செங்களம் (தமிழ்)

தமிழில் தயாராகும் வெப் சீரீஸ்கள் என்றாலோ க்ரைம் திரில்லர் அல்லது காமெடி வகையிலேயே அமைந்திருக்கும். முதன் முறையாக அரசியல் கலந்த க்ரைம் த்ரில்லராக வெளியாகி இருக்கிறது செங்களம். சுந்தர பாண்டியன், இது கதிர்வேலன் காதல், சத்ரியன், கொம்பு வச்ச சிங்கம்டா படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கி உள்ளார்.

விருதுநகர் நகராட்சி தலைவராக 40 வருடங்களாக சுயேட்சையாக தேர்வு பெற்று பதவியில் இருக்கிறவர் சரத் லோகித்சவா. விருதுநகர் அரசியலில் அவரன்றி ஒரு அணுவும் அசையாது. வெளி சக்தியால் வீழ்த்த முடியாத அவரை, குடும்பம் எப்படி வீழ்த்துகிறது என்பதுதான் கதை.

லோகித்சவாவின் மகன் பரத் தந்தையின் வாரிசாக நகராட்சி தலைவர் பதவிக்கு வருகிறார். ஒரு சாலை விபத்தில் அவர் இறந்துவிட அவரது இரண்டாவது மனைவி வாணி போஜன் தானே அடுத்த தலைவராக காய் நகர்த்துகிறார். அவருக்கு உதவி செய்கிறார் அரசியல் நுணுக்கம் தெரிந்த ஷாலி. அவர் வாணி போஜனுக்கு உடன்பிறவா சகோதரியாகிறார். ஆனால் ஷாலி சரத்லோகித் சவாவின் குடும்பத்தையே அழிக்க நினைத்து போராடும் கலையரசனின் உடன்பிறந்த தங்கை. இந்த முடிச்சுகள் எப்படி அவிழ்கிறது என்பதுதான் தொடரின் கதை.

அரசியல் பின்னணியில் பார்க்கும்படியான காட்சி அமைப்புகளால் கவனம் பெறுகிறது தொடர். என்றாலும் கடைசி 3 எபிசோட்கள் தவிர மற்ற எபிசோட்கள் மெதுவாகவே நகர்கிறது. நாயகி வாணிபோஜனை விட அவரது உடன்பிறவா தோழியாக நடித்திருக்கும் ஷாலி நிவேகாஸ் கவனிக்க வைக்கிறார். தரண்குமாரின் பின்னணி இசை தொடருக்கு வலு சேர்க்கிறது. சில எபிசோடுகள் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் பின்பாதி ரசிக்க வைக்கும். ஜி5 தளத்தில் வெளியாகி உள்ளது.

Related Stories: