மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தொழிலாளர் ஊதியம் வரலாறு காணாத சரிவு: ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் மூலம் அம்பலப்படுத்திய காங்கிரஸ்

புதுடெல்லி: ‘மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தொழிலாளர்கள் பெறும் ஊதியம் வரலாறு காணாத சரிவை சந்தித்திருப்பதாக அரசு புள்ளிவிவரங்களே அம்பலப்படுத்தி உள்ளன’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறி உள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் உட்பட பல தரவுகள் ஒரு உண்மையை அம்பலப்படுத்தி உள்ளன. அது, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்று தொழிலாளர்கள் பெறும் ஊதிய வளர்ச்சி விகிதம் குறைந்திருப்பதை நிரூபித்துள்ளன. மெதுவான ஊதிய வளர்ச்சி மற்றும் அதிகரிக்கும் பணவீக்கம் ஆகியவற்றின் கலவையால் தொழிலாளர்கள் ஊதியம் வரலாறு காணாத சரிவை எட்டியுள்ளது. ஒன்றிய அரசின் ஊதிய விகித இன்டெக்ஸ் தரவு, 2014 முதல் 2023ம் ஆண்டுக்கு இடையே, தொழிலாளர்களின் ஊதியம் சரிந்துள்ளதாகவும், குறிப்பாக, மோடியின் 2வது 5 ஆண்டு ஆட்சியில் மிகப்பெரும் சரிவு இருப்பதாகவும் கூறி உள்ளது.

வேளாண் அமைச்சகத்தின் வேளாண் புள்ளிவிவரங்கள், முந்தைய மன்மோகன் சிங் ஆட்சியில் விவசாய தொழிலாளர்களின் ஊதிய விகித வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு 6.8 சதவீதம் வளர்ச்சி அடைந்ததாகவும், அதுவே பிரதமர் மோடியின் ஆட்சியின் ஒவ்வொரு ஆண்டும் மைனஸ் 1.3 சதவீதம் குறைந்ததாகவும் கூறி உள்ளது. சென்டர் பார் லேபர் ரிசர்ச் அண்ட் ஆக்ஷன் தரவானது, 2017 முதல் 2022க்கு இடைப்பட்ட காலத்தில் சம்பளம் பெறும் தொழிலாளர்கள், தினக்கூலிகள், சுய தொழில் செய்வோரின் சராசரி வருவாய் கடுமையாக சரிந்திருப்பதாக கூறி உள்ளது. ஏழைகளின் கடைசி முயற்சியான செங்கல் சூளையிலும் ஊதிய விகிதம் 10 ஆண்டில் சரிந்துள்ளது.

இதனால், சுமார் 50 ஆண்டுகளில் முதல் முறையாக கிராமப்புற மக்களின் நுகர்வு வீழ்ச்சியை அடைந்ததாக தேசிய புள்ளியியல் துறை தரவு வெளியிட்டது. அதையும் மோடி அரசு மறைக்க முயற்சித்தது. இத்தகைய சரிவுகள் காரணமாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (10 ஆண்டு சராசரி) தனியார் முதலீடு விகிதம், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 33.4 சதவீதமாக இருந்த நிலையில் அது மோடியின் ஆட்சியில் 28.7 சதவீதமாக சரிந்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீடு காங்கிரஸ் ஆட்சியில் 2004ல் 0.8 சதவீதத்தில் இருந்து 2014ல் 1.7 சதவீதமாக உயர்ந்தது. அது, 2022ல் 1.5 சதவீதமாக குறைந்துள்ளது.

இவை அனைத்தும் சேர்ந்து பொருளாதார வளர்ச்சியை கீழே இழுத்து, வேலையின்மை நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளன. தொழிலாளர்கள் ஊதியம், தனியார் துறை முதலீடு மற்றும் நுகர்வு வளர்ச்சி ஆகியவற்றில் காங்கிரஸ் கூட்டணி அரசு வலுவாகச் செயல்பட்டது. இதனால் மோடி அரசின் 5.8% பொருளாதார வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், 7.5% வளர்ச்சியை காங்கிரஸ் அரசு எட்டியது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு அனைத்து தொழிலாளர்களின் சம்பளம் சரிந்துள்ளது. இந்த நிலையை மாற்றி, ஜூன் 4ம் தேதிக்குப்பிறகு இந்திய கூட்டணி ஆட்சிக்கு வரும்போது நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பச் செய்வோம். இவ்வாறு கூறி உள்ளார்.

The post மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தொழிலாளர் ஊதியம் வரலாறு காணாத சரிவு: ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் மூலம் அம்பலப்படுத்திய காங்கிரஸ் appeared first on Dinakaran.

Related Stories: