ரஃபேல் விமானம் முதல் தேர்தல் பத்திரங்கள் வரை : பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் மெகா ஊழல்கள்!!

டெல்லி : ஊழலை ஒழிக்கப்போவதாக சொல்லி ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் ரஃபேல் தொடங்கி தேர்தல் பத்திரங்கள் வரை ஏராளமான ஊழல்களை எதிர்க்கட்சிகள் பட்டியலிடுகின்றன. ஒன்றிய அரசின் அமைப்பான சிஏஜி, மோடி ஆட்சியில் ரூ.7.5 லட்சம் கோடி அளவிற்கு ஊழல் நடந்து இருப்பதை அம்பலப்படுத்தியது. பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் கொரோனா காலத்தில் திரட்டிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி எங்கே போனது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றன. இண்டியா கூட்டணி ஆட்சி அமைத்ததும் மோடி ஆட்சியில் நடந்த ஊழல்கள் அனைத்தும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் பின்வருமாறு…

*2015ம் ஆண்டில் பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்ட போது, இந்திய விமானப்படையின் மேம்பாட்டிற்காக ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. ரூ.1670 கோடி விலையில் 36 ரஃபேல் விமானங்களை ரூ. 59,000 கோடிக்கு வாங்குவதற்கான ஒப்பந்தம் அது.

*ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கட்டுப்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பாரத்மாலா திட்டத்தின் கீழ் வழங்கிய நெடுஞ்சாலை ஒப்பந்தங்களில் அதிக அளவிலான முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக சிஏஜி தெரிவித்துள்ளது.

*ஆய்வு செய்யப்பட்ட 5 சுங்கச்சாவடிகளில் மட்டும் வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.132 கோடி கூடுதல் தொகைவசூலிக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் ஆய்வு நடத்தபடவில்லை.

*ஏழை, எளிய மக்களுக்கானது என அறிவித்து ஒன்றிய அரசு 2018ம் ஆண்டு தொடங்கிய திட்டம் தான் ஆயுஷ்மான் பாரத். இந்த திட்டத்தின் ஒரு பகுதியான பிரதம மந்திரியின் ஜன் ஆரோக்யா யோஜனா திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.

*ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் அயோத்தி மேம்பாட்டு திட்டத்திலும் ரூ. 19.73 கோடி அளவில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சிஏஜி குறிப்பிட்டுள்ளது.

* கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் ஓய்வூதிய திட்டத்திற்கான நிதி விளம்பரங்களுக்காக செயல்படுத்தப்பட்டுள்ளதும் சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளது. அடல் பென்சன் யோஜனா திட்டத்தை விளம்பரப்படுத்த 19 மாநிலங்களில் தலா 5 விளம்பர பலகைகள் வைப்பதற்காக ரூ.2.44 கோடி ஓய்வூதிய திட்ட நிதியில் இருந்து செலவிடப்பட்டுள்ளதும் வெளிவந்துள்ளது.

*ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் தவறான திட்ட வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் தாமதம் உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ.159 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சிஏஜி அறிக்கை கூறுகிறது.

*ஒன்றிய அரசால் மிகப்பெரும் விளம்பரத்துடன் தொடங்கப்பட்ட உதான் என்ற விமான சேவை திட்டம் படுதோல்வி அடைந்துள்ளது. இதிலும் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

*அமித்ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒன்றிய உள்துறை அமைச்சகத்தில் அதிகமான ஊழல் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக ஒன்றிய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

*பிஎம் கேர்ஸ் என்ற பெயரில் கொரோனா காலத்தில் திரட்டிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி என்ன ஆனது என்பதே தெரியாமல் ரகசியம் காக்கப்படுகிறது.

*எல்லாவற்றின் உச்சமாக மோடி ஆட்சியின் நிறைவு கட்டத்தில் பாஜகவின் மெகா ஊழலை அம்பலப்படுத்தியது தேர்தல் பத்திரங்கள். மொத்த தேர்தல் பத்திர விற்பனையில் பாதிக்கு மேற்பட்ட நிதி பாஜகவிற்கு மட்டுமே சென்றுள்ளது பாஜக கட்சியின் மோசடி அரசியலை வெளிப்படுத்தியது.

The post ரஃபேல் விமானம் முதல் தேர்தல் பத்திரங்கள் வரை : பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் மெகா ஊழல்கள்!! appeared first on Dinakaran.

Related Stories: