ரத்னம் விமர்சனம்

எம்எல்ஏ சமுத்திரக்கனியின் அடியாள் விஷால். நீட் தேர்வு எழுத வரும் பிரியா பவானி சங்கரைப் பார்க்கும் அவர், தகுந்த காரணத்துடன் அவரைப் பின்தொடர்கிறார். அப்போது ஆந்திரா தாதாக்கள் பிரியா பவானி சங்கரைக் கொல்ல துரத்துகின்றனர். தன்னை நேசிக்கும் பிரியா பவானி சங்கரைக் காப்பாற்றி வாழ்க்கை கொடுத்தாரா என்பதை அடுத்தடுத்த ட்விஸ்ட்டுகள் மூலம் சொல்லியிருக்கின்றனர். இயக்குனர் ஹரியின் ஸ்டைலில் உருவான முழுநீள ஆக்‌ஷன் படத்தை தோள்மீது சுமந்திருக்கும் விஷால், ரத்னமாக ஆக்‌ஷனில் அதகளம் செய்திருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அதிரடியாக களமிறங்கி அடித்திருக்கும் அவர், அம்மா சென்டிமெண்ட்டில் உருக வைக்கிறார்.

பிரியா பவானி சங்கருக்கும், அவருக்குமான தொடர்பு ஆச்சரியப்பட வைக்கிறது. இரு கேரக்டர்களில் சிறப்பாக நடித்துள்ள பிரியா பவானி சங்கருக்கு இப்படம் ஒரு மைல் கல். அதிரடியாக முடிவெடுக்கும் எம்எல்ஏ சமுத்திரக்கனி, பிறருக்கு நல்லது செய்ய மனதை மாற்றிக்கொள்வது கேரக்டருக்கு வலு சேர்க்கிறது. யோகி பாபுவின் டைமிங் காமெடி கதையுடன் பயணித்துள்ளது. ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், விடிவி கணேஷ், முரளி சர்மா, ஹரீஷ் பெராடி, முத்துக்குமார் கச்சிதம். ஹரி படம் என்றாலே நட்சத்திரப் பட்டாளம் நிரம்பி வழியும். இதிலும் கவுதம் வாசுதேவ் மேனன், ஒய்.ஜி.மகேந்திரன், மோகன் ராமன், விஜயகுமார், ஜெயப்பிரகாஷ், டெல்லி கணேஷ், கஜராஜ், கணேஷ் வெங்கட்ராமன், துளசி, கும்கி அஸ்வின், டாக்டர் சூரி போன்றோர், தங்கள் கேரக்டருக்கு நியாயம் செய்துள்ளனர்.

இடைவேளைக்கான சிங்கிள் ஷாட் ஸ்டண்ட் மற்றும் சேஸிங் காட்சியில் ஒளிப்பதிவாளர் எம்.சுகுமார் அசத்தியுள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் அவரது கேமரா புகுந்து விளையாடியுள்ளது. கனல் கண்ணன், பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன், விக்கி ஆகியோரின் ஸ்டண்ட் காட்சிகள் பிரமிக்க வைக்கிறது. விஷாலும், வில்லன்களும் திரையில் ரத்தம் கொப்பளிக்க ருத்ர தாண்டவம் ஆடியுள்ளனர். ஜனரஞ்சகமான கமர்ஷியல் படத்துக்குரிய பாடல்களையும், பின்னணி இசையையும் தேவிஸ்ரீ பிரசாத் வழங்கியிருக்கிறார். குடும்ப சென்டிமெண்ட்டைக் குறைத்து, ஆக்‌ஷனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ள ஹரி, காட்சிகளையாவது மாற்றி யோசித்திருக்கலாம். லாஜிக் பற்றி அவர் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

The post ரத்னம் விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: