கொடுத்த வாக்கை நிறைவேற்று!

கடவுள் அனைத்துலகிற்கும் ஆண்டவர் ஆவார். அவர் வரலாற்றில் குறுக்கிட்டுத் தம்மில் நம்பிக்கை கொள்வோரை எவ்வகைத் துன்பத்திலிருந்தும் காப்பாற்றுவார். ‘‘கடவுளின் கோயிலுக்குச் செல்லும் போது விழிப்புடனிரு. உள்ளே சென்று கேட்டறிவதே மேல். கடவுள் முன்னிலையில் சிந்தித்துப் பாராமல் எதையும் பேசாதே! எண்ணிப் பாராமல் வாக்குக் கொடுக்காதே! கடவுள் விண்ணுலகில் இருக்கிறார். நீயோ மண்ணுலகில் இருக்கிறாய். எனவே, மிகச்சிறிய சொற்களே சொல்! கவலை மிகுமானால் கனவுகள் வரும். சொல் மிகுமானால் மூடத்தனம் வெளியாகும். கடவுளுக்கு ஏதாவதொரு வாக்குக் கொடுத்திருந்தால் அதை நிறைவேற்றுவதில் காலம் தாழ்த்தாதே. ஏனெனில், பொறுப்பின்றி நடப்போரிடம் அவர் விருப்பம் கொள்வதில்லை. என்ன வாக்குக் கொடுத்தாயோ அதைத் தவறாமல் நிறைவேற்று.

கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் போவதைவிட வாக்குக் கொடாமல் இருப்பதே மேல்!

வாய் தவறிப்பேசிப் பழிக்கு ஆளாகாதபடி பார்த்துக் கொள். தவறுதலாய்ச் செய்துவிட்டேன் என்று வான தூதரிடம் சொல்லும்படி நடந்துகொள்ளாதே. உன் பேச்சின் பொருட்டுக் கடவுள் உன்மீது சினம் கொண்டு நீ செய்தவற்றை அழிக்கும்படி நடந்துகொள்வானேன்? கனவுகள் பல வரலாம். செயல்களும், சொற்களும் எத்தனையோ இருக்கலாம். நீயோ கடவுளுக்கு அஞ்சி நட.’’ (சபை உறையாளர் 5:17) ஒருவர் கடவுள்மீது பற்றுறுதி கொண்டு செயல்பட்டால் எத்துணை  வலிமை படைத்த உலக ஆற்றல்களையும் வென்று விடலாம். உனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே ‘விதி’ என்று கூறப்படுகிறது. உனது வாழ்க்கை எந்தச் சாலையில் போனாலும் அது இறைவன் வகுத்ததே. ஜனனம் உலகெங்கும் ஒரே மாதிரி இருக்கிறது. பத்தாவது மாதம் ஜனனம் என்பது நிரந்தரமானது. ஆனால், வாழ்க்கை ஏன் பல கோணங்களில் போகிறது?

மரணம் ஏன் பல வழிகளில் நிகழ்கிறது? நீ கருப்பையில் இருக்கும்போது, நீ போகப்போகிற பாதைகளும், சாகப்போகிற இடமும் நேரமும் உன் மண்டை ஓட்டுக்குள் திணிக்கப்படுகின்றன. நீ எங்கே போனாலும் எப்படி வாழ்ந்தாலும் அது இறைவன் விதித்ததே! மனத்தின் சிந்தனைப் போக்கு எப்படி வேண்டுமானாலும் போகலாம். ஆனால் அது நடப்பதும் நடக்காததும் உன் விதிக் கோடுகளில் அடங்கி இருக்கிறது. பூர்வ ஜென்மத்தின் எதிரொலியைக் கொண்டே அந்த ஜென்மத்தின் விதி நிர்ணயிக்கப்படுகிறது. போன ஜென்மத்தில் உன் விதி பாவம் செய்யும்படி விதிக்கப்பட்டிருந்தால் அதற்கான பரிகாரம் இந்த ஜென்மத்தில் எழுதப்படுகிறது. ஆகவே, விதியின் கோடுகள்தான் என்னை ஆட்சி செய்கின்றன. நீ எண்ணியது நடந்தாலும், நடக்காவிட்டாலும், எண்ணாதது நடந்தாலும் யாவும் உன் விதி ரேகைகளின் விளைவே!

முயற்சி கால் பங்கு. ஒத்துழைப்பு முக்கால் பங்கு. ‘‘எல்லாவற்றிற்கும் காலம் நேரம் வரவேண்டும்’’ என்கிறார்களே, அதற்கு என்ன காரணம்? இன்ன காரியங்கள் உனக்கு இன்ன காலங்களில் நடக்கும் என்று விதிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வளவுதான்! நினைவுகளின் மயக்கத்தை விதி ஒழுங்குபடுத்துகிறது. நினைத்ததை எல்லாம் நடத்தி முடித்தவன் எவன்? நினைப்பவன்தான் நீ. முடிப்பவன் அவன். நம்முடைய இயக்கம் இறைவன் கையில் உள்ளது. பிச்சைக்காரி ராணி ஆன கதையும், ராஜா பிச்சைக்காரனான கதையும் அதிர்ஷ்டம் என்ற பெயரிலோ, துரதிர்ஷ்டம் என்ற பெயரிலோ அல்ல விதியின் பரிசளிப்பு. ஐயோ! எவ்வளவோ ஆசை வைத்திருந்தேனே இப்படி ஆகிவிட்டதே என்று நீ பிரலாபித்துப் பயனில்லை. அப்படித்தான் ஆகுமென்று நீ பிறக்கும்போது எழுதப்பட்டிருக்கிறது.

‘‘மணவைப்பிரியன்’’ ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: