதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். எனவே குற்றப்பிரிவு டிஎஸ்பி தாக்கல் செய்த இறுதி விசாரணை அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.இதை விசாரித்த உயர்நீதிமன்றம், கிரீஷ்மாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து கிரீஷ்மா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த டிவிஷன் பெஞ்ச், கிரீஷ்மாவின் கோரிக்கையை ஏற்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

The post ஷாரோன் கொலை வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி appeared first on Dinakaran.

Related Stories: