தலைமை தேர்தல் அதிகாரி நேற்று முன்தினம் அறிவித்ததைவிட 3 சதவீதம் குறைந்தது தமிழகத்தில் 69.94% வாக்குகளே பதிவானதாக அறிவிப்பு

* அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48%, குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91%

சென்னை: தமிழகத்தில் இறுதியாக 69.94 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதாக நேற்று அதிகாலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 81.48 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தமிழகத்தில் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவித்து இருந்ததைவிட 3 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகள், விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் புதுச்சேரி மக்களவை தொகுதிகளில் நேற்று முன்தினம் முதல்கட்ட தேர்தல் நடந்தது. குறிப்பாக நேற்று முன்தினம் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெயில் 100 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் காலை 6.30 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் வாக்குகளை செலுத்தினர்.

மதியம் வெயில் அதிகமாக இருந்ததால் சில மையங்களில் வாக்குப்பதிவு மந்தமானது. பிறகு 3 மணியில் இருந்து மாலை 6 மணி வரை அதிகம் பேர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்ததாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார். மாலை 6 மணிக்குள் வந்த அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். சில இடங்களில் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. 6 மணிக்கு மேல் மையத்திற்கு வந்தவர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.

தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்ததும், 39 தொகுதிகளில் வெளியான வாக்குப்பதிவு சதவீதம் எவ்வளவு என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார். அதன்படி தமிழகத்தில் மொத்தம் 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். கள்ளக்குறிச்சியில் அதிகப்பட்சமாக 75.67 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35 சதவீதம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

ஆனாலும் நேற்று (20ம் தேதி) மதியம் 12 மணிக்கு மேல் இறுதி வாக்குப்பதிவு சதவீதம் எவ்வளவு என்பதை அறிவிப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று முன்தினம் இரவு அறிவித்தார். இந்நிலையில், நேற்று அதிகாலை 12.15 மணிக்கு தமிழகத்தில் பதிவான வாக்குப்பதிவு சதவீத விவரங்கள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் தமிழகத்தில் இறுதி வாக்குப்பதிவு 69.94 சதவீதம் என தெரிவிக்கப்பட்டது.

இது நேற்று முன்தினம் இரவு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்ததைவிட 3 சதவீதம் குறைவு. வழக்கமாக தேர்தல் அன்று பதிவான வாக்குகளைவிட அடுத்தநாள் இறுதி நிலவரம் அறிவிக்கப்படுவது வழக்கம். அப்போது 1 அல்லது 2 சதவீதம் வாக்குகள் அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும். ஆனால், தற்போது 3 சதவீதம் குறைவாக காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி, தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 81.48 சதவீத வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91 சதவீத வாக்கும் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது பல்வேறு குளறுபடிகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 72.44 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது குறி்பிடத்தக்கது. தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதம் குறித்து நேற்று காலை 11 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், பத்திரிகையாளர் சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது. பின்னர் மதியம் 12 மணி, மாலை 3 மணி என தொடர்ச்சியாக சந்திப்பதாக கூறியும் அவர் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* 23 தொகுதிகளில் 3-6 சதவீதம் குறைவாக வாக்குப்பதிவு
விருதுநகரில் கடந்த 2019 மக்களவை தேர்தலில் 72.41 சதவீதம் பதிவான நிலையில் இந்த முறை 70.17 சதவீதமும், சிதம்பரத்தில் 77.91லிருந்து 75.32ஆகவும், பெரம்பலூரில் 79.23லிருந்து 77.37 ஆகவும், திருச்சியில் 69.46லிருந்து 67.45ஆகவும், நாமக்கலில் 80.2லிருந்து 78.16 ஆகவும், ஸ்ரீபெரும்புதூரில் 62.43லிருந்து 60.21 ஆகவும், கரூரில் 79.52லிருந்து 78.61 ஆகவும், பொள்ளாச்சியில் 71.15லிருந்து 70.70 ஆகவும், தர்மபுரியில் 82.33லிருந்து 81.48 ஆகவும், ராமநாதபுரத்தில் 68.35லிருந்து 68.18ஆகவும் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. இவை தவிர மற்ற 23 தொதிகளில் வாக்குப்பதிவு 3-6 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளது.

* 5 தொகுதிகளில் மட்டுமே வாக்கு சதவீதம் அதிகரிப்பு
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலை ஒப்பிடும் போது இந்த முறை வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கோவை ஆகிய தொகுதிகளில் மட்டுமே வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. வேலூரில் 2019ல் 71.32 சதவீதம் பதிவான நிலையில் இந்த முறை 73.42 சதவீதமும், விழுப்புரத்தில் 74.56லிருந்து 76.47 ஆகவும், கள்ளக்குறிச்சியில் 78.77லிருந்து 79.25 ஆகவும், சேலத்தில் 74.56லிருந்து 76.47 ஆகவும், கோவையில் 63.86 லிருந்து 76.47 ஆகவும் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

தேர்தல் ஆணையம் குளறுபடி
* தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் தொகுதி வாரியாக நேற்று முன்தினம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்த பிறகு இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்ட வாக்கு சதவீதத்தில் பெரிய அளவில் வேறுபாடு இருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

* வடசென்னையில் முதலில் அறிவித்ததைவிட 9.13 சதவீதம், ஸ்ரீபெரும்புதூரில் 9.58 சதவீதம், திருநெல்வேலியில் 6.36 சதவீதம், கோவையில் 6.36 சதவீதம், கன்னியாகுமரியில் 4.69 சதவீதம், திருச்சியில் 3.79 சதவீதம், சிவகங்கையில் 7.11 சதவீதம், மதுரையில் 7.06 சதவீதம் வாக்குகளை தேர்தல் ஆணையம் குறைத்து அறிவித்துள்ளது.

* தென்சென்னை தொகுதியில் முதலில் அறிவிக்கப்பட்டதை விட 13.55 சதவீதம் வாக்குகளை குறைத்து அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்.

* மத்திய சென்னையில் முதலில் அறிவித்ததைவிட 13.44 சதவீதம் குறைத்தும், தூத்துக்குடியில் முதலில் அறிவித்ததைவிட 10.97 சதவீதம் குறைத்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தலைமை தேர்தல் அதிகாரி நேற்று முன்தினம் அறிவித்ததைவிட 3 சதவீதம் குறைந்தது தமிழகத்தில் 69.94% வாக்குகளே பதிவானதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: