அண்ணாமலை சவாலை ஏற்ற எடப்பாடி இன்று ரோடு ஷோ: மோடிக்கு வந்ததை விட அதிக கூட்டத்தை காட்ட திட்டம்

தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் வருகிற 19ம்தேதி தேர்தல் நடக்கிறது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று ரோடுஷோ போக திட்டமிட்டுள்ளார். சமீபத்தில் கோவையில் பேட்டியளித்த பாஜ தலைவர் அண்ணாமலை, ’எடப்பாடி பழனிசாமியை ரோடு ஷோ போகச்சொல்லுங்கள். எவ்வளவு பேர் வருகிறார்கள் என்று பார்ப்போம். அவர் வீதியில் வந்தால் பார்க்க யாரும் தயாராக இல்லை’ என சவால் விடுத்தார். இந்த சவாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டுள்ளார்.

கடைசி நாளான இன்று அவர் சேலத்தில் ரோடுஷோ போகிறார். பிற்பகல் 3 மணிக்கு அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து திறந்த வாகனத்தில் புறப்பட்டு, முள்ளுவாடிகேட், திருவள்ளவர் சிலை, முதல்அக்ரஹாரம், ராஜகணபதி கோயில், சின்னக்கடைவீதி வழியாக டவுன் போலீஸ் ஸ்டேசன் பகுதிக்கு வந்து பிரசாரத்தை முடித்துக் கொள்கிறார். இந்த ரோடுஷோவில் பிரதமர் மோடிக்கு வந்த கூட்டத்தை விட அதிகளவில் தொண்டர்களை இறக்க அதிமுக மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் முடிவு செய்துள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு பூ தூவி வரவேற்கவும் முடிவு செய்துள்ளனர். இதன்மூலம் அண்ணாமலை சவாலை எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொண்டு பலத்தை நிரூபிக்க முடிவு செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* பதவிக்காக கூட்டணி 5வது இடத்துக்கு போயிடுச்சி பாமக… அன்புமணியை சீண்டிய எடப்பாடி
தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் டாக்டர் அசோகன் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு சேகரித்து மேச்சேரியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பேசியதாவது: இதற்கு முன்பு நமது கூட்டணியில் இருந்த பாமக 2வது இடத்தில் இருந்தது. பாஜ கூட்டணியில் இப்போது 5வது இடத்திற்கு போய்விட்டது. 2019ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நமது தலைமையிலான கூட்டணியில் 2வது இடத்தில் பாமகவும், 3வது இடத்தில் பாஜவும் இருந்தது. அன்புமணி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த காலத்தில் இந்த பகுதிக்கு ஏதாவது செய்திருக்கிறாரா? நாடாளுமன்றத்தில் தமிழக மக்கள் பயன்பெறும் வகையில் ஏதாவது பேசி இருக்கிறாரா? இப்ேபாது பாஜவுடன் கூட்டணி வைத்து என்ன செய்யப்போகிறார்? நீங்கள் எல்லாம் அவர்களிடம் அடிமையாக இருக்கப்பார்க்கிறீர்கள். நாங்கள் அப்படி அல்ல. எங்களுக்கு ஆட்சி, அதிகாரம் தேவையில்லை. மக்கள்தான் தேவை.

பாமக பதவிக்காக கூட்டணி வைத்துள்ளது. அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி கூட்டணியை மாற்றிக் கொண்டே இருப்பார் அன்புமணி. அதிமுகவுக்கு வாக்களிப்பதால் எந்த பயனும் இல்லை என்று கூறுகிறார். இந்தநிமிடம் வரை அவர் எம்பியாக இருப்பதற்கு அதிமுக போட்ட ஓட்டுதான் காரணம் என்பதை மறந்துவிட்டார். சமீபத்தில் கடலூரில் பேசிய அன்புமணி உள்ளூர் வேட்பாளர்களை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் அவர்கள் உங்களுக்குத் தேவையான நன்மைகளை செய்வார்கள் என்று கூறியுள்ளார். அதையேதான் நானும் சொல்கிறேன். தர்மபுரியில் உள்ளூர் வேட்பாளராக போட்டியிடும் டாக்டர் அசோகனுக்கு வாக்களியுங்கள். இந்த தொகுதியில் போட்டியிடும் வெளியூர்காரர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள். உள்ளூர்காரர்தான் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து உங்களுக்கு உதவி செய்வார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

The post அண்ணாமலை சவாலை ஏற்ற எடப்பாடி இன்று ரோடு ஷோ: மோடிக்கு வந்ததை விட அதிக கூட்டத்தை காட்ட திட்டம் appeared first on Dinakaran.

Related Stories: