காவி மயமான தூர்தர்ஷன் லோகோ பாஜவின் எதேச்சதிகார ஆட்சிக்கான உதாரணம்: மம்தா காட்டம்

குமார்கஞ்ச்: ‘தூர்தர்ஷன் லோகோவை காவி நிறமாக்கியது, பாஜவின் எதேச்சதிகார ஆட்சிக்கான மற்றொரு உதாரணம்’ என மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் பலூர்கட் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட குமார்கஞ்ச் பகுதியில் நேற்று நடந்த பிரசாரத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: தூர்தர்ஷன் போன்ற தன்னாட்சி அதிகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு காவி நிறம் பூசி நாட்டின் துறவிகள், ஆன்மீக தலைவர்களின் தியாகங்களை பாஜ அவமதிக்கிறது. தேர்தல் சமயத்தில் தூர்தர்ஷன் லோகோவை எப்படி அவர்கள் காவி நிறத்திற்கு மாற்றலாம். இது மதத்தை பயன்படுத்தி தேர்தலில் ஆதாயம் தேடும் பாஜவின் கொள்கையை அம்பலமாக்கி உள்ளது. தூர்தர்ஷன் லோகோவைப் போலவே, ராணுவ அதிகாரிகளின் வீடுகளுக்கு காவி வண்ணம் பூசப்பட்டது ஏன்? காசி கோயிலில் போலீசாரின் சீருடை ஏன் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டது? இவை அனைத்தும் பாஜ கட்சியின் எதேச்சதிகார ஆட்சியின் மற்றொரு உதாரணங்கள். அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எதிர்காலத்தில் தேர்தலே இருக்காது. ஒரே தலைவர், ஒரே கட்சி ஆட்சி ஆகிவிடும். பல்வேறு சமூகங்களின் மத உரிமைகளுக்கு ஆபத்து ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post காவி மயமான தூர்தர்ஷன் லோகோ பாஜவின் எதேச்சதிகார ஆட்சிக்கான உதாரணம்: மம்தா காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: