தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது * அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம் * அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில்

திருவண்ணாமலை, ஏப்.16: திருவண்ணாமலை மாவட்டத்தில், தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் முடிவடைகிறது. அதையொட்டி, வேட்பாளர்கள் இறுதிகட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால், தேர்தல் களம் அனல் பறக்கிறது. மக்களவைத் தேர்தல் அறிவிப்பு கடந்த மாதம் 16ம் தேதி வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, கடந்த மாதம் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன. வேட்பாளர் இறுதிபட்டியல் கடந்த 30ம் தேதி வெளியானது. அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியதில் இருந்தே, தேர்தல் பிரசாரம் அனல் பறக்க தொடங்கியது. சுட்டெரிக்கும் கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில், 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனாலும், திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரை, அதிமுக வேட்பாளர் எம்.கலியெபருமாள், பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமன் ஆகிேயாருக்கு இடையேதான் மும்முனைப்போட்டி உள்ளது.

அதேபோல், ஆரணி மக்களவைத் தொகுதியில் 29 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனாலும், திமுக வேட்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், அதிமுக வேட்பாளர் ஜி.வி.கஜேந்திரன், பாமக வேட்பாளர் அ.கணேஷ்குமார் ஆகியோருக்கு இடையேதான் மும்முனைப் போட்டி உள்ளது. மேலும், திருவண்ணாமலை மற்றும் ஆரணி மக்களவைத் தொகுதிகளில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுடைய கட்சி வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தனர்.

எனவே, கடந்த 20 நாட்களாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுக்கூட்டம், வேன் பிரசாரம் என தேர்தல் களம் அனல் பறந்தது. வேட்பாளர்கள் நேரடியாக செல்ல முடியாத பகுதிகளில், அவர்களுடைய கட்சி நிர்வாகிகள் வீடு வீடாக சென்று ஆதரவு திரட்டி வருகின்றனர். இந்த தேர்தலில், சுயேட்சைகளின் வாக்கு சேகரிப்பு குறிப்பிடும்படியாக வாக்களர்களின் கவனத்தை ஈர்க்கவில்லை. அதேபோல், இந்த தேர்தலில் சுவர் விளம்பரங்கள் வெகுவாக குறைந்துள்ளது. அதேேநரத்தில், சமூக வலைதளங்கள் மூலமாக பிரசாரம் செய்வது அதிகரித்திருக்கிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தல் பிரசாரத்துக்கான அவகாசம் நாளை (17ம் தேதி) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. அதையொட்டி, அரசியல் கட்சியினரும், வேட்பாளர்களும் தங்களுடைய இறுதிகட்ட தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இறுதி கட்ட தேர்தல் பிரசாரத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மற்றும் ஆரணி தொகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை மாலை 6 மணிக்கு பிறகு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

The post தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது * அனல் பறக்கும் இறுதிகட்ட பிரசாரம் * அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Related Stories: