திருப்புகழில் தெய்வங்கள்

‘வாக்கிற்கு அருணகிரி’ என்று புலவர் பெருமக்களாலேயே புகழப் படும் அரிய சிறப்பிற்கு உரியவர் அருணகிரிநாதர். ‘அதலசேடனார் ஆட’ என்று தொடங்கும் திருப்புகழில்;
‘பிரபுடதேவ மாராயர்’ என்ற விஜயநகரப் பேரரசரின் பெயர் வருவதால் அம்மன்னர் ஆட்சி செய்த பதினான்காம் நூற்றாண்டே அருணகிரியார் இப்பூலகில் வாழ்ந்த காலம் என ஆய்வாளர்கள் முடிவு செய்கின்றனர். அருணகிரியார் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த சம்பந்தாண்டான் என்பவர் ‘அருணகிரி பாடும் ஆறுமுகனை அவரால் அவை நடுவே பலரும் காண வரவழைக்க முடியுமா? நான் தேவி பக்தன்! என் தமிழக்கு தாயே இரங்கி வந்து தரிசனம் தருகிறாள்! அப்படி அவரால் முருகப் பெருமானை முன்தோன்றச் செய்யமுடியுமா? என்று வாதிட்டான்! அருணகிரியார் அப்போது பாடிய பாடல் அர்த்தச் செறிவுமிக்க அற்புதகீதம்!

“அதல சேடனார் ஆட அகிலமேரு மீதாட
அபின காளி தானாட அவளோடு அன்று
அதிரவீசு வாதாடும் விடையில் ஏறுவார் ஆட
அருகு பூத வேதாளம் அவை ஆட
மதுர வாணி தான்ஆட மலரில் வேதனார் ஆட
மருவு வான்உளோர் ஆட மதி ஆட
வனச மாமியார் ஆட நெடிய மாமனார் ஆட
மயிலும் ஆடி நீயும் ஆடி வரவேணும்!

கதைவிடாத தோள் வீமன் எதிர்கொள் வாளியால் நீடு
கருதலார்கள் மாசேனை பொடியாகக்
கதறு காலிபோய் மீள விஜயன் ஏறு தேர்மீது
கனகவேத கோடுஓதி அலைமோதும்
உததி மீதிலே சாயும் உலகம் ஊடு சீர்பாத
உவணம் ஊர்தி மாமாயன் மருதோனே!
உதயதாம மார்பான பிரபுடதேவ மா ராஜர்
வளமும் ஆடை வாழ் தேவர் பெருமானே!’’

மேற்கண்ட பாடலிலேயே அருணகிரியாரின் மேதா விலாசத்தையும், பல தெய்வங்களைக் குறிப்பிட்டு மகிழும் பாங்கையும், அவரின் வழிபடு கடவுளான வடிவேலனின் கீர்த்தியையும் கண்டு மகிழலாம். ‘திருப்புகழ்’ என்றவுடனேயே பலர் அந்த நூல் திருமுருப் பெருமானை மட்டுமே போற்றிப் பாடிய புனிதப் பனுவல் என்று மட்டுமே புரிந்து வைத்திருக்கிறார்கள். ‘பரம பதிவிரதா பக்தி’ என்னும் சீரிய நெறியிலே நிலை நின்று, முப்போதும் முருகவேளையே சிந்தித்தும், வந்தித்தும், ஏன், தன் சிறந்த பக்தியால் சந்தித்தும் மகிழ்ந்த மேலான பெருமைக் குரியவர்தான் அருணகிரியார். அப்படி இருந்த போதிலும், அவர் தன் பாடல்களில் முருகப் பெருமானை வழிபடும் முறையே அலாதியாகவும், அதி அற்புதமான சமரச பாவமாகவும் விளங்குகிறது.

மன்னர் அவையிலேயே மக்கள் முன்னிலையிலேயே ‘மயிலும் ஆடி நீயும் ஆடி வரவேணும்’ என்று வேலவனுக்கு வேண்டுகோள் விடுத்த மேற்கண்ட திருப்புகழிலேயே ஆதிசேஷன், காளிதேவி, ரிஷபவாகனரான சிவன், பூதவேதாளங்கள், சரஸ்வதி தேவி, பிரம்ம தேவர், தேவ கணங்கள், சந்திர பகவான், லட்சுமி தேவி (வனசமாமியார்) விஸ்வரூப விஷ்ணு (நெடிய மாமனார் அர்ஜூனன், பார்த்த சாரதிப் பெருமாள், உலகளந்த பெருமாள், கருடவாகனர் என பல்வேறு மூர்த்திகளின் பெருமை பரக்கப் பேசப்படுவது அருணகிரியாரின் பரந்த மனப்பான்மையைப் பறைசாற்றுகிறது அல்லவா!)

‘கந்தர் அனுபூதி பெற்றுக்
கந்தர் அனுபூசி சொன்ன
எந்தை அருள் நாடி
இருக்கும் நாள் எந்நாளோ?’
– என்று தாயுமானவர் அருணகிரியாரைப் போற்றிக் கொண்டாடிப் புகழ்கின்றார்.

கந்தர் அனுபூதி பெற்ற வந்தனைக்குரிய வாக்கிற்கு அருணகிரி வடிவேலனை வழிபடும் முறையே புதுமையானது. விநாயகரின் பெருமையை விரிவாகக் கூறுவார். அவருக்கு படைக்கப்படும் நிவேதனங்களின் பட்டியலை தன் பாட்டு இயலிலேயே நிரல்படக்கூறுவார்.

‘இக்கு, அவரை, நற்கனிகள்
சர்க்கரை பருப்புடன் நெய்
எள், பொரி, அவல், துவரை
வண்டெச்சில், பயறு, அப்பவகை!’
குட்டும், தோப்புக் கரணமும் அவருக்கே
உரிய விசேஷ வழிபாடு!
‘வளர்கை குழைபிடி
தொப்பண குட்டொடு
வணசபரிபுர பொற்று
அர்ச்சனை மறவேனேஃ’
மேற்படி கணபதியைப் பாடி (இவ்வாறு சிறப்பு பெற்ற பிள்ளையாரின் தம்பியே! எனதம் திருப்புகழை முருகன் புகழில் முடிச்சுப் போட்டு முடித்து வைப்பார்!) மேற்சொன்ன முறையிலேயே சிவபெருமானை;

‘திரிபுரமும், மதன்உடலும் நீறு கண்டவன்
தருண மழ விடையன்! நடராஜன்!
எங்கணும் திகழ் அருணகிரி சொரூபன்!
ஆதி அந்தம் அங்கு அறியாத
சிவயநம நமசிவய காரணன்!’
என்று துதித்து, ‘அப்படிப்பட்ட
சிவபிரானுக்கே பிரணவ உபதேசம் செய்த பிள்ளையே! என கந்தனின் காலடிகளிலே விழுவார். ‘அம்பிகையிடமிருந்து அற்புத ஆயுதமான வேலைப் பெற்ற வீரனே’ எனப் பாடுகையில் நாயகியின் நாமாவளியை அருள் மழையாகப் பொழிவார்.

`குமரி, காளி, வராகி, மகேஸ்வரி
கவுரி, மோடி, சுராரி நிராபள
கொடிய சூலி, சுடாரணி, யாமஸி மகாயி.’

கணபதி, சிவபிரான், அம்பிகை துதிகளைப் போலவே திருமால், முருகன் ஆன திருமுருகனை வணங்குகையில், விஷ்ணுவின் தசாவதாரங்களையும் விரிவாகக் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர். திருமுருகனே அடி எடுத்துக் கொடுத்த முதற்பாட்டிலேயே ராமாயணம், மகாபாரதம், பாகவதம் என மூன்று இதிகாசங்களின் நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றார்.சிவபிரானின் மகன் என்று முருகப் பெருமானை அழைப்பதைக் காட்டிலும், திருமாலின் முருகன் என்று பேசுவதிலேயே பெரும் நிறைவடைகிறார் அருணகிரியார்.

‘சிகரகுடையினில் நிரைவர
இசைதெரி சதுரன் விதுரன் இல் வருபவன்!
அளையது திருடி அடிபடு சிறியவன்
நெடியவன் மது சூதன்
தொனித்த நா வேய் ஊதும்
சகஸ்ராம கோபாலன்’

ஐயப்பனை, `கரிபரிமேல் ஏறுவான்’ என்றும் ‘மிடல் இறைவிறல் ஹரிவிமலர்கள் தருசுதன்’ என்று துதிக்கின்றார். கதிர்காமத்திருப்புகழில் ஆஞ்சநேயரின் சுந்தர காண்டச் சுருக்கத்தையே தந்து ‘குறிப்பில் குறிகாணும் மாருதி’ எனக் குறிப்பிடுகின்றார். கணபதி, சிவன், தேவி, விஷ்ணு, ஐயப்பன், ஆஞ்சநேயர் என ஆறுமூர்த்தியர் புகழோடு ஆறுமுக மூர்த்தியை ஐக்கியப்படுத்துகிறார் அருணை முனிவர். சமரச மெய்ஞானியாகத் திகழும் அருணகிரியாரின் சந்தத் திருப்புகழ் பாடி சந்ததமும் உயர்வோம்.

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

The post திருப்புகழில் தெய்வங்கள் appeared first on Dinakaran.

Related Stories: